புத்தக மதிப்புரை : என்னோடு நீ
- நூலின் பெயர் : என்னோடு நீ
- நூல் ஆசிரியர் :சு.சோலைராஜா
- மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா
கோபுர வாயில்:
கவிஞர் சோலைராஜாவின் முத்தான முதல் நூலான’ என்னோடு நீ- எனும் நூலை ஒரு கதம்ப நூல் எனலாம். மரிக்கொழுந்தும், மல்லிகையும், கவின்மிகு கனகாம்பரமுமாய்த் தொகுக்கப்பட்ட இக்கதம்பச் சரம் கமகமக்கும் நறுமணத்துடன்,நூலை வாசிப்போர் மனதில் பரவுகின்றது.
இரத்த ஓட்டம்:
கிராமம்,நகரம்,வறுமை,வளமை,அலங்கோலம்,அலங்காரம்,அன்பு, ஆணவம்,இலட்சியம்,அலட்சியம்-என இருவேறு முரண்பட்ட தன்மையுடைய நாயகன்,நாயகியைப் பாத்திரங்களாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான நூல் இந்த என்னோடு நீ – நூல்.தேனும் மானுமாக,கொக்கும் குருவியுமாக,மயிலும் குயிலுமாக,பகலவனும் பால்மதியுமாக,தென்றலும் புயலுமாக எழிலுறப் பயணிக்கிறது இந்நூலின் கதையோட்டம்.
மைய மண்டலம்:
கிராமத்து நாயகன் ஒருவன் மண்வாசனையும் வியர்வை வாசனையுமாய்,கல்லூரிக் கல்விக்கென நகரத்திற்கு வந்து சேர,கூடியிருப்போர் வறுமை அவனை , பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் ,நக்கலுக்கும் நையாண்டிக்கும் உள்ளாக்குகிறது.கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவோ அவனை கல்லூரி கதாநாயகனாகவே உருமாற்றி விடுகின்றது. இதுவரை நாயகனை ஏளனமாய்ப் பார்த்த கதையின் நாயகியை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்க வைக்கிறது அவனின் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்.தமிழன்னையின் இதயத்தில் இடம் பிடித்த காவிய நாயகன், நாயகியின் கரம் கோர்த்தானா?இல்லையா என்பதனை விவரித்துச் செல்கின்றது நூலின் முற்பாதி.கற்பனையா? நிஜமா? என உய்த்துணர முடியாத அளவிற்கு,கதைக்குள் கதையாய் ஆசிரியர் கற்பனைக் கோட்டையைக் கட்டி,அக்கோட்டைக்குச் செல்வதற்கென கனவுப் பாலம் அமைத்துத் தருவது இந்த நீள்கதையின் மறுபாதி.
கருத்துப் புதையல்:
‘என்னோடு நீ’-எனும் இந்த நூலில் எட்டுத்தொகை எட்டிப் பார்க்கின்றது.புதுக் கவிதை புனலாடுகின்றது.மரபுக் கவிதையோ மன்றாடுகின்றது.இதிகாச நிகழ்வுகளோ இடையிடையே இழையோடுகின்றது. நன்னூல் நடை பயில்கின்றது.அறிவியல் செய்திகள் ஆங்காங்கே தெளித்துக் கிடக்க ,சரித்திரக் கருத்துக்களும் அத்தோடு சங்கமிக்கின்றன.இந்நூலில் கிளிப்பிள்ளை கீரிப்பிள்ளையாகின்றது;மாக்கோலம் பூக்கோலமாகின்றது;அலைகளுக்கு மோகம் வருகின்றது;இரயில்பூச்சிக்கு நாணம் வருகின்றது;பசும்புற்கள் தவம் புரிகின்றன.காட்டுச் செடிகள் வரவேற்புரை வழங்குகின்றன.சிக்கிமுக்கி கற்கள் கூட சிணுங்கிக் கொண்டே ரீங்காரமிடுகின்றன.நிலவும் சூரியனும் பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்க ,வியர்வையும் கண்ணீருமோ போட்டிப்போட்டிக் கொண்டு நூலை நிரப்பிச் செல்கின்றது.அத்தியாயங்கள் சில வேளைகளில் வெள்ளிய மேகங்களைப் போல மெதுவாகவும் ,பல வேளைகளில் கருமேகங்களைப் போல வேகமாகவும் நகர்கின்றன.
சொல்விளையாடல்:
“அவளுக்கு அழைப்புமணி
என் கவிதைக்கு ஆலயமணி
இதயத்திற்கு ஆராய்ச்சி மணி
பெற்றோர்க்கு அபாயமணி
காதலுக்கோ சாவுமணி”
கல்வெட்டு வரிகள்:
பிள்ளைகள் அநாதையானால் அது
பிறப்பில் பிழை!
பெற்றோர் அநாதையானால் அது
ஆயுள்பிழை!
மனமார…
‘அதீத அன்பு’-எனும் வட்டத்திற்குள் சிக்கித்தவிப்பவர்க்கு ‘என்னோடு நீ’-எனும் இந்நூல் நல்லதொரு பாடம் .இனி சிக்கித் தவிக்க இருப்பவர்க்கோஇந்நூல் ஓர் எச்சரிக்கை! ‘ஆள்பாதி ஆடைபாதி’-எனும் பழமொழி ஒருபுறமிருக்க,அறிவு பாதி ஆற்றல் பாதி என்ற புதுமொழியைப் புகட்ட வந்ததே என்னோடு நீ-எனும் நூல்.வலதுகரத்தில் தமிழன்னை,இடதுகரத்தில் இயற்கை அன்னை-என இருவரைக் கரம்பற்றிச் செல்லும் கவிஞர் சோலைராஜா இலக்கிய உலகில் ஒளிர்விடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது உண்மை.