கருத்துக்கள்

இந்த தளம் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

இந்த தள மேம்பாடு குறித்து கருத்துக்களை தொடர்பு பக்கத்தில் பதிவு செய்யவும்.

*11 மறுமொழிகள் - “கருத்துக்கள்”

  1. 1 On June 6th, 2010, r.ravi said:

    நூலின் பெயர் : கவிதை அல்ல விதை,நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி

    நூல் விமர்சனம்: ரா.பரிமளாதேவி

    என்னுரையில் எழுதியிருக்கும் கவிஞரின் வரிகள் “கவிதைகளை வாசியுங்கள் உங்கள் சிந்தனையில் சிறு பொறி தட்டினால் அது தான் இந்த நூலின் வெற்றி”

    இப்படி ஆரம்பித்திலேயே முத்தாய்ப்பான வரிகள் இந்நூலை மேலும் சிறப்பிக்கிறது.

    “உலகப் பொது மறை” எனும் கவிதையில் எல்லா சிறப்புகளையும் உள்ளடங்கியது. திருக்குறள் என்பதை ஒரு வரியில் இப்படிச் சொல்கிறார் நம் கவிஞர்.

    “குறளுக்கு இணையான நூல் வேறில்லை “என்று மேலும்” தமிழின் இமயம் திருவள்ளுவர் ” என்று அவருக்கு நிகர் அவரே… என்று வான்புகழோடு சிறப்பிக்கிறார் கவிஞர்

    “தமிழா” என்ற கவிதை தமிழ் பகைவர்களை தவிடுபொடியாக்கிடுவோம். என்று தமிழனுக்கு வரவேண்டிய கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

    “பாரதி இன்று இருந்திருந்தால்” எனும் கவிதையில் மூடத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இவரே இன்னொரு பாரதியாகப் புறப்பட்டு விட்டாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

    “அன்றும் இன்றும்”
    காடுகளை அழித்து வீடுகளாய் உருமாறியதை சாடும் விதம் அருமை.

    “முக்காலமும் போற்றும் ஒரே முதல்வர் காமராசர்”

    “அன்னை தெரசா” எல்லோரும் பரிசு கொடுத்து கௌரவிப்பார்கள். நமது கவிஞர் மட்டும் பரிசுக்கு கௌரவம் கொடுத்துள்ளார். “தெரசாவிற்கு” பரிசு கொடுத்ததனால் இப்படி ஒரு கௌரவமாய் “பரிசிற்கு” வித்தியாசமான சிந்தனைதான்.

    “கண்ணதாசன்” கண்ணதாசனின் சிறப்புக்களைக் கவிதை வடித்த விதத்தில் நமது கவிஞரும் ஒரு “கவிச் சிற்பி” எனலாம்.

    “கல்யாணசுந்தரம்” சிறந்த எழுத்தின் வீச்சு என்பது உலகத்தின் எல்லை வரை சென்றடையும் என்பதற்கு (இவரை) இதை விட உதாரணம் வேறு வேண்டுமா? கவிஞரே……” சுரதா” தரணி உள்ளவரை தமிழ் மொழி இருக்கும். தமிழ் மொழி உள்ளவரை “சுரதா” புகழ் நிலைக்கும் என்ற வரிகள் தங்கத்தில் வைரம் பதித்தது போல் இருந்தது.”வல்லிக்கண்ணன்” உலகம் உள்ளவரை இலக்கியம் இருக்கும், இலக்கியம் உள்ளவரை இலக்கிய ஞானியின் புகழ் நிலைக்கும் இதைவிட சிறப்பிக்க வேறு வார்த்தைகள் இல்லை எனலாம்.

    “அப்துல்கலாம்” ஏவுகணைச் சிற்பியை ஏற்றமிகு வார்த்தைகளால் வாழ்த்திய விதம் அற்புதம்.

    “போதும்” தன்னம்பிக்கை இழந்தவர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள “சோகத்துக்கு முடிவுரை எழுதிடு தமிழா சுகராகத்துக்கு முன்னுரை எழுதிடு தமிழா” இந்த வரிகளைப் படித்தால் போதும்.

    “மொழி” ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்து விட்டாலும்,அவர்களின் “மொழிக்கு” நாம் இன்று வரை அடிமைகளாய் இருக்கிறோம்,என்பதை சுட்டி காட்டிய விதம் அருமை.

    “விழித்தெழு” வரதட்சனை, பெண் சிசு கொலை, பெண்ணடிமை, மூட நம்பிக்கை, இப்படி எல்லா வடிவங்களிலும் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கும் போது,பெண்களுக்காக பரிந்து பேசும் “ஆண்” என்பதை விட சக உயிரையும் மதிக்கும் மாண்பு கொண்டவர். நமது கவிஞர் என்பதில் பெருமிதமாக உள்ளது.

    “புதுயுகத் தமிழர்” இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்ற பாரதியின் வரிகளைப் பிரதிபலிப்பதைப் போல் நடந்தவை,நடந்தவைகாளக இருக்கட்டும்,இனி நடப்பகைவள் நன்மைகளாக அமையட்டும். என்ற “பிளாட்டின” வரிகள் மிகச் சிறப்பு.

    “கொள், கொல்லாதே” நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருக்கும் போது,கேளிக்கைகளும் முக்கியத்துவம் அளிக்கும் மக்கட்பதரை என்ன செய்வது? என்பது போல கவிஞரின் வரிகள் வெளிப்படுத்துகிறது. இப்படி ” அபிமான நடிகரின் புதுப்படம் அறிவிப்பு வந்தால் போதும்”

    ” மனிதா திருந்தி விடு” சாதிமதம் இப்படி எதுமில்லை என்பதை “பெரியார்” பாசையில் “உன்னையும்,என்னையும் உரித்தாலே வெங்காயம்” என்கிறார் நமது கவிஞர்.

    ” ஓ இளைஞனே” ஓடாத கடிகாரமும், உழைக்காத மனிதனும் இருந்து பயனில்லை, என சொல்லாமல் சொல்லும் கவிஞரின் வரிகளுக்கு வலிமை கூடுகிறது.

    “தாளம் வானொலி” கவிஞரின் (தாளத்தின்) ஊடகத்தின் சிறப்பை சிறப்பாய் சொல்லும் பாங்கு. நம் கவிஞருக்கு கை வந்த கலையோ?!

    “தமிழா உன் வலிமை நீ அறியவில்லை” தமிழனுக்குள் இருக்கும் உணர்வுகளை தட்டி, எழுப்பிக் கேட்கிறாரோ? நமது கவி உன் வலிமை நீ அறியவே இல்லையா? என.”மரம்” தாவரங்களே இவ்வையகத்தின் உயிர்நாடி என்பதை உயர்த்தி இப்படி ஒரு கேள்வியை நம் முன் வைக்கிறார்.மானிடனே நீ பெரிதா? மரம் பெரிதா? ” நிலவு” கவிஞருக்கு என்ன கோபமோ? பாவையரை பால் நிலாவுடன் ஒப்பிடக் கூடாதென்கிறார்.

    மகாகவி பாரதி” மகாகவிக்கு மகுடம் சூட்டியது கவிஞரின் உயர்வை (கா)கூட்டுகிறது.

    “பாரதி கனவு பொய்ந்தது” பெண்களுக்காக ஒரு ஆண் பரிந்து பேசுவது (எழுதுவது) மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    “பாரதிதாசன்” போர்முரசு,கவிப்பேரரசு,பாட்டுச்சித்தர் என்று “புரட்சிக்கவிஞரை” பாராட்டிய விதம் அற்புதம்.”நேதாஜி” சேர்ந்து இருந்த இந்தியனுக்கு ” சுறுசுறுப்பையும், சுயமரியாதையையும் சொல்லித்தந்த “வங்கத்து சிங்கம் நீ” என்ற வரிகளும் இறந்துவிட்டாய் என்றும்,இருக்கின்றாய் என்றும் இறப்பில்லை என்பதை உணராதவர்கள் எனும் வரிகள் இந்தியர்கள் சுறுசுறுப்பையும் சுயமரியாதையையும் இழக்கமாட்டார்கள்.

    தலைவனைப்போல் தொண்டர்களும் சரித்திரம் படைப்பார்கள்.

    அதற்கு இந்தக்கவிதை ஒரு நல்ல முன்னுதாரணம் மொத்தத்தில் மூளைச்சோம்பேறிகளை தட்டி எழுப்பிய விதம் அருமை.

    “பெரியார்” நீ உன் நண்பனைக்காட்டு நீ எப்படிப்பட்டவன் என்;று தெரிந்து கொள்கிறேன். என்று சொல்வார்கள். அதைப்போல் நமது கவிஞர் தேர்ந்தெடுத்த முன்னோடி’ நல்ல பகுத்தறிவாளர்.இவரின் அடியொற்றி வந்ததனால் தாங்களும்”மிகச்சிறப்பானவை” என்பதில் எந்ந ஐயமும் இல்லை எனலாம்.

    “காமராசர்” இறந்தபின்னும் வாழும் “மாமனிதர்” என்பதை ஒரு வரியில் முடித்து விட்டார் நமது கவிஞர்

  2. 2 On June 6th, 2010, r.ravi said:

    நூலின் பெயர் : என்னவள்,நூல் விமர்சனம்: கவிஞர் ரா.பரிமளாதேவி

    நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.ரவி

    வெள்ளைத்தாளை கல்வெட்டுக்களாய் சித்தரித்த கவிஞரின் ஓவிய வரிகளை தீட்டுவதற்கு தூரிகைதாம் என்ன தவம் செய்ததோ?

    ஓய்வறியா சிந்தனையில் உதித்திட்ட வார்த்தைகளுக்கு வசந்தம் வந்து விட்டதோ?!

    இப்படிக் கவிதைப் பூக்களை(பாக்களாய்) பூப்பதற்கு வார்த்தைகளை எளிமையாக்கி,வாசிப்பாளனை கனமாக சிந்திக்க செய்கிறது. இவரது கவிப்பூக்கள்.

    காதலின் வெற்றியே இது தான் தனது துணையின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதை சிறப்பிக்கிறார் கவிஞர் இப்படி.

    “உன் மகிழ்ச்சி பாதிக்குமென்றால் இணைப்பை விட
    பிரிவே எனக்கு சம்மதம்” என்று.

    “பட்டாம்பூச்சி அழகா” எனும் கவிதையில் வாய்மொழி கூறும் அந்த வண்ணத்துப் பூச்சி தான் ( பெண்) என்ன தவனம் செய்ததோ! கவிஞரின் தீர்ப்பு சரி தான்.

    காதலில் தோற்றவர்களே அதிகம். அதிலும் தோல்வியாளர் பட்டியலில் சேர்த்தற்கு நன்றி என்கிறார். கவிஞரின் பார்வையில் தோல்வியும் சுகமோ….

    மறந்தால் தானே நினைப்பதற்கு. என்பதை மறைமுகமாக சொல்லும் விதம் அருமை.

    காதலில் கூட தேசப்பற்றுடன் இருக்கிறார். கவிஞர்
    “தினமும் என்னைப் பாராட்டு,நாடு செழிக்கட்டும் “என்கிறாரே…

    புரிந்ததும்,புரியாதது போல இருப்பது தானே காதலில் சுவராஸ்யம் என்கிறார் கவிஞர்

    தன் இணை எதற்கும் இணையில்லை என்பதை இப்படியும் சொல்லலாமோ..

    உள்ளத்தைப் போலவை உருவமும் பிரதிபலிக்கிறதோ?(அக) கண்ணாடியில்.

    உள்ளம் கவர்ந்தவளே உந்து சக்தியாக இருக்கும் போது சுறுப்பிற்குக் குறைவுண்டோ?

    “காதலியர் கடைக்கண்ணால் பார்த்து விட்டால்,மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்துவதைப் போல் உள்ளது. இக்கவிதை

    “காதலின் சக்தி வலிமையானது தானே”

    (மனதில்) இளமையும்,புதுமையும் கொண்டது தான் காதல். மேலும் இவ்வுலகில் காதல் மட்டுமே மாறாதது என்பதை கூறுகிறார் கவிஞர்.

    பாவையின் பார்வையில் வீழ்ந்து விபத்து உள்ளமான மனம் பஞ்சுத்தூவியினால் (சிறகு)ஆன உணர்வு ஏற்படுவது சகஜம் தானே…

    “காதலில் இழப்பு இல்லை. இனிய உணர்வு உண்டு” காதலின் மென்மையைச் சொல்ல இதைவிட வேறு வாத்தையும் வேண்டுமோ?

    தன் காதலியிடம் ஆயள் நீடிப்பதற்கு “நேச” மருந்து கேட்கும் காதல் நோயாளியாகிப் போனாரோ-காதலன்.

    “மணம்” புரியாவிட்டாலும்,”மனம்” புரிந்து கொண்டவர்கள் “நாம் இணையாததால் தான் இருவரும் இறுதி வரை நினைத்திருப்போமே” இப்படி சொல்கிறார் கவிஞர்.

    இதயத்தின் வாசல் கண்கள் தானே….இதற்கு விளக்கமும் தேவையயோ…

    மைனசை பிளஸாக மாற்றி யோசிக்கும் மரியாதைக்குரிய கவிஞர் தான் இவர்.

    காதலர் உலகதே தனி தானே உரியவரிடம் “உள்மன” உடையாடலில் ஈடுபட்ட காதலர் இப்படித் தான் சுற்றுச் சூழல் மறந்து தானாகப் பேசிக் கொள்வார் என்கிறார் கவிஞர்.

    காதலனின் நெஞ்சூஞ்சலில் சதா ஆடிக் கொண்டிருக்கும் அவள் நினைவுகள் அப்டினு சொல்லலாம் தானே.

    வருத்தத்தைக் கூட வசந்தமாக்கி வாழ்ந்து காட்டும் தன்னம்பிக்கை வரிகள் “எத்தனை முறை முயன்றும் கிடைக்கவி;ல்லை நீ எனக்கு. வருந்தவில்லை. நான் வசந்ததமாக்கினேன் வாழ்க்கையை” மிக அற்புதம்.

    பூவையர் பூச்சூடினாலே பூக்கள் பெருமை கொள்ளும். ஆதிலும் தன் தலைவியின் கூந்தல் ஏறியதால் பூக்கள் அத்தனை அழகு பெறுகிறது.

    இதயமெல்லாம் காதலியின் நினைவாக இருக்கும் போது,யாராவது அவளின் “திருநாமத்தை” உச்சரிக்கும் போது,உடனே கவனிப்பதில் வியப்பில்லை…….

    தலைவியிடம் தன்னை சமர்பித்தபின் அவனை அடையாளம் காட்ட அவள் ஒருத்தியினால் மட்டுமே முடியும் என்பதுதானே உண்மை.

    ஆம் ஏற்கனவே மனச் சட்டத்தில் அவளின் உருவம் மாற்றப்பட்டு விட்டதே… மீண்டும் எதற்கு.

    அகத்தையும்,புறத்தையும் அழகுபடுத்த அவள் ஒருத்தியினால் தானே முடியும்.

    “நீ எது பேசினாலும்,நீ பேசுவதே அழகு” என்று ஒரு ரசிகனாக மாறிய காதலனை அடைவதற்கு தலைவி செய்த தவம் என்னவோ… என்று வியக்க தோன்றுகிறது.

    நேசம் அதிகரிக்கும் போது தோல்வியும் சுகமே.

    “சகியும்” சமுதாயமும் ஒன்றாகவே தெரிகிறதோ!நம் கவிஞர்களுக்கு.
    காதல்ர்களுக்கு கற்றுத் தரும் புது வகை கணக்காக உள்ளதே…..

    “நினைவு முழுவதும் நீயாய் இருக்கும் போது நினைவுப் பரிசு எனக்கு எதற்கு? என்ற வரிகள் நினைவுகளை நினைவிழக்க செய்து விட்டதே..

    காதலை விட நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் நமது கவிஞரின் நட்பிற்கு நன்றிகள் பல…சொல்லலாம்.

    ஓரு பொய் உயிர் வளர்ந்து உண்மையாகி விடுமே…

    மொத்தத்தில் எல்லாவற்றிலும், ‘நீயே” என்கிறாரோ…

    எல்லாவற்றையும் உணர்ந்து பண்ண வேண்டும் வலியையும் சேர்த்து தான்.இன்பமும், துன்பமும் இரு கண்கள் அல்லவா?” வலியையும் வலிந்து கேட்கிறார் நம் கவிஞர்”

    காதலர்கள் தோற்றாலும், காதல் ஜெயிப்பது நிஜம் தானே…

    நிஜமாகவே அந்தத் தோழியை (கற்பனை) பார்க்கும் ஆவல் எழுகிறது.

  3. 3 On June 13th, 2010, r.ravi said:

    அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

    நூல் ஆசிரியர் : கவிஞர் கவிவாணன்

    நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

    நூலின் பெயரே இலக்கியத்தரமாக, கவித்துவமாக உள்ளது. கவிஞர் ஜீவி-யின் அணிந்துரை நூலின் சிறப்பைப் பறைசாற்றுகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் திண்டுக்கல் மாவட்ட தமுஎச-வின் மாவட்ட துணைச் செயலர், சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கி வருபவர், இளைஞர், பெயருக்கேற்றபடி கவிதை பொழிந்து வருபவர்.

    சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத கவிதை எழுதி வருகின்றனர். ஆனால் இவர் கவிதை வாசிக்கும் போது அனைவருக்கும் புரியும் எளிய நடை.”அம்மாவின் விருப்பம்” என்ற கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. ஆணாதிக்க சிந்தனையை நமது சமுதாயம் குழந்தை பருவத்திலேயே விதைத்து விடுகின்றது. ஆண் குழந்தைக்குதுப்பாக்கி பொம்மையும், பெண் குழந்தைக்கு சிட்டி பானை, பொம்மைகளும் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.

    இதோ ! கவிஞரின் சிந்தனை

    தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் “ஆம்பளைகளை இந்த வேளையைச் செய்யுறது என்று
    சொல்லிச் செல்பவளிடம் எப்படி சொல்வது
    வேலையில் ஆண் பெண் பேதமில்லையென்று”
    ஆண், பெண் சமத்துவத்தை இயல்பாக சொல்லி உள்ளார் புதுக்கவிதையில்.

    அன்பாக வளர்த்த மகளை மணமுடித்து கொடுத்து பின்பு மகளின் வருகைக்காக ஏங்கும் தாயின் பாசத்தை பதிவு செய்யும் கவிதை இதோ!

    வீட்டுக் கூரையில் காகம் கரையும் போது
    வீட்டுக் கதவை எவரோ தட்டும் போதும்
    தொலைபேசி மணி ஒலிக்கும் போதும்
    திருமணமாகிப் போன தன் மகளின் முகம் பார்க்க
    ஏக்கத்தோடு விரைகிறாள் அம்மா.

    இந்த நூலின் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது:

    வெட்டிய பிறகும்
    வேரில் மணம்
    கண்ணீர்

    குழந்தையின் அழுகை
    பேருந்து இறுக்கம்
    கசங்கிப் போனது மனசு

    இரவின் மடியில்
    இதமாய் இருக்கிறது
    இரயிலின் சன்னல் சுகம்

    நிழல் பரப்பிய மரம்
    குறைந்த அணில்கள்
    மண்தாமரை எங்கும் பூக்கள்

    நிறைய பேச
    நினைக்கின்றது மனசு
    பிரிவின் கணத்தில்

    நிசப்தம் உடைத்து
    பிறந்த வாசத்தோடு குழந்தை
    மலரெங்கும் கண்ணீர்

    ஓவ்வொரு ஹைக்கூ கவிதைகளும் சிந்தனையை விதைக்கின்றது. சொற்சிக்கனத்துடன் மிக நேர்த்தியாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்.
    இல்லத்தில் அம்மாவின் பணிச்சுமையை, அதனை மதிக்காத மகன்களின் அலட்சியத்தை உணர்த்திடும் புதுக்கவிதையை. இந்த புதுக்கவிதையை படித்த பின்பு, அம்மாவின் உழைப்பை, மனைவியின் உழைப்பை உணர்வார்கள் ஆண்கள் என்பது உண்மை !

    மகளின் திருமணத்திற்குப் பிறகு
    சுமை அதிகமாகிப் போனது
    அம்மாவிற்கு சமைத்தல், பரிமாறுதல், துவைத்தல்
    என எல்லா வேலைகளும்
    உதவியேதும் செய்யாமல்
    வேவைக்குச் செல்லும் அவசரத்தில்
    கடிந்து போகிற மகனை
    “பார்த்துப் போ” என்கிறார் அம்மா.

    இப்படி குடும்ப உறவின் மேன்மையை,பாசத்தை,உள்ளத்து உணர்வுகளை நயம்பட பதிவு செய்துள்ளார். கவிஞர் உணர்ந்த உணர்வை,வாசகனுக்கும் உணர்த்திடும் கவிதைகளின் தொகுப்பு.

    வாழ்க்கை முழுவதும் உழைத்துப் போட்ட அப்பாவும்
    வீட்டு மனிதராகப் போனார்
    இப்போது இரவு பகல் பாராது பாடுபடும்
    அம்மா மீது சுமைகளை ஏற்றி
    புகுந்த வீட்டுக்குப் போன பின்னும்
    நிறைமாத கர்ப்பிணியானாலும்
    பெற்றவளுக்குப் பணிவிடை செய்யும்
    ஏக்கத்தோடு ஒடி வருகிறாள் தங்கை.

    மணமான பின்னும் குடும்ப பாசத்துடன், நேசத்துடன் பெண் மகள் இருக்கிறாள் என்ற நடப்பு உண்மையைச் சொல்லி,நமக்குக் காட்சிப்படுத்தி பெண் இனத்தை பெருமைபடுத்துகின்றார்.

    இன்று கோடீஸ்வரர்கள் மேலும் கொடீஸ்வரர்கள் ஆகின்றனர். கோடித்துணியே காண முடியாத ஏழைகள்,வறுமையில் வாடுகின்றனர். இந்தியா,அக்கினி ஏவகனை ஒன்று இரண்டு ஏவி விட்டோம். மூன்று ஏவப் போகிறோம் என ஒருபுறம் மார்தட்டி கொண்டாலும்,மறுபுறம் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதே உண்மை.

    பறை அடித்துக் கொண்டிருக்கிறது
    ஒனின் உயிர்க்கசிவு
    தன்னை அறியாது இருவரின் கண்களிலும் வடிகிறது கண்ணீர்
    நினைவுகள் நீள்கிறது. இருவருக்கும் பாத்திர பண்டங்களும்,
    அடகுக்கு ஆகாமல் கிடக்கிறது.
    மனைவியின் தாலியில் ஒரு குண்டுமணி தங்கமும் கிடையாது.
    எந்த எஜமானனும் இந்த நேரத்தில் குடிசையைக் கொளுத்தவுமில்லை
    அப்படியாவது ஆத்தாளுக்கு கொள்ளி போட்டிருப்போம்
    அப்படியுமில்லை எங்க வீட்டு எழவுக்கு
    தப்படிக்க எவனக் கூப்புடறது சீக்கிரமாக தூங்குங்க சாமி,
    எங்க ஆத்தா எழவுக்கு நாங்களே தப்படிக்கனும்.

    இந்தக் கவிதையைப் படித்ததும் நெகிழ்ந்து போனேன். கொடுமை,கொடுமை,வறுமை கொடுமை என உணர்த்திடும் கவிதை. ஏழ்மையைப் பற்றி இதை விட எளிமையாக, இயல்பாக காட்சிப்படுத்த முடியாது. இது வெறும் கற்பனைக் கவிதை அல்ல. இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் உள்ள வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்திய கவிஞஞருக்குப் பாராட்டுக்கள். நிறைய இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. அடுத்தப் பதிப்பில் கவனமாக பிழை நீக்கி வெளியிடுங்கள்

  4. 4 On June 13th, 2010, r.ravi said:

    சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

    நூல் ஆசிரியர் : கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரி

    அட்டைப்படமே நம்மை சிந்திக்க வைக்கின்றது. கோயில், மசூதி, தேவாலயம் வாசலில் வரிசையாக பிச்சைக்காரர்கள். நூலின் பெயருக்கு ஏற்றபடி உள்ள கவிதைகள் யாவும் சிந்திக்க வைக்கின்றன. நூல் ஆசிரியர் கவிஞர் சொல் கேளான் ஏ.வி.கிரி,தந்தை பெரியார் வழிவந்தவர், பகுத்தறிவுவாதி. நூல் ஆசிரியர் பற்றி அவரது நண்பர் திரு.ஜெயபாஸ்கரன் எழுதி உள்ளார் பள்ளியிறுதி வகுப்பிலே மூன்று முறை தோல்வியடைந்து, நின்று போனது அவரது கல்வி. குடும்பத்தை வறுமை வாட்டிய காலங்களில் தொழிற்சாலையில் கூலி வேலை செய்தார். மெழுகுவர்த்தி நிறுவனம் ஒன்று தொடங்கி தொழில் அதிபர் ஆனார். உழைப்பால் உயர்ந்த கவிஞரின் உள்ளக்குமுறல் தான் இந்நூல் பேசும் குறையையும் வென்று வாழ்க்கையில் சாதித்தவர், கவிதையாக வாழ்பவர்.

    தென்காசி கோ.சுசாமிநாதன் அணிந்துரை வரிகள் இதோ!
    கவிஞர்கள் பொதுவாக “கற்பனை உலகில் சுற்றிச் திரிவார்கள், கவிஞர் சொல்கேளான் அப்படி அல்ல, இவர் நடைமுறை உலகில் நடந்து திரிகிறவர்”. இலக்கிய வீதி இனியவன், கவிஞர் ஜெய பாஸ்கரன் ஆகியோரின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது.
    அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற மூடநம்பிக்கை பரவி வருகின்றது.
    ஊடகங்களும் தங்கள் வருமானத்திற்காக பரப்பி வருகின்றனர். செம்மறி ஆடுகளாக மக்கள் குவிந்து வருகின்றனர்.
    அட்சய திருதி

    பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி
    வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பியவள்
    அதிர்வடைகிறாள் கழுத்தில் இருந்த
    இரண்டு பவுன் சங்கிலியைக் காணோம்.

    அட்சய திருதியில் நகை வாங்கச் சென்று, இருந்த தங்கத்தையும் இழந்த அவலத்தைப் பதிவு செய்துள்ளார்.
    புதிய சட்டமன்ற கட்டிடம் குறித்து ஒரு நல்ல கவிதை, சட்டமன்றத்தின் செயல்பாட்டை உற்றுநோக்கி எழுதிய கவிதை

    சட்டைக் கிழிப்பு, வேட்டி அவிழ்ப்பு, கைகலப்பு வெளிநடப்பு ,
    ஒலிபெருக்கி உடைப்பு, கூச்சல் ,குழப்பம், அடிதடி, தள்ளுமுள்ளு,
    பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டு ,அதிகம் சொத்து சேர்த்தது யார்?

    யார் பதவி விலக வேண்டும், உன் மகனா ? என் மகனா?
    சபாநாயகரைச் சுற்றி மறியல் , நாகரிகமில்லா வார்த்தைகள்
    இவை போன்ற இன்னும் இத்யாதிகளுக்கு இடம் போதவில்லை

    இருநூறு கோடியில் புதிய சட்டமன்றக் கட்டிடம்.

    இடம் மாறிய போதும், செயல்கள் மாறவில்லை என்பதே இன்றைய நடப்பு. இலங்கையில் நடந்து முடிந்த அவலத்தை பற்றி கவிதை வடித்தூள்ளார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். மூன்றாம் மனிதர்களுக்கு புரிவதில்லை அந்த வலி.

    ஆறுதல்
    என் மக்கள் போரைப் பார்த்ததில்லை
    கண்ணிவெடி கண்டதில்லை, பதுங்கு குழி இறங்கியதில்லை
    பீரங்கி சப்தம் கேட்டதில்லை, பசி அறிந்ததில்லை சொந்தம் பந்தம் இழந்ததில்லை வெயில்மழை நனைந்ததில்லை அகதி முகாம் நுழைந்ததில்லை, அடி உதை வாங்கியதில்லை
    கை கால்கள் இழந்தில்லை, கற்பழிந்து துடித்ததில்லை ராணுவம் முன் நடுங்கியதில்லை, ராத்திரி பகலாய் அலைந்ததில்லை
    பெற்ற பிள்ளைகளைத் தேடியதில்லை உற்றவர் பிணம் கண்டு வாடியதில்லை.

    தொலைக்காட்சி, செய்தித்தாள் பார்த்து படித்து, இனப் படுகொலை கண்டு வேதனைப்படும் தமிழர்களுக்காக கோடியில் புரண்டு பதவியை விடாத எம் தலைவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். மானாட மயிலாட,சிரிப்பொலி, ஆனந்தம். சுக மனிதரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் போது தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்த மனிதர்கள் உண்டு.
    தவறு
    ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறார்கள் ஆறு,குளம்,குட்டை
    காலை ஏரி ஓரங்களில்
    நல்லது பொல்லது பார்க்கவிட்டு பேரன் பேத்திகளை
    எடுக்கவிட்டு
    இப்போது இடிக்க வருகிறார்கள் கடப்பாரை மன்வெட்டிக்கு
    வேலை வைக்காமல் காவலர் சூழ்ந்த புல்டோசரடன்
    குடும்பத்துடன் கதறியடித்து அழுது புரளும் இந்த
    ஏழை எளிய மக்கள் செய்த தவறென்ன ?
    ஓட்டுக்கு ஆயிரம் வாங்கியதைத் தவிர.

    மனதில் பட்டதை சமரசத்திற்கு இடமின்றி, புதுக்கவிதையாக வடித்துள்ள துணிவிற்கு, நெஞ்சுரத்திற்கு கவிஞரைப் பாராட்ட வேண்டும். பணம் கொடுத்து வாக்குப் பெறும் அவலத்தைச் சுட்டிம் காட்டுகின்றார்.

    அம்மா

    என் கணவர் போகாத அம்மன் கோயில்களே இல்லை
    இத்தனை அம்மன்களை வணங்கியும் என்னைத்
    திட்டிக் கொண்டிருக்கிறார் “சனியனே,பொட்டப் புள்ளையா
    பெத்திட்டியேடி”

    இந்தக் கவிதையைப் படித்ததும் இன்றைக்கும் சில குடும்பங்களில் இந்தத்திட்டு ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இன்று மகன் திருமணமானதும் மனைவியோடு சென்று விடுகிறான். கடைசி காலத்தில் மகள் தான் துணை இருக்கிறாள்.நிறையக் குடும்பங்களில் இது நடந்து வருகின்றது.எனவே இனியாவது, மகனுக்குப் பதிலாக மகளையே பெற வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது கவிதை. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி.

    கணினி யுகத்தில் காளை அடக்குதல் எதற்கு? தமிழர்கள் வீரம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற உயிரை இழக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்லும் கோடீஸ்வரர்கள் இறங்கி காளையை அடக்குவார்களா ?
    காளைகளே

    தமிழர்களே அலங்காநல்லூர் தமிழர்களே
    சிந்தியுங்கள் காளையைப் பிடித்தது போதும்
    இனியாவது எலிகளைப் பிடியுங்கள்
    நாளைய உலகம் கம்ப்யூட்டர் எலி (மவுஸ்)
    பிடிப்பவர் கையில் தான் உள்ளது.

    இந்நூலில் புதுக்கவிதை மடடுமல்ல,சிந்தனை விதைக்கும் சிறப்பாக ஹைக்கூ கவிதைகளும் உள்ளது.
    குடும்பம் இரண்டு
    பட்டால் நாட்டுக்குப்
    புதிய தொலைக்காட்சிகள்

    இலங்கையில் குண்டுகள்
    தலைவர் இங்கே விடுகிறார்கள்
    காகித அம்புகள்

    சனிப்பெயர்ச்சி
    நல்ல பலன்
    அர்ச்சகர்களுக்கு

    பாட்டாளித் தலைவர்கள்
    வலம் வருகிறார்கள்
    டாட்டா சுமோக்களில்

    மக்கள் வரிப்பணத்தில்
    இலவசங்கள் மட்டுமல்ல
    விளம்பரங்களும்

    செல்போன் மட்டும்
    பெருகவில்லை
    கள்ளக் காதல்களும்

    கிரிவலம் முடித்து
    வந்தால் வீட்டில்
    திருடனின் வலம்

    உயிரையும் கொடுப்பேன்
    என்கிறார் தலைவர்
    அறுபது வருடங்களாக

    மே தினம்
    தலைவர்கள் வாழ்த்து
    உழைக்காமல்

    ஏமாற்று அரசியல் தலைவர்களையும், போலிச் சாமியார்களையும் கடுமையாகச் சாடி உள்ளார். நாட்டு நடப்பை உற்றுநோக்கி மனதில் பட்டதை பயமின்றி, துணிவுடன் புதுக்கவிதையாக ஹைக்கூ கவிதையாகப் பதிவு செய்து நூலாக்கிய நூல் ஆசிரியர் கவிஞர் சொல்கேளான் ஏ.வி கிரி பாராட்டுக்குரியவர். அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்தால்,இன்னும் சிறப்பாக இருக்கும்.

  5. 5 On June 13th, 2010, r.ravi said:

    சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

    http://www.kavimalar.com

    நூல் ஆசிரியர் : கோமேதக வேலு
    நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

    சிறந்த சிந்தனையாளர் கன்பூசியஸ் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். அவருடைய வரலாற்றை,சிந்தனைகளை,பொன்மொழிகளை அறிந்து கொள்ள உதவிடும் அரிய நூல்.நூல் ஆசிரியர் கோமேதகம் போன்ற விலை உயர்ந்த பொருளை பெயரிலேயே பெற்று இருப்பதால் உயர்ந்த பல கருத்துக்களை நூல் ஆசிரியர் கோமேதக வேலு மிக நுட்பமாக,சிறப்பாக எழுதி உள்ளார். சீன அறிஞரை அழகு தமிழில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும், பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி? எனச் சிந்தித்தவர் சிந்தனையாளர் கன்பூசியஸ். திருவள்ளுவர்,விவேகானந்தர்,டார்வின்,கார்ல்மார்க்ஸ்,அரிஸ்டாடில்,டால்ஸ்டாய்,ப்ராய்டு,சாக்ரடீஸ் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தகுந்த இடம் பிடித்த அறிஞர் கன்பூசியஸ்.

    கிறிஸ்து பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டின் வடகிழக்கில்,”ஷன்துங்” என்து இப்போது வழங்கப்படும் மலைப்பிரதேசத்தில் “லூ” அரசாட்சியின் கீழ் அடங்கியிருந்த “ட்சூப்வு” பட்டினத்திலே ஒரு பிரபு குடும்பத்திலே கன்பூசியஸ் பிறந்தார். இவரை “குங்-பப்யூ-டெஸ்” எனக் கூறுவார்கள்.

    கன்பூசியசின் தந்தை சூ-லியங்-கே அப்பட்டினத்தின் அதிகாரியாக இருந்தவர். நெஞ்சுரம் வாய்த மாவீரர். கன்பூசியஸ் குழந்தையாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால்,வறுமையாலும்,தாயாரின் கண்டிப்பிலும் தான் அவர் வளர வேண்டியிருந்தது. ஆறு வயது சிறுவனாக இருக்கும் போதே நம் குழந்தைகள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவது போல்,அவர் சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு,ஞானிகள் விளையாட்டு விளையாடுவாராம். தமது இருபத்திரண்டாவது வயதில் கலைக்கழகம் என்ற பள்ளியைத் தம் சொந்த ஊரிலே துவக்கினார். நாட்கள் செல்லச் செல்ல கன்பூசியசின் கல்வி பயிற்றுவிக்கும் திறமை நாடெங்கும் பரவியது. ஆவர் புராதன நீதிகளை ஆழ்ந்து படித்தார். இப்படி கன்பூசியசின் வாழ்க்கை நிகழ்வுகள் நூலில் விரிவாக உள்ளது.

    நம் திருவள்ளுவரைப் போல், கன்பூசியஸ் அறநெறியாளர்,அதோடு இராஜதந்திரியாக அனுபவபம் பெற்றவர்,குருகுல மகான், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்,பழம்நூல்களை தொகுக்கும் பதிப்பாசிரியர்,சீடர்களோடு நடமாடும் ஒரு பல்கலைக்கழகம்,கவிஞர், இசைப்படகர்,சங்கீத மேதை,அரசியல்வாதி,இயற்கைவாதி,இலட்சியவாதி,காரியவாதி,தத்துவ ஞானி,வாழ்க்கைப் போராட்டத்தில் நாடோடி இத்தனை சிறப்பியல்புகளும் ஒருங்கே வாய்ந்த பன்முக ஆற்றலாளர். சீன நாட்டின் மாபெரும் ஞானி மட்டுமல்ல,உலகம் முழுவதற்குமே பொதுவான ஒரு தத்துவஞானி. ஆவரது கருத்துக்கள் நடைமுறை வாழ்வில் சாதாரண மனிதனும் பின்பற்றக்கூடியவை தான்.

    அரசியல் பற்றி கன்பூசியசின் கருத்துக்கள் “ஆள்வோர் தவறிழைக்கும் போது ஆளும் உரிமையை இழந்து விடுவர்?”

    ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அத்தியாவசியமானவை மூன்று, ஏராளமான உணவு,போதுமான படை பலம்,பொதுமக்களின் நம்பிக்கை, இவற்றில் பொதுமக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியமானது. இது இல்லாவிட்டால் அரசாங்கம் இராது. இன்று மின்தடை காரணமாக அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் வெறுப்படைந்து வருகின்றனர் என்பதை ஆள்வோர் உணரவேண்டும்.

    காய்ந்து போன பழங்களை ஆசிரியர் கட்டணமாக கொண்டு வந்து கொடுத்தாலும் அவர் கல்வி கற்பிக்கத் தயங்க மாட்டார். ஆனால் படிப்பில் ஆர்வமில்லாதவர்களுக்கோ சுயமாகச் சிந்திக்கும் ஆர்வமில்லாமவர்களுக்கோ,அவர் கல்வி கற்பிக்க மாட்டார். கற்பித்தல் முறை என்பது மாணவனின் தலைக்குள் அறிவுகளைத் திணிப்பது அல்ல. அவன் சுயமாகச் சிந்திப்பது தான் அறிவு. இந்தக் கருத்தை இன்றைய ஆங்கிலப் பள்ளியினர் கருத்தில் கொள்ள வேண்டும்.
    10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற நெல்லை ஜாஸ்மின் மாநகராட்சி பள்ளியில் பயின்றார். உணர்ந்து அறிந்து படித்ததால் வென்றார். குழந்தைகளை சுயமாக சிந்திக்க வைக்கும் ஆற்றல் தாய்மொழிக்கே உண்டு

    வருடங்களின் புள்ளி விபரங்களுடன் சிந்தனையாளர் கான்பூசியஸ் பற்றி நூல் ஆசிரியர் கோமேதக வேலு தமிழில் அறியப்படாத கன்பூசியசின் வரலாற்றை,சிந்தனைகளை மிக எளிய நடையில் மிக நுட்பமாகவும்,சிறப்பாகவும் வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

    அறிஞர் கன்பூசியஸ் பொன்மொழிகள்:

    உங்கள் பலத்தில் பெருமை கொள்ளாதீர்கள்: உங்களை விட பலசாலி ஒருவன் இருக்கிறான் என்பதைப் பற்றி மட்டும் மறந்து விடாதீர்கள். (இக்கருத்தை சிங்களப்படை உணர வேண்டும்)

    அரசன் தனி நல்லொழுக்கத்தால் செங்கோல் செலுத்தும் போது துரவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த நட்சத்திரம் சலனமற்று நடுநிலையிலிருக்க மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் அதைச் சுற்றி வருகின்றன. (இக்கருத்தை ஆள்வோர் உணர வேண்டும்)

    தெரிந்தது இன்னது என்பதை அறிவதும்

    தெரியாதது அன்பு காட்டுவது தான் உதவி, அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களின் நடப்பை நாடுங்கள். (இக்கருத்தை சிங்கள இன வெறியர் ராஜபக்சே உணர வேண்டும்)

    தான் கற்றதை மறவாமல் இருப்பதும்,மேலும் சகல விஷயங்களையும் கற்று வருவதும் தான் ஆசானுக்கு அழகு. (இக்கருத்தை இன்றைய ஆசிரியர்கள் உணரவேண்டும்.)

    இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலையாதீர்கள். அவ்வாறு அவற்றை அடைந்தால் அவை நிச்சயமாக நம் கைப்பிடிக்கு அகப்படா. (இக்கருத்தை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும்.)

    ஏழைகளையும் ,துன்புறுவோர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்கு உரியன செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வது நல்ல அரசாட்சிக்கு இன்றியமையாதது.(இக்கருத்தை ஆள்வோர் உடன் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.)

    கன்பூசியசின் அறிவார்ந்த கருத்துக்களின் சுரங்கமாக, பெட்டகமாக நூல் உள்ளது

  6. 6 On June 16th, 2010, r.ravi said:

    முன்னேற்றத்தின் முகவரி,நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி http://www.kavimalar.com

    நூல் ஆசிரியர் : கவிஞர் ஞர்;.சந்திரன்
    இளையோரை விருட்சங்களாக்க என்று நூலின் நோக்கத்தை நூலாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன் தெளிவாகக் குறிப்பிடுள்ளார். மதுரை தூய மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியப் பணி யினையும் இனிதே செய்து வருகிறார்.

    மாணவர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல். எனக்கு முகவரி கொடுத்த இரத்தமும் சதையும் தந்து இந்த மண்ணில் மடியில் தவழவிட்ட, வாழும் என் பெற்றோர்களுக்கு. என்று நூலை காணிக்கையாக்கியதன் மூலம் நூலாசிரியரின் பெற்றோர் பாசம் புரிகின்றது. வேரை மறக்காத விழுதாக உள்ளார்.

    தென்னைக்குத் தெரியாது இழநீரின் சுவை அது போல,இன்றைய இளைஞர்களில் பலர் தன் திறமையை அறியாமலே இருந்து வருகின்றனர். “முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் முன்னேறச் சரியான முகவரி கொடுத்தே ஆக வேண்டு;ம் என்று யோசித்த போது, பகிர்ந்து கொண்டதன் விளைவாக மலர்ந்த நூல் இது” என்று கவிஞர் ஞா.சந்திரன் குறிப்பிடுகிறார் முனைவர் அப்துல் காதர் தொடங்கி, ஜெரி வரை 47 முத்தான சாதனை படைத்த அறிஞர்களின் வெற்றி ரகசியங்களின் தொகுப்பு நூல் இது. அவர்களைப் பற்றி சிறு குறிப்பும், அவர்களது கட்டுரையும் உள்ளது. கட்டுரைகளை பெற தொகுப்பாசிரியரின் உழைத்த உழைப்பு பிரமிக்க வைக்கின்றது.

    47 பேரில் சாதரண நபர் யாருமில்லை, எல்லோருமே சாதனையாளர்கள் தான்.
    தொகுப்பாசிரியர் கேட்டதும் கட்டுரை தந்து உதவிய சாதனையாளர்களையும் பாராட்ட வேண்டும்.

    முனைவர் அப்துல் காதர்: நம்பிக்கை என்பது உள்ளே நிகழும் உயிர்ச்சுவாசம்
    இளைய செடிகளுக்கு இது ஒரு தாரக மந்திரம்

    கவிக்கோ அப்துல் ரகுமான்: இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும் அல்லது இன்ஜீனியராக வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஓவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறக்கிறது. ஆனால் பெற்றோர்களோ ஜெராக்ஸ் படிகளையே விரும்புகிறார்கள்.

    முனைவர் ஆர்.கே.அழகேசன்: தடைக்கற்களை நாம் தாண்டி வந்தாலும், இனியுங் கடந்த வர இருப்பதாலும் நாம் விலங்கிலிருந்து வேறுபடுகிறோம்.

    முனைவர் க.ப. அறவாணன் புலி கூடத் தயார் நிலையில் இல்லை என்றால் எலி கூட ஏறெடுத்துப் பார்க்காது.

    டாக்டர்: என்.பி.இம்மானுவேல் : அதிர்ச்சியில் அதிர்ச்சி என்னவென்றால், இஞைர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரியவர்கள் போதை அடிமைகளில் இடம் பெற்றிருப்பது தான். பெரியவர்கள் முன்உதாரண புருசராக வேண்டும்.

    ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் . கல்வி வாழக் கற்றுக் கொடுக்கிறது, ஆனால் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கவில்லை.

    முனைவர் அரங்க இராமலிங்கம்: சமுதாயம் ஒழுக்கம் ஒருவரிடம் இல்லையானால் அவர் சார்ந்துள்ள சமுதாயமும், நாடும் பாழாகிவிடும்.

    முனைவர் ஜே.ஆர்.இலட்சுமி டார்வின்: வாழ்க்கையின் வெற்றிக்கும் அதிர்ஷ்டத்திற்கும் தொடர்பு இல்லை.

    இளசை சுந்தரம்: சுயநலமின்றிப் பொதுநலனே கருவியாகக் கொண்டு தொண்டாற்றும் இளைஞர்களே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    முனைவர் வெ.இறையன்பு இ.ஆப: ஒழுகுகின்ற பானைகளல் ஓரத்தில் முளைக்கும் நட்புச் செடிகளுக்கு நீர் கிடைக்கின்றது.பூமி யின் முகத்தில் அவை பூக்கள்களி ன் புன்னகையைப் படர விடுகின்றன.

    முனைவர் ஜா. எவாஞ்சலின் மனோகரன்:ஒருமனப்பட்டு எந்தக் காரியத்தில் இறங்குகிறோமோ அந்தக் காரியத்தில் வெற்றி நிச்சயம்

    கவிஞர் கபிலன் வைரமுத்து: மனிதநேயத்தையும் ஒட்டுமொத்தச் சமூகத்தின் முன்னேற்றத்தையும் இதயத்தில் ஏற்றிய இயக்கங்கள் முளைக்க வேண்டும்.

    அமரர் கருணைதாசன்: யாரிடமும் பகை கொள்ளாமல் வாழ்வதே இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    அமரர் முனைவர் சக்தி பெருமாள்: மனிதன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று கணக்கிடமுடியாத திறமைகளின் புதையல்.

    இந்நூல் தொகுப்பாசிரியர் ஞா.சந்திரன்: நமது இன்றைய சிந்தனையும், செயலும் நமது நாளைய வாழ்க்கையை வடிவமைக்கும்.

    சர்க்கரைச் செல்வன்: எச்சரிக்கை உணர்வு நமது அனுபவங்களிலிருந்து மட்டுமன்று, பிறர் அனுபவங்களிலிருந்தும் கற்க வேண்டிய பாடம்.

    சுகி சிவம்: திறமையோடு கூடப் பொறுமையும் கலந்தால் இளைய தலைமுறைக்கு வெற்றி நிச்சயம்.

    அமரர் சுஜாதா: உலகில் மிகச் சுலபமான வேலை அறிவுரைப்பது, கடினமான வேலை கடைபிடிப்பது.

    அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்: இந்த உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

    அருட்தந்தை எம்.ஏ. சேவியர்,சே.ச.: இலட்சியவாதிக்கு அனைத்துமே வாய்ப்புகளாகத் தானே வாய்க்கும் வானமே எல்லை.

    எம்.ஏ. ஜோ : இளைஞர்களுக்கு விவேகம் இல்லாமல் வேகம் இருப்பதால் தான் அதை வீரம் என்று நினைத்து தங்களையும் அழித்துக் கொள்கிறார்கள். பிறரையும் அழித்துக் கொள்கிறார்கள்.

    முனைவர் கு. ஞானசம்பந்தன்: தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்ற அறங்கள் முழுவதும் தனி மனிதனைச் செம்மைபடுத்த வேண்டும் என்னும் நோக்கில் படைக்கப்பட்டவை தாம். அந்த அறநெறிகளின் வழி நின்றால் நல்ல முறையில் வைக்கப்படுவோம்.

    முனைவர் தமிழண்ணல்: மாந்தர் பழகும் முறையிலே தான் சரியான பண்பாடு இருக்கிறது.

    லேனா தமிழ்வாணன்: இன்றைய தினம் தான் சரியான தினம்.

    முனைவர் ம.திருமலை : வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.

    திலகவதி இ.கா.ப. : கோபமாகப் பேசுகிறவரிடம் நிதானமாகப் பேசுங்கள், உங்கள் சகிப்புத்தன்மையே எதிராளியை மாற்றி விடும்.

    தேமு : முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் தட்டக் கூடாது, அடுத்து என்ன இருக்கிறது என்று ஒருவினாடி யோசித்தால் போதும், உலகம் விரிந்திருப்பதைக் காணலாம்.

    என். நன்மாறன் : இளமை என்னும் போதே இதயத்தில் விளையது இனிமை, அதனுள் அடங்கியிருப்பது வலிமை.

    முனைவர் நிர்மலா மோகன் : விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உழைத்துக் கொண்டே இருப்போம்.

    பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன்: நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் உன் மனச்சான்று உனக்குக் கைதட்ட வேண்டும்

    அருள் தந்தை முனைவர் இலா. பிரான்சிஸ் சே.ச. : தோள் வலித்தாலும், பிறருக்காகத் துடுப்பு வலிப்பது தொண்டு.

    டாக்டர் பூவண்ணன் : சாதனைக்கு வயது வரம்பு இல்லை.

    முனைவர் முத்து சந்தானம் : ஆசைகள் இல்லாமல் போனால் வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் போய் விடும்.

    மரபின் மைந்தன் ம.முத்தையா : சந்தேகம் என்பது சாலையில் ஒரு வேகத்தடை போல் இருக்கும் வரைக்கும் சிக்கவில்லை. அந்த வேகத்தடை உங்கள் பாதையையே தடை செய்யக் கூடாது.

    கவிஞர் மூரா. : விழிகளுக்குத் தெரியாமல் புகைந்து கிடப்பதைப் தோண்டிப் பார்க்கத் துடிப்பவனே சிகரத்தைத் தொடுகிறான்.

    கவிஞர் மு.மேத்தா: அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது இந்தியாவில் சிறைச்சாலைகள் இருந்தன. சுதந்திர சூர்யோதத்திற்குப் பிறகோ இந்தியாவே ஒரு சிறைச்சாலையாகி விட்டது.

    முனைவர் இரா.மோகன்: வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் வாய் மூடி மௌனியாய் அடங்கி ஒடுங்கியே இருக்க வேண்ம். அப்போது தான் வாழ்க்கையில் நீங்கள் முத்திரை பதிக்க முடியும்.

    எஸ். இராஜா: எந்தக்காலத்திலும், எந்த நேரத்திலும் இயங்குவதே இளமை.

    போ.ம.ராசமணி: அன்புள்ள குடும்பம், ஆனந்தமான குடும்பம், தினமும் அந்த வீட்டில் திருவிழாக் கோலமே!

    பேரா.த.இராஜாராம்: தியாகிகளை மதித்துப் போற்றாத எந்த நாடும் சிறந்து விளங்கியதாக வரலாறு பதிவு செய்யவில்லை.

    கவிஞர் பா.விஜய்: பயம் என்பது உன்னுள் இருக்கும் இனத் துரோகி. என்னால் தான் முடியும் என்று நம்பி, உன் இலக்கினை அடைய முயற்சி செய்.

    கவிஞர்.கா.வேழவேந்தன் : பணம் சம்பாதிப்பதில் கூட அளவில்லாப் பேராசை இருக்குமானால், வாழ்க்கையில் நிம்மதி அடியோடு தொலைந்து போய்விடும்.

    கவிஞர் வைரமுத்து: சிறுமை கண்டு பொங்கும் சிந்தை இருக்கிறதே, அது இளமையின் கம்பீரமான அடையாளம்.

    அ.ஸ்டீபன் தனது எதிர்காலத்தை பற்றிச் சிந்திப்பவன் சுயநலவாதி, அடுத்தவர்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவனே சமூகவாதி.

    ஜோ.அருண்: இன்றைய மக்களிடம் இயற்;கை வாழ்வும், எதார்த்த சிந்தனையம் குறைந்து செயற்கை வாழ்வும், பூசி மெழுகுகிற சிந்தனையும் பெருகி விட்டது.

    ஜெரி: எல்லாம் தெரிந்தவர்கள் மேலும் தங்களுக்கு எல்லாம் தெரியம் என்று தெரிந்தவர்கள் இவர்கள் விழிப்பானவர்கள். உடலால் மறைந்தவர்களும் பொன்மொழிகளால் வாழ்கிறார்கள்.

    இப்படி 47 சாதனையாளர்களின் வெற்றியாளர்களின் வைர வரிகள் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது. இந்த நூலை படிப்பதற்கு முன் இருந்த மனநிலையும் படித்து முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி. தொகுப்பாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன் உழைப்பை உணர முடிகின்றது. இந்த நூல் அவருக்கு முகவரியைப் பெற்றுத் தந்துள்ளது. வாழ்வில் சாதிக்க விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்.

  7. 7 On June 21st, 2010, r.ravi said:

    நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

    [Friday, June 18th, 2010 3:40 am]

    நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ்

    நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் இந்நூலை மறக்காமல் தன் பள்ளித் தமிழாசிரியர் திரு.சரவணன் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். இலக்கியப் பயணத்திற்கு துணை நின்றவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார். கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி,கன்னிக் கோயில் இராஜா,வசீகரன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது. நூலின் அட்டைப்படமே கருப்பு வெள்ளையில் வித்தியாசமாக உள்ளது.

    குழந்தைகள் இன்று,”வீடியோ கேம்ஸ்” காரணமாக வன்முறையாளர்களாக மாறி வருகிறார்கள் என்பதை கவிதையில் பதிவு செய்துள்ளார்.

    ஆழகு பூக்கும் தலைமுறை

    துப்பாக்கிச் சூடு அய்ந்து புள்ளி கத்திக்குத்து பத்துப்புள்ளி
    வெறும் வன்முறை கொண்டு வடிவமைத்து பொத்தான் அழுத்தி
    எண்ணிக்கை அடங்கா “வீடியோ கேம்ஸ்”-ஸின் ஆக்கிரமிப்பு
    இன்றைய குழந்தைகள் உலகம்.

    பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு பதிக்கும் முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வழிப்புணர்வை விதைக்கின்றனர். சமுதாயத்தின் மீதான அக்கறை தான் இந்தக் கவிதை நூல். இன்றைய கல்வியின் நிலையை மிக நுட்பமாக புதுக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.

    திறக்கும் வான்வெளி

    சுயஅறிவு மழுங்கடிக்கும் மனப்பாட மதிப்பெண்கள்
    புத்தகப் பக்கங்களை ஊடே
    எங்களை மடித்து வைத்து
    எழுத்துக்களுடன் இடைவெளி சேர்த்து
    அச்சு பிசகாமல் மனனம் செய்து
    யோசிக்கும் சுயதிறன் இல்லாமல் செய்தது இக்கல்வி
    தமிழ் கல்லாமல் ஆங்கிலம் ? திகட்டும் பால்

    தமிழ் படிக்காமலே பட்டம் பெறும் அவல நிலை தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

    சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வு என்பது காலத்தின் கட்டாயம். அதையும் கவிஞர் புதுக்கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

    புகையில்லா பூமி சமை

    புகைபுகை – திசைதோறும் புகை-வாகனப்புகை – ஆலைப்புகை
    சிகரெட்புகை – அணுகுண்டுபுகை – பூமிச்சூட்டுப் புகை
    புகை வாழ்வு எரிப்பது உணர்

    புகையைக் குறைத்து பூமி செழிக்க அவைகளும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்;தை உணர்த்துகின்றார் நூலாசிரியர் கவிஞர் பவகணேஷ்

    மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் மக்களவையில் மக்களுக்கு பயன்படும் பொருள் பற்றி பேசாமல் கூச்சல்,குழப்பம்,சண்டை செய்து,சபை ஒத்தி வைப்பு செய்யும் அவலத்திற்கு
    கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஒருவர் வாழ்வு எப்போது அர்த்தப்படும் என்பதைப் பதிவு செய்துள்ளார்.,

    எதிர்காலம் மீட்கும் அட்சயம் பாத்திரம்

    ஒரு சேதி நமக்கு – அநாவசிய செலவுகள் நீக்கு
    ஆதரவு குடை விரி – நம்பிக்கை பேசு
    சேவைக்குக் கை கொடு – அர்த்தப்படும் வாழ்வு

    காவலர்களில் சிலர் கறுப்பு ஆடுகளாக, ரௌடிகளாக இருப்பதை கவிதையில் சுட்டி உள்ளார். காவல்hகள் கண்ணியமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது நூலாசிரியர் ஆசை அன்று நகைச்சுவை மிகத் தரமாக இருந்தது. நகைச்சுவை என்பது அடுத்தவர் மனதை புண்படுத்தாத நகைச்சுவையாக இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகளையும், திருநங்கைகளையும் கேலி செய்து நகைச்சுவைக் காட்சிகள் ஒளிப்பரப்புவதற்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார். நூலின் பெயருக்கு ஏற்றபடி சமூக விரோதிகளை நையப்புடைத்து உள்ளார்.

    ஆயுள் அழிக்கும் நகைச்சுவைகள்

    நகைச்சுவை பெயர் சொல்லி ஊடகம் நிகழ்த்தும் சமூகச் சீர்கேடு
    அரங்கேறும் அருவருப்பு,இரட்டை அர்த்த வசனம் பேசி
    உயிர்கள் உறவுகள் சாகடித்து, பெண்மையைக் கொச்சை செய்து
    பாலியல் சீண்டல் பகிரங்கப்படுத்தி அடித்து உதைத்து
    பின்னணி சிரிப்புச் சத்தம் போட்டு நகைச்சுவை மகத்துவம் கெடுக்கும் போட்டி.

    இன்று பரவி வரும் மூட நம்பிக்கைகளை பதிவு செய்து உள்ளார். செல்லிடப் பேசியிலும் பலர் கடவுள் பற்றி தகவல் அனுப்பி,இதை பத்து பேருக்கு அனுப்பாவிட்டால் துன்பப்படுவாய் என அச்சுறுத்தும் அவலத்தைச் தோலூரித்துக் காட்டுகிறார். அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு செய்து வரும் அநீதையைத் தட்டிக் கேட்கிறார். கவிதையால்.

    சுவர் உடைக்கும் சகோதரம்

    பூட்டிக்கிடக்கும் நதிகள் தமிழகம் தொலைக்கும் நீர்ச்சுவடுகள்
    எத்தனைப் பேச்சுவார்த்தைகள் தற்கொலை நாடகம் அங்கு அரங்கேற்றம்
    அணை உடையும் நிலையில் மட்டும் திறந்து விடும் சுய நலம்
    பாய்ந்து வரும் நதிகள் தடுத்து அமுக்கி
    நுரைப்பொங்கும் அண்டை மாநிலம்
    நத்தைக்கறி எலிக்கறி தின்று உயிர் நகர்த்தி
    நுரைக்கக்கும் எங்கள் விவசாயிகள்
    இந்தியாவின் மூன்று பக்கம் உப்புநீர்
    தமிழகத்தின் மூன்று பக்கம் முடமாக்கப்பட்ட நதிகள்
    உணர்வும் அரசம் ஒருசேர திறந்தால் செழிப்போம் நாம்

    கர்நாடகாவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் தண்ணீரைத் தர மறுக்கிறார்கள். வெள்ளம் வரும் காலத்தில் மட்டும் தற்காத்துக் கொள்ள அனுப்புகிறார்கள். கடலில் வீணாய் கலக்கும் நீரை முல்லைப் பெரியாற்றில் சேமிக்க மறுக்கும் கேரளம். பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரம், இப்படி போட்டு போட்டு அண்டைமாநிலங்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றன. தட்டிக் கேட்க நாதியின்றி வாழும் தமிழன்,வேடிக்கை பார்க்கும் மைய அரசு, வேதனையில் விவசாயிகள்.

    கவிதை என்ற பெயரில் மானே,தேனே, மயிலே,குயிலே,நிலமே,தென்றலே, என இயற்கையைப் பாடிடும் சராசரிக் கவிஞனாக இல்லாமல்,சமுதாய அவலத்தை தோலூரித்துக் காட்டி,நையப்புடைத்த கவிஞர் பவகணேஷ்-க்கு பாராட்டுக்கள்.

  8. 8 On June 21st, 2010, r.ravi said:

    நூலின் பெயர் : அம்மா ஹைக்கூ,நூல் விமர்சனம் : கவிஞர்.ரா.பரிமளாதேவி

    [Friday, June 18th, 2010 3:33 am]

    நூல் ஆசிரியர் : விக்னா பாக்கியநாதன் ஜெர்மனி

    தமிழ் பா(பூ)க்களை கவிச்சரங்களாய் தொடுத்த விதம் அற்புதம்

    மேலும் மூன்று வரிகளில் உலக விசயங்கள் அனைத்தையும் கூர்ந்து கனித்து வரி வடிவம் கொடுத்திருப்பது சிறப்பு.

    எண்ணங்களை வைர வரிகளாய் வழங்கிய கவிஞர் விக்னா பாக்யநாதன் அவர்களுக்கு தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு.

    “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதற்கு ஏற்ப
    தோழி விக்னா அவர்கள் திரவியங்களாய் கவிதைகளை தன் அகத்தினில் தேடித்தேடி (ஹைக்கூ) தந்திருப்பது மிகச்சிறப்பு.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை ஹைக்கூ வாக்கியவிதம் அற்புதம்.

    “உனது உடலுறுப்புகளின்
    ஒழுங்கான இயக்கம்
    மகிழ்வான சொத்து”

    இயற்கையை இரசிக்க இரயில் பயணத்தை தேர்ந்தெடுத்த விதம் நன்று. இரயில் பயணம் எத்தனை சுகமானதும்,
    குதூகலமானதும் கூட…..
    நம் மனதிற்கு விருந்தாய் அமைந்தது…..

    வசந்தம் வருவதற்கு முன்னறிவிப்பாய் இலையுதிர்காலம் கவிஞரின் கற்பனையில் “மண்ணுக்கு ஆடை அணிவித்த விதம் சிறப்பு”

    மூளையை மழங்கச் செய்யும் மந்திரப் பேழைனு சொல்லலாம் தானே….

    “தொலைக்காட்சி ஈர்ப்பு
    தொற்றிடும் சிறைப்பிடிப்பு”
    ஓட்டைக் குடிசையிலே
    வெள்ளி வைரத்தட்டு
    தண்ணீர் வாளிக்குள் நிலா”

    நிலவை தண்ணீர் வாளிக்குள் சிறைப்பிடித்தது அற்புதம்.

    மேலும் கற்பனாவாதிகளால் மட்டுமே கல்லையும் கலையாக்க முடியும். அந்த வகையில் நமது கவிஞர் சிறந்த சிந்தனையாளர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை எனலாம்.

    “எதிர் வீட்டுக் கோழி
    என் வீட்டில் முட்டை
    யாதும் ஊரே”
    குயிலின் முட்டை காக்கையின் கூட்டில் என்பதைப் போல்.
    வேற்றுமை என்பது மனதைப் பொருத்து தானே.

    தோழர்களே ஒடி வாருங்கள்
    மல்லிகை மழை இங்கே
    பனிவிளையாட்டிற் சிறார்கள்.”
    பனியுடன் மல்லிகையின் மணம் சேர்ந்தார் போல உள்ளது. கவிஞரின் கற்பனை இவருடன் நாமும் சேர்ந்து பனிப்பூக்களை இரசிக்கலாம்.

    உணவுக்கட்டுப்பாடு பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

    “வயிறு நிறைய உண்பவர்
    மேன்மேலும் உண்ண விரும்புதல்
    தன்பற்களால் தனக்கு சவக்குழி”

    ஓரு விதவையின் மன நிலையை இதை விட யாரால் கூற முடியும்.

    “வெள்ளைச் சேலையில் அவள்
    பச்சை பச்சையாக மனம்
    காலனிடம் கணவன்”

    வாழையிலைக்குச் சோறு
    ஏழையோ பசியால் போராட்டம்
    நான் வாழையிலை ஆனால்?
    அந்த ஏழை தான் மானசீகமாக சாப்பிட்டு விட்டாரே.

    நான் வாழையிலை ஆனால்….

    வர(ன்) தட்ஷனைக் கொடுமையை சூசுகமாக “வில்லன்” என்று குறிப்பிடும் கவிஞரின் பாங்கு மிகவும் அற்புதம்.

    முலருக்கு “மணம்” இருப்பது அனைவரும் அறிந்ததே…. ஆனால்” மனம்” இருக்கும் என்பது நம் கவிஞர் அறிந்துள்ளார்.

    கவிஞரின் மெல்லிய உணர்வை இதிலிருந்து அறிய முடிகிறது.

    “காற்றை பிடிக்கலாம்
    நீரை வெட்டலாம்
    தன்னம்பிக்கை உறுதியானால்”
    இந்த “மகா மந்திரத்தை” ஒவ்வொருவரும் உச்சரித்தால் வெற்றி வந்து சேரும் என்பதை வலுவான வரிகளாக்கிய கவிஞரின் பேனா முனையிலும் தன்னம்பிக்கை ஒளிர்கிறது.

    நீர்த்திவலைகளெல்லாம் நீண்டு விழும் அழகை இவ்வாறு வர்ணிக்கிறார் கவிஞர்

    “வெள்ளீயத்துகள்கள்
    காற்றிலே பறந்து குளி;ர்மை
    நயாகரா நீர் வீழ்ச்சி”

    எல்லாவற்றையும் இரசிக்கும் மனம் கவிஞருக்கு உண்டு என்பதில் இதைவிட வேறு சான்று உள்ளதா?

    “நள்ளிரவு வேளை
    சரிகமபதநிச
    குடிசைக்குள் மழைநீர்”
    பஞ்ச “பூதத்தத்துவத்தை” உள்ளடக்கி படைப்புகளாகத்தரும் குயவனை எப்படிப் பாராட்டினாலும் தகுமே…
    மலரையும்,மழலையையும் ஒப்பிட்டுக் கூறும் விதம் சிறப்பு.

    “பூஞ்செடிகளுக்கு ஏக்கம்
    செயற்கைப்பூக்கள் உள்வீட்டினில்
    செவிலித்தாய் கையிற் பிள்ளை”
    இவை இரண்டையும் உற்றவர்கள் கவனித்தால் செழித்தோங்கும்….

  9. 9 On July 23rd, 2010, era.eravi said:

    நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

    தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்

    “இந்நூல் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து, வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.

    என்னைப் பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம். ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம் செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன் ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள் எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து கொண்டதால் பேரனாகிய என் வாழ்க்கை வரை அந்த பாதிப்பு தொடர்ந்தது. அந்த வலி என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. மறுமணம் செய்யும் ஆண்களையே வெறுத்தேன். ஹைக்கூ கவிதை சிறந்த வடிவம் என்பதை உணர்த்திடும் நூல். மனைவியின் மேன்மையை மகாகவி பாரதி சொன்ன வைர வரிகள் நூலின் பின் அட்டையில் உள்ளது.

    ஓ மனிதர்களே மண்ணுக்குள் எல்லா உயிர்களும்
    தெய்வமென்று பேசுகிறீர்கள் அது உண்மையென்றால்
    நீங்கள் மாலையிட்டு கைபிடித்த மனைவியும் ஒரு தெய்வமில்லையா?

    கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் மறைந்து விட்ட மனைவியின் நினைவாக இந்த கணவன் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது. மனைவியின் நினைவு நாட்களில் ஏதாவது தொண்டு செய்யுங்கள்.

    புத்தகம்
    உள்ளே மயிலிறகு
    கண்ணாய் நீ – ஒவியக்கவிஞர் அமுதபாரதி

    உதிரும் ஒவ்வொரு பொழுதும்
    மீண்டும் வரப் போவதில்லை
    உன்னை மாதிரி – வண்ணை சிவா

    வருடங்கள் கழிந்தும்
    சரியாய் அடையாளம் சொன்னது
    அவளின் ஓரப்பார்வை – ஜி.மாஜினி

    மரணம் செத்துப் போனது
    காதல் முன்னே
    யமுனைக்கரை தாஜ்மகால் – துறவி

    ஒருவருக்கும் தெரியாமல்
    ஒளிந்திருக்கிறாள்
    மனதுக்குள் அவள்-சிவபெருமான்

    உளி வடிக்கா
    உயிர் சிலை
    இதயத்தில் அவள் – உ.பாலஹாசன்

    எப்படிப் பாதுகாக்க
    குடைக் கம்பியில்
    உன் ரேகை -அறிவுமதி

    நானும் அவளும்
    பிரிவதில்லை
    புகைப்படத்திலிருந்து – அய்யப்பன்

    அறைகிறேன் என்னையே
    ஆனந்தமாய் உன்
    ஞாபகச் சிலுவையில் – கோ.பாரதி மோகன்

    கனவைக் கிள்ளிப் போனாய்
    வலிக்கத்தான் செய்கிறது
    நீயில்லாத பகல் – மு.முருகேஷ்

    உள்ளதை நேசிக்காமல்
    உள்ளத்தை நேசிப்பவள்
    மனைவி – எஸ்.பி.என்

    சமாதியும்
    சன்னதி தான்
    தெய்வமாய் மனைவி – கலையருவி

    எனக்குப் பயன்படாது
    எதற்கும் என்னிடம் இருக்கட்டும்
    உன் ஒட்டுப்பொட்டு – ஆர். எஸ்.நாதன்

    இதயத்தில் இன்னும்
    ஈரமாய்
    அவள் தந்த முத்தம் – பாலபாரதி

    என் பாதங்கள்
    சுவடு பதிக்கும்
    உன் பாதையில் – தமிழ்நெஞ்சன்

    கண்மூடி ரசித்தேன்
    உருண்டு விளையாடும்
    அவள் விழியை – பா.உதயக்கண்ணன்

    வீடு நிறைந்திருந்தும்
    மனம் காலியாகவே
    அவள் இல்லாமல் – முகவை முனியாண்டி

    நீ ஒருமுறை இறந்தாய்
    நான் தினம் தினம்
    புதைக்கப்படாமல் – ச.காவியன்

    காலி செய்த வீடு
    மறக்காமல் எடுத்து வந்தேன்
    பழகிய நாட்களை – நா.கவிக்குமார்

    அடையாளம் தெரியும்
    தூரமாய் இருந்தாலும்
    அவளின் நடை – ஆலா

    சோகம்
    அதுவும் சுகம் தான்
    நினைவில் நீ – மணிமேகலை நாகலிங்கம்

    ஒவ்வொரு ஹைக்கூ கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. மலரும் நினைவுகளை உருவாக்குகின்றன. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கும் போது வாசகர்களின் நினைவிற்கு காதல் மனைவியின் நினைவு வருவது நிச்சியம். இந்நூல் பற்றி கவிஞர் வெண்ணிலா ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று குறை சொல்லி உள்ளார். அதுவும், அதற்கான மறுப்பும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு. இன்று விமர்சனங்களை ஜீரணித்து கொள்ளும் பண்பு பலருக்கு இருப்பதில்லை. ஆனால் தொகுப்பாசிரியருக்கு இப்பண்பு நிறையவே உள்ளது என அறிய முடிகின்றது. காதலியை, மனைவியே வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல் உயிருள்ள சக மனுசியாக மதித்து அவளது உழைப்பை, தியாகத்தை உணர்ந்து அவளின் நினைவாக வாழ்வதே வாழ்க்கை.

  10. 10 On July 23rd, 2010, era.eravi said:

    மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

    நூல் ஆசிரியர் : கவி வேந்தர் மு.மேத்தா-

    நூலின் அட்டைப்படத்தில் புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா-வின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. “மனிதனைத் தேடி ” கவிதை நூலின் தலைப்பு இன்றைக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. மேல்நாட்டு அறிஞர்கள்,”கையில் விளக்குடன் மனிதனைத் தேடுகின்றேன்” என்று தேடுவதைப் போல,இன்றைக்கு மனிதாபிமானமிக்க மனிதனாக வாழக்கூடிய நல்ல மனிதனை,தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.

    மனிதம் மறந்து,சாதிமதக் கலவரத்தில் ஈடுபட்டு,வன்முறை வளர்க்கும் மனித விலங்குகளை,மனிதனாக்கும் விதமாக கவிதைகளைப் படைத்து உள்ளார் கவிஞர் மு.மேத்தா,21.03.1999 அன்று எழுதிய கவிதையில் இணையம் பற்றியும்,மின்னஞ்சல் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் தொலைநோக்கு சிந்தனையாளர் கவிவேந்தர் மு.மேத்தா. மு.மேத்தா என்றால்,புதுக்கவிதையின் முன்னோடி என்று பொருள். நூலில் அணிந்துரை,என்னுரை என்ற பெயரில் பக்கங்களை விரையம் செய்யாதல் நேரடியாக கவிதைகளை அச்சிட்டு உள்ளனர்.

    வெளிநடப்பு
    ஆயுதம் ஏந்துகிறார்கள் பக்தர்கள்
    ஆலறி ஓடுகிறான் கடவுள்

    கவிதையின் கடைசி இரண்டு வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. வன்முறை வெறியாட்டம் நடத்தி கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கட்டினால்,கடவுள் அலறி ஓடி விடுவார் என வன்முறையாளர்களுக்கு புத்திப் புகட்டும் விதமாக கவிதை உள்ளது.

    சுயவரம்

    சிறகுகள் உனக்கு சீதனமாய் வந்தன
    நீ சிலுவைகளை தயாரித்துக் கொண்டாய்
    பாரம் சுமப்பதாய்ப் பறைசாற்றுகிறாய்
    வரங்களே உனக்கு வழங்கப்பட்டன அவற்றை
    சாபங்களாய் மாற்றி ஏன் சங்கடப்படுகிறாய்?ஸ

    சுயவரத்தில் தவறானவர்களைத் தேர்வுசெய்து விட்டு தவிக்கும் பெண்களின் சோகத்தை சொற்களால் வடித்து உள்ளார்.

    நாதன் உள் இருக்கையில்,நட்டக் கல்லும் பேசுமோ என்ற சித்தர் பாடல்களை நினைவூட்டும் விதமாக ஒரு கவிதை உள்ளது.

    தேடல்

    கோவில் கோவிலாய் யாரைத் தேடுகிறாய்? கடவுளை
    உனக்குள் இருப்பவரை நீ எப்படி வெளியே பார்க்க முடியும்?
    அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதர்களாக இல்லை!
    நான் மனிதனாக இருக்கும் மனிதனைத் தேடுகிறேன்.

    மனிதன் மனசாட்சியை தன்னையே கடவுளாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும். மனிதனைத் தான் மனிதனாக இரு என்று அறிவுறுத்த வேண்டிய அவல நிலை.விலங்கிலிருந்து வந்தவன் தான் மனிதன். அதற்காக மனிதன் விலங்காக மாறக் கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டி உள்ளது. இன்றைய படைப்பாளிகளின் முக்கியக் கடமை என்னவென்றால்,மனிதனை மனிதனாக வாழ அறிவுறுத்தும் படைப்புகளே இன்றைய தேவையாக உள்ளது.

    பரமனுக்கு நீ தான் பாதுகாவலனா?
    கறுப்புப் பூனைப் படையுடன் காட்சியளிக்க
    கடவுள் என்ன கட்சித் தலைவனா?

    உண்மை தான்.இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களின் போது கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அப்படி இருந்தும் விரும்பத்தகாத மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மசூதி வழியாகத் தான் செல்வோம் என்பதும்,மசூதி முன்பு உரக்க மத்தளம் அடித்தல்,வம்பு இழுத்தல் வன்முறை வளர்த்தல் வாடிக்கையாகி வருகின்றது வேதனை.

    மலர்களை உதிர்க்கும் காற்றைக் கூட மன்னிக்க மனம் வராது
    மனிதர்களை உதிர்க்கும் மதவெறிகளுக்கு மண்ணில் இடம் ஏது?

    எந்த ஒரு தாயும் தன் மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புவான். அவன் கெட்டவன் ஆகி விட்டால் கொதித்துப் போவாள்.

    தலைப்புச் செய்தி

    விபத்தில் தப்பித்துக் கொண்ட தாய்
    செய்தி கேட்டுச் செத்துப் போனால்
    ரயிலுக்கு வெடி வைத்தவன் மகன்!

    தீபங்களை அணைத்து விட்டு,தீப்பந்தங்களை உயர்த்திப் பிடித்தபடி ஊருக்குள் புகுந்தது ஒரு மதவெறிக் குமபல். இந்திய தொழுநோய்க்கு மருத்துவம் பார்க்க வந்த ஆஸ்திரேலிய மூலிகை அதன் தங்கத் தளிர்களுடன் சாம்பல் ஆனது.

    ஓரிசாவில் ஸ்டீவர்ட் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியாரை குழந்தைகளுடன் எரித்துக் கொன்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிச் செயலுக்கான கண்டனத்தை கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

    யாதும் ஊரே

    சாதிமத சமயப்பூசல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
    முந்திய அழுக்கு நாட்காட்டிகள்
    மூலையில் வீச வேண்டிய அவற்றிலா முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

    பெரியகுளத்தில் பிறந்த கவிவேந்தர் மு.மேத்தா பெரிய உள்ளத்திற்குச் சொந்தக்காரர். சாதிமத மோதல்களை விடுத்து மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று மனிதநேயம் வலியுறுத்தும் விதமாக இந்த “மனிதனைத் தேடி” நூலை எழுதி உள்ளார். புதுக்கவிதை ரசிகர்களுக்கு பலா இந்த நூல். கண்ணீர்ப் பூக்கள் என்ற முதல் நூலி;ன் மூலம் பல்வேறு பதிப்புகள் வர காரணமாக இருந்த சாதனையாளர்,சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களின் தரமான படைப்பு. வளரும் கவிஞர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். கவி வேந்தர் என்ற பந்தா இல்லாத எளிமையான மனிதர். பழகுவதற்கு இனிமையான மனிதர். புதுக்கவிதைக்கு புதுப்பாதைப் போட்டவரின் பூபாளம் இந்நூல்.

  11. 11 On July 31st, 2010, era.eravi said:

    *
    காலந்தோறும் கண்ணதாசன்
    *

    *நூல் ஆசிரியர் : திரு.கே.ஜி.இராஜேந்திரபாபு
    நூல் விமர்சனம் : கவிஞர். இரா. இரவி*

    புதுகைத் தென்றல் வெளியீடாக புதுகைத் தென்றல் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின்
    தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. கே.ஜி. இராஜேந்திர பாபு வரலாற்று
    சிறப்பு மிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர். பாரத மாநில வங்கியில் பணிபுரிந்து
    வருபவர். பட்டிமன்றப் பேச்சாளர், பன்முக ஆற்றலாளர், புதுகைத் தென்றல் இதழில்
    மாதா மாதம் ஆவலுடன் படித்த கட்டுரை என்றாலும் முழுமையாக நூலைப் படிக்கும் போது
    கவியரசு கண்ணதாசனின் பிம்பம் உயர்கின்றது. இந்நூலிற்கு தமிழ்த்தேனீ முனைவர்
    இரா. மோகன் அவர்களின் முத்திரை பதிக்கும் அணிந்துரை அழகு சேர்க்கின்றது.
    திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் தனது வாழ்த்துரையில்
    நூலாசிரியரக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.
    புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை தருமராசன் அவர்களின் மகிழ்வுரை மனதைத்
    தொடுகின்றது. கவியரசு கண்ணதாசனின் அரிய புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன.
    கவியரசு கண்ணதாசன் பற்றிய மிகச்சிறந்த அவணமாக நூல் உள்ளது.
    நூலின் ஆரம்ப வரிகளிலேயே கவியரசு கண்ணதாசனின் பன்முக ஆற்றலை படம் பிடித்துக்
    காட்டுகின்றார் நூல் ஆசிரியர்.
    கவிஞர், செவியினிக்கப் பேசும் பேச்சாளர், உரைநடை எழுத்தாளர், திரைப்பட
    வசனகர்த்தா, கதாசிரியர், பத்திரிகை ஆசிரியர், படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர்,
    அரசியல்வாதி, ஆன்மிகவாதி என்று பன்முக ஆற்றலோடு பவனி வந்தவர் கவியரசு
    கண்ணதாசன். ஒவ்வொரு துறை பற்றிய விளக்கம் அருமை.
    சகலகலா வல்லவராகத் திகழ்ந்தார் என்பது உண்மை. நேரு பிரான் மறைந்த போது, *‘சாவே,
    உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா” *என்று அவர் எழுதிய வரிகள் இரங்கல் கவிதையின்
    உச்சம். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளது.
    பாரதிக்கு சிந்து, பாரதிதாசனுக்கு எண்சீர் விருத்தம், கண்ணதாசனுக்கு அறுசீர்
    விருத்தம் கைவந்தவை, அவரது தென்றல் இதழ், புயலை உருவாக்கியது. மாறும் உலகின்
    மகத்துவம் அறிவேன், மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல என்று பாடியவர். இப்படி
    கவியரசு கண்ணதாசனை உள்வாங்கி, உணர்ந்து, ஆய்ந்து, தோய்ந்து கட்டுரை
    வடித்துள்ளார் நூல் ஆசிரியர்.
    கவிஞன் தொலைநோக்கு சிந்தனையாளன். அதனால் கவிஞன் கணிப்பு பொய்ப்பதில்லை என்பது
    உண்மை.
    *‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை”*
    கவியரசு கண்ணதாசன் எழுதிய வைர வரிகள் இன்றளவும் அவருக்குப் பொருந்துவதாகவே
    உள்ளது. நூலாசிரியர் இவ்வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
    விருப்பமில்லாத வாழ்க்கை, வீணை கையிலே வெறுப்பு மனத்திலே, அதை விவரிக்கிறார்
    பாட்டிலே.
    *இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?*
    இப்படி கருத்தாழம் மிக்க அற்புத வரிகளை நூலில் மேற்கோள் காட்டிகண்ணதாசன்
    இன்றும் வாழவதை கட்டுரைகளில் நிலைநிறுத்தி உள்ளார் நூல் ஆசிரியர். காலத்தால்
    அழியாத கனியினும் இனிய அற்புதமான பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார். இதனைப்
    படிக்கும் போது இன்றைய பாடல் வரிகள் என் நினைவிற்கு வந்தது. நிழலின் அருமை
    வெயிலில் தெரியும் என்பார்கள். கண்ணதாசனின் அருமையை இன்றைய பாடல் ஆசிரியர்கள்
    நமக்கு நன்கு உணர்த்தி வருகின்றனர்.
    கவியரசு கண்ணதாசன் தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சொல் விளையாட்டு
    நிகழ்த்துவார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நூலில் உள்ளது.
    ஒரு நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டினார் கவிஞர். உள் இருந்தபடியே நண்பர்
    கேட்டார் who is outstanding ., கவிஞர் சொன்னார்.outsatnding poet.outsatnding
    ஆங்கிலத்திலும் அறிவார்ந்த சொல் விளiயாட்டு. கண்ணதாசன் பாட்டிலேயே
    பட்டிமன்றம் நடத்தியவர். எடுத்துக்காட்டு.
    *அன்னத்தைத் தொட்ட கைகளினால் – மதுக்கிண்ணத்தை
    இனி நான் தொட மாட்டேன்
    கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
    மதுவருந்தாமல் விட மாட்டேன்*
    இப்படி திரைப்பாடல்களில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பாடல் எழுதிய ஆற்றலை
    வியக்கின்றார் நூல் ஆசிரியர்.
    உழைக்கும் கரங்களின் மகத்துவத்தைத் தனிப்பிறவி படத்தில் பாடுகிறார் கண்ணதாசன்.
    *உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
    உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே*
    பொதுவுடைமை சிந்தனையும், கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு என்று நிரூபிக்கும்
    பாடல்.
    *எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.*
    *வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
    வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை*.
    கவியரசு கண்ணதாசன் கண்ட பொதுவுடைமைக் கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்று
    நாட்டில் நடப்பது, பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும்
    ஏழையாகின்றான். இந்த நிலை மாற வேண்டும்.
    கவியரசு கண்ணதாசனுக்கு மனிதாபிமானம் மட்டுமல்ல, விலங்காபிமானமும் உண்டு என்பதை
    உணர்த்தும் பாடல்.
    *வளர்த்த பிள்ளையும் மாறி விடும்
    வாழும் உறவும் ஓடி விடும்
    வாயில்லாத உயிரை வளர்த்தால்
    காடு வரைக்கும் கூட வரும்.*
    கண்ணதாசன் கம்பனைச் சாடிய காலகட்டத்திலேயே, கம்பன் மேல் உயர்வான கருத்தையே
    வைத்திருந்தார்.
    *வார்த்தை தமிழுக்கு வழங்கும் தமிழ்வேந்தன் கம்பன்* என்கிறார் கண்ணதாசன்.
    பாசம் என்ற படத்திற்கு கம்பன் பாணியிலேயே பாடல் எழுதியுள்ளார் கண்ணதாசன்,
    *பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்*.
    இப்படி கம்ப இராமாயணத்தில் தாக்கத்தை பல பாடல்களில் பயன்படுத்தி உள்ளதை
    நூலாசிரியர் திறம்பட எடுத்து இயம்புகின்றார்.
    பத்திரிக்கைத் துறையிலும் முத்திரை பதித்தவர் கண்ணதாசன்.
    கவியரசு கண்ணதாசன் தேர்ந்தெடுத்து பதிப்பித்த வெண்பாக்கள் நூலில் உள்ளது.
    சிறப்பாக உள்ளது, ரசனைக்குரிய இலக்கிய வரிகள்.
    *ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
    இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா*

    * பெண்ணுரிமைக்கும் குரல் கொடுக்கிறார் கவியரசு.*

    * சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மாநிலமே!
    ஜீவனுள்ள பெண் இனத்தை வாழவிட மாட்டாயோ!*
    காதல் ரசம் சொட்டச் சொட்ட, அதே நேரத்தில பண்பாட்டோடு எழுதுவதில் வல்லவர்
    கவியரசு.
    *ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே!
    ஆலயமணியின் இன்னிசை நீயே!
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே!
    தங்கக் கோபுரம் போல வந்தாயே!*
    தாய்மை எனக்குத் தந்தவள் நீயே என வித்தியாசமாக சிந்திக்கிறார்.

    காலந்தோறும் கண்ணதாசன் உண்மை, கால காலத்திற்கு கண்ணதாசன் நிலைப்பது உண்மை,
    படைப்புகளால் இன்றும் என்றும் வாழ்வார். கண்ணதாசன் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு
    நூலாக வழங்கி உள்ள நூலாசிரியர் கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு அவர்களுக்கும்,
    இந்த அரிய படைப்பை நூலாக வழங்கிய புதுகை தருமராசன் அவர்களுக்கும்
    பாராட்டுக்கள்.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
  • An error has occurred; the feed is probably down. Try again later.
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!


வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்


புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


புதுச்செய்திகள்


வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names