புத்தக மதிப்புரை : அம்மாவின் ரத்தம்
- நூலின் பெயர் : அம்மாவின் ரத்தம்
- நூலின் ஆசிரியர் : கவிஞர் பெ.அன்பு
- மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் : அம்மாவின் ரத்தம்நூலின் ஆசிரியர் : கவிஞர் பெ.அன்புமதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்பட ஓவியம் வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் பெ.அன்பு ஓவியர் என்பதால் மிகச்சிறப்பான ஓவியத்தை வரைந்து உள்ளார். ஓவியர் கவிஞராக இருப்பதால் கவிதைகளில் ஓவியமாகவும், ஓவியத்தில் கவிதையாகவும் படைத்து உள்ளார்.
புரியாத கவிதைகள் நூலில் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும். நூலாசிரியர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். குன்றத்து விளக்காக ஒளிர்கின்றது கலைத்திறமை. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலர்களில் ஒருவர் என்பதால், இலக்கியத்தை கலையாக,கலையை இலக்கியமாக வடித்துள்ளார்.கலை என்பது மக்களுக்காகத் தான், மக்களின் வாழ்க்கை அடங்கிய கவிதை நூல்.
கவிதை என்பது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் நூலில் பல அதிர்வுகள் உள்ளது. கவிதையைத் திரும்ப படிக்கும் போது நன்கு விளங்குகின்றது.
போகிற போக்கில் ஒரு சொல் எறித்து போகிறார்கள் மனிதர்கள் மனசின் அலம்பல் நிற்க வெகுநேரம் பிடிக்கிறது.
இக்கவிதை படிக்கும் போது எல்லோரது வாழ்விலும் நடந்த நிகழ்வு தான், மிகவும் கஷ்டப்பட்டு, திட்டமிட்டு, முயற்சி செய்து, ஒரு செயலை செய்து இருப்போம். அதைப் பார்த்தவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை,குறைத்து மதிப்பிட்டு கேலி பேசுவார்கள். அவர்கள் பேசிய கேலி நம் மனதில் சில அலம்பல் ஏற்படுத்தும் உண்மை தான். நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,தொடர்ந்து இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டும்.
தலைவணங்குகிறோம்,கீழ்படிகிறோம்,ஆட்டம் போடுகிறோம், சோரம் போகிறோம்,தலை வருடுகிறோம்,கால் நக்குகிறோம், முழங்கை சொறிகிறோம்,பச்சையாய் சிரிக்கின்றோம், ஆனந்தமாய் அழுகிறோம்,கோபத்தோடு அறைகிறோம், வாலைக் குழைத்து ஆட்டுகிறோம், எந்த தேவைக்கும் இணங்கி எவர் மனசாட்சியைக் கொன்றும் வாழ்ந்து காட்டுகிறோம் ஆசை தீர.
இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் வாழ்கிறோம். வெகுசிலர் தான் தன் சுயத்தில் வாழ்கிறார்கள். மனசாட்சிப்படி நிறையப் பாராட்டி,குறையைச் சுட்டி, சுயமரியாதையுடன், நடிப்பு இன்றி, இயல்பாக,உலகப் பொதுமறை படைத்த வள்ளுவரின் கூற்றுப்படி வாழ்வாங்கு வாழும் இலட்சிய மனிதர்கள் உண்டு. வெகு சிலராக உள்ள இப்படிப்பட்ட மனிதர்கள் பலராகப் பல்கிப் பெருகும் போது நாடு நலம் பெறும்.
உடைந்த பேனாவில் நிரப்பப்பட்டஉன் நினைவுகள் பதிவாகாமலேயேமேசையில் தங்கி விட்டன
இப்படி காதலி பற்றிய நினைவையும் கவிதையாக்கி உள்ளார்.
பறவைகளில் மிதந்து வருகின்றன காடுகள்விலங்குகளின் மீதேறி வந்து முளை விடுகின்றன மரங்கள்காடுகள் மலைகள் கடல்கள் மரங்கள் எனமனிதனுக்குக் கொடுப்பினை அதிகம்மலையேறி ஒருவன் சொன்னது போலஎன்னையும் எரிக்காதீர்கள் புதையுங்கள்.
இந்த கவிதையின் மூலம் கவிஞரின் இயற்கை ஆர்வம் புலப்படுகின்றது. பறவைகளின் எச்சங்களால் தான் பல காடுகள் உருவானது என்பதை உணர்த்துகின்றது. இன்றைய கணிப்பொறி யுகத்தில் மனிதனை எரிக்கவும் வேண்டாம், புதைக்கவும் வேண்டாம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வழங்குங்கள். சமீபத்தில் மறைந்த, 23 வருடங்கள் மாநில முதல்வராக இருந்த முதல் மனிதர் ஜோதிபாசு அவர்களின் விருப்பப்படி அவர் உடலை மருத்துவக்கல்லூரிக்கு வழங்கியதைப் போல பலரும் வழங்கிட முன் வர வேண்டும்.
எளிய வார்த்தைகள் காத்திருக்கின்றனஅவை தம் இலக்கை அடையஎன்னிடம் வந்து போக்கு காட்டுகின்றனஒரு குழந்தையின் இதயத்திலிருந்துஓரு சொல்லை வாங்கித் தாருங்கள்நான் ஒரு கவிதைநிச்சயம் உங்களுக்குத் தருவேன்
துரோணமும் துரோகமுற்றுகட்டை விரல் இப்போதுவேகவேகமாய் வளர்ந்தெழுகிறது இப்போதுமுள்ளதன் சுயத்தோடு
இக்கவிதை ஏகலைவன் துரோணாச்சாரியாரின் நேரடி உதவியின்றி பாhர்வையால் கற்றான் வில்வித்தை. அம்பை எய்திட அவசியம் தேவை கட்டை விரல்,அதையே காணிக்கையாக கேட்ட துரோணர் செய்தது துரோகம். அன்று மறுக்கப்பட்ட கல்வி தான் இன்று கல்வி புரட்சியாக வளர்ந்தது தந்தை பெரியார்,கர்மவீரர் காமராசர் உழைப்பால்.
இது போன்ற பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் விதமாக கவிதைகள் உள்ளது. படைப்பாளியின் உணர்வை படிக்கும் படிப்பாளியும் உணரும் வகையில் உள்ளது கவிதைகள். நூலில் கவிதைகளுக்கு இடையே வித்தியாசமான நவீன ஓவியங்கள் சொல்லும் கவிதைகள் ரசிக்க வைக்கின்றது.வருங்காலங்களில் தேர்ந்தெடுத்த கவிதைகளை மட்டும் நூலாக்குங்கள்.
அம்மாவின் ரத்தம் என்ற நூல், கவிஞர் பெ.அன்புவின் இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தும் இதழாக வந்துள்ளது. முதல் கவிதைத் தொகுதியிலேயே தனி முத்திரை பதித்துள்ள கவிஞருக்குப் பாராட்டுக்கள்.












