• TamilBookMarket.com

 • புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை


Jul 24

புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை

 • நூலின் பெயர் :  ஹைக்கூ ஆற்றுப்படை
 • நூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி
 • மதிப்புரையாளர் : முனைவர் பேராசிரியர் இராம.குருநாதன

ஹைக்கூ வடிவக் கவிதை வளர்ச்சி மலரும்   புலர் பொழுதுகளில் இருந்து விடுபட்டு மெலிந்து போய்விட்ட உணர்வு இருந்து வருகிறது .அந்தக் கவலை நீங்கும்   நாள்  எந்நாளோ என்று நினைக்கையில் ஊட்டச்சத்தாக வெளிவந்து இருப்பது கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் நூலாகும் .ஒரு படைப்பாளியை இன்னோரு படைப்பாளி நன்கு அறிந்து கொள்வது இயல்புதானே .
ஹைக்கூ கவிஞரான கவிஞர் இரா .இரவி தன்னொத்த ஹைக்கூக் கவிஞர்களின் படைப்புகளைத் திறம்பட திறனாய்வு செய்துள்ளார் . கவிஞர் ஒவ்வொரு நாளையும் கூர்ந்தறிந்து தமக்கே உரிய பாணியில் மதிப்பீடு செய்துள்ளார்.படைப்பாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தம் கண்ணோட்டங்களை நடுநிலையோடு திறனாய்கிறார்.படைப்பாளி ஒரு நல்ல சுவைஞனாக இருக்கும் நிலையில் இது சாத்தியமே . கவிஞர் இரா .இரவி தாம் படித்துச் சுவைத்திருக்கும் நூல்களில் இருந்து திரட்டித் தந்துள்ள பாடல்களும் , அவற்றின் மீதான கருத்தோட்டங்களும் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்லர் என்பதனை நிலைநாட்டும் .அவர் நுணுகி ஆய்ந்து சுவைத்த ஹைக்கூ மேற்கோள்கள் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் .
ஹைக்கூ என்றால் என்ன என்பதனை எளிமையான விளக்கத்தால் சொல்லி அதற்கான எடுத்துக்காட்டைச் சுவைபடத் தந்துள்ளதைப் பலவாறு புகழ்ந்துரைக்கலாம் .அமுதபாரதியின் ஹைகூகளைப் பற்றிச் சுருக்கமாகத் தொடக்கத்திலேயே குற்றால் அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கிறது என்று சொல்லி நூலில் நுழையச் செய்கிறார் .
கவிஞர் மு .முருகேஷ் எழுதிய நிலா முத்தம் என்னும் நூலினைச் சுவைத்த கவிஞர்,முழு நிலவு நாளன்று அமைதியாகத் தனிமையில் நிலவை ரசித்த இன்பத்தைத் தருகின்றதுஎன்று எழுதியுள்ளமை மு .முருகேஷ் கவிதைகளைப் படிக்கத் தூண்டும். இன்றைய சூழ்நிலையில் இயற்கையை இரசிக்க மனிதனுக்கு நேரம் இல்லாது போய் விட்டது .அதனை ஹைக்கூவிலாவது ரசிக்கலாமே என்ற தம் ஆதங்கத்தையும் ,ஆர்வத்தையும் சிபி எழுதியுள்ள மகரந்த ரகசியங்கள் என்ற நூலிற்கான மதிப்பீட்டை அழகுற மொழிந்து உள்ளதை ஏற்கும் அதே வேளையில் அந்த நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார் .
இன்வரும் காலங்களில் பட்டாம் பூச்சி ,பனித்துளி தவிர்த்துப் பாடுங்கள் .நீங்களே நிறைவாகப் பாடி உள்ளீர்கள் .என்று கூறி இருப்பது ,அன்பின் பொருட்டே ,அது கூறியதாகாது . இயற்கைக் காட்சிகள் ஊடே வாழ்வியலை வடித்து வட்டிலில் வடிவதை சிமிழுக்குள் செதுக்கும் வித்தையோடுமட்டும் விளங்கி நிற்பதில்லை இன்றைய ஹைக்கூப் பாடுபொருள்ஹைக்கூ இன்றைய நடப்பு நிலைகளையும் எடுத்துக் காட்டப் பயன் படுகிறது .ஹைக்கூ வடிவம் அதற்கும் அடிபணிந்துள்ளது. குறிஞ்சி பூக்கள் என்னும் வீ .தங்கராசுவின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இன்றைய நடப்பைச் சித்தரிக்கும் ஒரு ஹைக்கூ கவிஞர் இரவியால் அடையாளப் படுத்தப் பட்டுள்ளது .இது அந்த ஹைக்கூ .
தேர்தல் கமிசன் பெயரே சரியில்லை
தேர்தலுக்குப் பின் எல்லாமே
கமிசன் மயம்
இது வருவது உரைத்தலா ?  வந்தது உரைத்தலா ?  என்னும் அளவிற்கு இன்றிய நடப்பினைக் காட்டுகிறது .பரிமளம் சுந்தரின் ஆய்வேடான ஜப்பானிய -தமிழ் ஹைக்கூக் கவிதைகள் ஓர் ஒப்பாய்வு என்ற நூல் பற்றிய இரவியின் கருத்துக்கள் சரியான மதிப்பீடாகத் திகழ்கிறது .
ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்குரிய செய்தியாக அவர் கூறி இருக்கும் கருத்தான ,ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பிடு உள்ளவர்கள் இந்நூலைப் படித்தால் மாறுவது உறுதி என்று ஹைகுப் பற்றி மாறான கருத்துக் கொண்டோரை வசை பாடாமல் கனிவோடு கடிதோச்சும் பண்பினைக் கவிஞர் இரா .இரவி வசம் காண்கிறோம் .
கவிஞர் நாணற்காடனின் கவிதைத் தொகுப்பை கவிஞர் படித்ததும் எழுதுகிறார் .கடுகு சிறியதுதான் காரம் பெரிது .அது போல ஹைக்கூ வடிவம் சிறியதுதான்.அனால் தாக்கம் பெரிது .என்று சுட்டி இருப்பது ஹைக்கூ பற்றிய எளிய விளக்கம் .
ம .ஞானசேகரனின் இரு ஹைக்கூ நூல்களை ரசித்து எழுதியுள்ள கருத்துக்கள் இனிமை .அருமை .தமிழ்மணி ,விநாயமூர்த்தி ,கவிமுகில் , வசீகரன்,  கன்னிக்கோயில் ராஜா,தமிழ்நெஞ்சன்,அமரன் ஆகியோரது ஹைக்கூக் கவிதைகளில் மனம் பதித்துக் கவிஞர் இரா .இரவி உளந்தோய எழுதி உள்ள கருத்துக்கள் .அவர் ஒரு படைப்பாளி மட்டும் அல்ல ,நல்ல திறன் ஆய்வாளர் என்பதனை மெய்பிக்கும் .அதனை எண்ணிப் பெருமிதம் அடையலாம் .அந்த அளவிற்கு அவரது ஹைக்கூக் குறித்த மதிப்பீடுகள்நூலை உயர்த்துவன .பலரிடம் கொண்டுசெல்லும் தூதுவனாக விளங்குவன .
ஆற்றுப்படை என்பதன் இலக்கணமே தாம் பெற்றதை அடித்தவருக்கு எடுத்துச் சொல்லி அவரும் தக்கவாறு பயன் கொள்ளச் செய்வதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக நூலின் தலைப்பினைத் தெரிவு செய்து இருப்பது போற்றுதற்குரியது
பதிப்பு : Sunday, July 24th, 2011 at 2:04 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

*17 மறுமொழிகள் - “புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை”

 1. 1 On October 8th, 2011, கவிஞர் இரா .இரவி said:

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

 2. 2 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள்
  நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி jcinixon@gmail.com

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி – 620 003.
  பேச : 94432 84823 ; விலை : ரூ. 50/-
  *****
  நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களின் காதல் கவிதை நூல் இந்த நூலை, தங்களுக்காகவே தியாக வாழவை வாழும் அம்மாவின் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளார், பாராட்டுக்கள்.

  காதல் என்பது அன்றும், இன்றும், என்றும் ரசிக்கப்படும் உணர்வு. காதல் உணர்வு உணர்ந்தவர்களுக்கு மட்டும் கூடுதலான உணர்வு தரும். காதல் கவிதை பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும். மற்ற கவிஞர்கள் முதலில் காதல் கவிதை தொடங்கி பிறகு மற்ற கவிதைக்கு வருவார்கள். இவர், முதலில் மற்ற கவிதைகள் எழுதி, பிறகு காதல் கவிதை எழுதி உள்ளார்.

  இனிய நண்பர் நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் பதிப்புரை நன்று. நூலை நேர்த்தியாக பதிப்பும் செய்துள்ளார். பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்பார்கள். புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்பார்கள் .புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்களான இனிய நண்பர்கள்,கவிஞர்கள்
  மு. முருகேஸ், ஏழைதாசன் மாத இதழ் ஆசிரியர் எஸ். விசயகுமார், தங்கம் மூர்த்தி வரிசையில் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் ரமா. ராமநாதன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.

  மற்றவர்கள்

  திருமண அழைப்பிதழ்களைக்
  காணும் போதெல்லாம்

  நம் பெயரை
  சேர்த்து வைத்து

  சொல்லிப் பார்க்கிறேன்
  சில நேரங்களில்

  சப்தமாகவும்
  மனதுக்குள்

  மவுனமாகவும் !

  உண்மையான காதல் வயப்பட்ட காதலர்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டுமென்ற விருப்பம் வரும். விருப்பத்தின் விளைவாக மற்றவர் திருமண அழைப்பிதழ் காணும் போதெல்லாம் தங்கள் பெயரை கற்பனை செய்து பார்க்கும் உள்ளத்து உணர்வை கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி.

  காதல் வயப்பட்டவர்கள் கல்வி மறந்து, வேலை தேடாமல் நாட்களை விரயமாக கழித்த அனுபவத்தை ஒப்புதல் வாக்குமூலமாக நன்கு பதிவு செய்துள்ளார் பாருங்கள்.

  சில பேரிடம்

  பல வரவுகளை
  பரிசாகப் பெற்றுத் தந்தாய்

  பாவம் அப்போது புரியவில்லை
  இப்போது தான் புரிகிறது

  உன் பின்னாடித் திரிந்த
  நாட்களில்

  வேலை தேடியிருந்தால்
  ஒருவேளை

  வேலை கிடைத்திருக்கக் கூடும்.

  ஆம், வேலையைத் தேடி, வேலையில் அமர்ந்து விட்டு காதலிப்பது நல்லது என்பதை அறிவுரையாகக் கூறுவது போல உள்ளது.

  மழைக்குக் குடையாக வருவதில்
  விருப்பம் இல்லை எனக்கு!
  வெய்யில்

  நிழலாக வரவே

  விரும்புகின்றேன்.

  வித்தியாசமாக எழுதி உள்ளார். மழைக்கு குடை என்பது மழையின் போது மட்டுமே பயன்படும். ஆனால் நிழல் எப்பொதும் உடன் இருக்கும்.

  காதலை உணர்ந்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து எழுதி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதிக்கு காதல் அனுபவம் இல்லாமல் இப்படி கவிதை எழுத முடியாது. கவிதையில், உண்மை இருப்பதால் படிக்கும் வாசகர்கள் மனதில் அவரவர் காதலை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் உணரும் வைர வரிகள் இதோ:

  எல்லாரையும் மறந்து விட்டு
  உன்னை மட்டுமே
  நேசித்தேன்…
  இப்போது தான் புரிகிறது
  உன்னைத் தவிர
  எல்லோரும் என்னை
  நேசிப்பது …!

  காதலனுக்கு காதலி அருகில் இருந்தால் நேரம் போவது தெரியாது. அந்த நேரங்களில் காதலி தவிர வேறு எதுவும் முக்கியமாகத் தெரியாது. அந்த உணர்வை நன்கு உணர்த்திடும் கவிதை ஒன்று.

  கவிதைகள்

  எவ்வளவு

  அழகாய் இருந்தாலும்
  படிக்கப் பிடிப்பதில்லை

  அவள்
  அருகில் இருக்கும் போது மட்டும்.

  மழையில் நனைந்து நடப்பதும் ஓர் அழகு தான். மழைக்குப் பயந்து ஒதுங்குபவர்கள் தான் பலர். சிலர் மட்டுமே மழையில் நனைந்து பரவசம் அடைவார்கள். மகிழ்வான தருணமாக அமையும். காதலைப் போலவே, உணர்ந்தவர்கள் மட்டும் உணர்ந்திடும் உன்னத உணர்வு. அதனை உணர்த்தும் கவிதை.

  நனைந்து பார்

  ஒரு நாள்

  மழையில்
  குடை எதற்கு

  என்பாய்…!

  நூலாசிரியருக்கு மழை மீது காதலியைப் போலவே அன்பு உள்ள காரணத்தால் மழை பற்றி பல கவிதைகள் உள்ளன. காதல் தோல்வி காரணமாக காதலியை திட்டித் தீர்க்காமல் தோல்வியையும், நேர்மறை சிந்தனையுடன் ஏற்றுக் கொள்கிறார்.

  உன்னைக்

  காதலித்ததில் கூட

  மகிழ்ச்சி தான்
  காரணம்

  வாழ்வின் வலிகளை

  கற்றுத் தந்தவள் நீ
  உன் காதலில்

  மிச்சமானது

  இந்த கவிதைகள் மட்டும் தான் !

  காதலில் தோல்வியடைந்தாலும் காதல் கவிதைகள் கிடைத்து விடுகின்றன. நூலாகவும் வந்து விடுகின்றன. நூல் முழுவதும் காதல், காதல், காதல், காதல் தவிர வேறில்லை. காதல் கவிதைகள் படிக்கச் சலிப்பதே இல்லை. நிலவு போன்றவை.

  கரையோர பாத சுவடுகள்
  கனவில்

  உன்னைக் காணும் போது
  கனவு

  அழகானது !
  கற்பனையில்

  உன்னை நினைக்கும் போது
  கற்பனை அழகானது.

  சில கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் சொந்த அனுபவத்தையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன. பாராட்டுக்கள்.

  விடுமுறைக்காக இறந்த பின்னும்

  பலமுறை இறந்த
  தாத்தா… பாட்டிகள் …

  விடுமுறையில் வீட்டுப்பாடம்
  செய்யாமல்

  காய்ச்சல் வந்த தாய்

  நடித்த நாட்கள்
  தேர்வு நாட்களில்

  மழை வர வேண்டும்

  மழை வர வேண்டும்
  என்று

  மன்றாடிய நாட்கள்

  மாணவர்களுக்கும்
  ஆசிரியர்களுக்கும்

  நாங்கள் சூட்டிய பெயர்கள்
  என் வயது தோழிக்காக

  தோழனுடன்
  வந்து போன மோதல்கள்

  எல்லாமே
  ஞாபகத்தில் வந்து போனது

  என் மகனை
  பள்ளியில் சேர்க்க வந்த போது …!

  நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் வித்தியாசமானவை. எழுதி வைக்காமல் மனதில் பதித்து வைத்த நினைவுகளை கவிதைகளாக்கி உள்ளார். நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .காதல் கவிதைகள் போதும் அடுத்த நூல் சமுதாய சிந்தனை நூலாக இருக்கட்டும்

 3. 3 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ !

  நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி.
  நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
  [/size]

  விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.
  0422 2382614. விலை : ரூ. 45.

  *****
  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, ஹைக்கூவிற்கு பொருத்தமான புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக அச்சிட்ட விஜயா பதிப்பகத்திற்கும் அதன் உரிமையாளர் அய்யா வேலாயுதம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  சென்னை சென்ற போது இலக்கியத் தேனீ இரா. மோகன் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி. ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இளவல் இவர் என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். மதுரையில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக கடைக்கு சென்ற போது கண்ணில் பட்டது இந்நூல், உடன் வாங்கி வந்து படித்து விமர்சனம் எழுதி உள்ளேன்.

  ஹைக்கூ கவிதை வாசிப்பது என்பது வாசகருக்கு சுகமான அனுபவம். படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கும் உணர்த்துவது ஹைக்கூ கவிதையின் சிறப்பாகும். நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள் உணர்ந்த உணர்வை நானும் உணர்ந்தேன், நீங்களும் உணர்வீர்கள்.

  ஹைக்கூ எழுதுவதும் ஒரு கலை. அக்கலை கைவரப்பெற்றால் ஹைக்கூ சிலைகள் பல உருவாகும். நூல் முழுவதும் பல சிலைகள் இருந்தாலும் மிகவும் பிடித்த சிலைகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். சென்னிமலை என்ற பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பெயரோடு பிறந்த ஊரை சேர்த்துக் கொண்டமைக்கு முதல் பாராட்டு.

  இந்த நூலிற்கு அழகிய அணிந்துரை வழங்கி உள்ள அமரர் பேராசிரியர் முனைவர் கவிஞர் பாலா அவர்களையும் எனக்கு மதுரையில் நடந்த இலக்கிய நிகழ்வில் அறிமுகம் செய்து வைத்தது தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தான். கவிஞர் பாலா நல்ல பண்பாளர், நல்ல விமர்சகர், அவர் பாராட்டி இருப்பதே நூலாசிரியருக்கு பரிசு தான்.

  மரக்கிளையில் தூளி
  பாடுகிறாள் பாட்டு
  கைகளில் நாற்று !

  கிராமத்தில் நாற்று நடும் பெண்ணையும், மரத்தையும், மரத்தில் உறங்கும் தொட்டில் குழந்தையையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றது.

  மழை ஓய்ந்த மாலை
  புல்வெளியில் நாற்காலி
  தேநீர் சுகம்!
  புல்வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்துவது இதமோ இதம். ஹைக்கூ படிக்கும் போதே மழைநாளில் தேநீர் குடித்த நிகழ்வு நினைவிற்கு வந்து விடும். அது தான் நூலாசிரியர் படைப்பாளியின் வெற்றி.

  சவ ஊர்தி ஓட்டுபவன்
  மகிழ்வுந்தில் ஊர்வலம்
  மாப்பிள்ளைக் கோலம்!

  எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடிப்பது ஒரு யுக்தி. மணமகனுக்கும் வித்தியாசமான அனுபவம் என்பதை உணர்த்துகின்றது.

  வாழ்வின் நிலையாமை என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக, யாருக்கும் நிரந்தரமன்று இந்த உலகம். அதிகம் ஆட்டம் போடாதே, விரைவில் அடங்கி விடுவாய் என்பதை போதிக்கும் விதமான ஹைக்கூ இதோ!

  வெட்டியான் கவலை
  எவர் வருவாரோ?
  தனக்கொரு குழி வெட்ட!

  ஹைக்கூவில் முதல் இரண்டு வரிகள் படித்து விட்டு, மூன்றாவது வரியைப் படிக்காமல் சிந்தித்துப் பார்த்து நாமாக ஒரு விடை யூகம் செய்து விட்டு பிறகு மூன்றாவது வரி படித்தால் எள்ளல் சுவை தெரியும்.

  மாமியார் மரணம்
  மருமகள் அழுகை
  எங்கே இருக்கும் நகைகள்?

  படைப்பாளி ஒன்றை நினைத்து ஹைக்கூ வடித்து இருப்பார். ஆனால் வாசகர் மற்றொன்றை நினைத்து பொருத்திப் பார்க்கலாம் ஹைக்கூ கவிதைகளை. அந்த வகையில் இதோ ஒரு ஹைக்கூ.

  மலையேறும் பக்தர்கள்
  குரங்குகள் தரிசனம்
  கவனம் வாழைப்பழம்!

  அழகர்கோயில் செல்லும் வழியில் குரங்குகள் வாழைப்பழம் பறிப்பதைப் பார்த்து இருக்கிறேன். அது நினைவிற்கு வந்த போதும், சாமியார்களை தரிசனம் செய்யும் பக்தர்களிடம் சாமியார்கள் தட்சணை என்ற பெயரிலும், பரிகாரம் என்ற பெயரிலும் பணம் பறிக்கும் நிகழ்வோடு இந்த ஹைக்கூவைப் பொருத்திப் பார்த்தேன். அரசியல்வாதிகளோடும் பொருத்திப் பார்க்கலாம். இது தான் ஹைக்கூ கவிதையின் சிறப்பு அம்சமாகும்.

  தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடருக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். நிம்மதியாக உறங்கப் போகும் நிம்மதியின்றி பழிக்குப்பழி வாங்கும் வக்கிரம் நிறைந்த சோகத்தை பிழிந்து கண்ணீர் வரவழைக்கின்ற தொடர்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிப் போட்டு ஒளிபரப்பி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்த முகங்களே திரும்பத் திரும்ப வந்து ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றனர். தொடரில் நடிப்பது மட்டுமன்றி அந்த நடிகர் நடிகைகளை பிற நிகழ்ச்சிகளிலும் வந்து ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகின்றனர். தொடரைச் சாடும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.

  உறங்கும் நேரம்
  ஒப்பாரி ராகம்
  தொலைக்காட்சி நாடகம்!

  மரத்தை வெட்டிச் சாய்க்கும் வீணர்களுக்கு புத்திப் புகட்டும் விதமான ஹைக்கூ நன்று.

  மரத்தை மரமாகப் பார்த்தால்
  மரம் இருக்கும்
  மரமாக.

  மரத்தை விறகாக பார்க்காதே, வீணையாகவும் பார்க்காதே, மரம் மரமாகவே வாழட்டும் என்கிற சிந்தனை வலியுறுத்தும் விதமாக நன்று.

  இந்தியாவில் பல கோடிகள் செலவழித்து ஏவுகணைகல் ஏவிய போதும் நாட்டில் வறுமை மட்டும் இன்னும் ஒழிந்த பாடில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான். ஏழை மேலும் ஏழையாகின்றான். வறுமையின் கொடுமை உணர்த்தும் ஹைக்கூ நன்று.

  ஞானம் வேண்டாம்
  சோறு வேண்டும்
  காகிதம் பொறுக்கும் சிறுவன் !

  தந்தை பெரியார் சொன்னது போல அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் சுத்தமில்லை எனபதையே மெய்ப்பித்து வருகின்றனர்.

  கட்சிக் கூட்டம்
  வெட்கம் தாளவில்லை
  முக்காட்டுடன் பொய்.

  நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

 4. 4 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  தொடர்பு எல்லைக்கு அப்பால் !

  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,

  அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.

  பேச : 98411 81345

  விலை : ரூ. 70

  *****

  நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.

  நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.

  தொடர்பு
  எல்லைக்கு அப்பால்
  உறவுகள் !

  உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.

  பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..

  நாளைய கூலிக்கு
  இன்று சுமக்கிறார்கள்
  மாணவர்கள்!

  முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.

  சமாதானத்திற்காக
  நடந்து கொண்டிருக்கிறது
  போர்.

  உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

  மருந்து போடப் போய்
  காயப்பட்டு வருகிறேன்
  உறவுகள்!

  தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.

  அமோக
  உண்டியல்
  பாவத்தின் கூலி?

  இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.

  எவ்வளவு பெரிய
  குப்பைத்தொட்டி
  மனம் !

  மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.

  இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.

  வானக் கடல்
  மேகவலை, அகப்படவில்லை
  விண்மீன் !
  இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.

  திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.

  மேய்கிறது
  அடங்கவில்லை பசி
  கண்!

  சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!

  மண்ணில் புதைந்தும்
  மரிக்கவில்லை
  விதை !
  வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.

  இலட்சங்கள் கொட்டி
  வாங்கிய லாட்டரி
  கணவன் !

  வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.

  ஒவ்வொரு முறையும்
  தலைப்பிரசவம்
  தீக்குச்சி !

  இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.

  பொதுப்பட்டியல்
  விலைப்பட்டியல் ஆனது
  கல்வி !

  இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

  கீறல்கள்
  புத்தர் முகம்
  முள்வேலி முகாம் !

  பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.

  இதயம் தொடும்
  இலவச சிரிப்பு
  பூக்கள்
  சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

  விதியால்
  மரணத்தை வெல்லலாம்
  சாலை விதி !

  நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.

  தினம் ஊர்ந்தால்
  தேயாமல் எப்படி ?
  நிலா !

  நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.

  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .

  .

  நன்றி

 5. 5 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  விழிப்புணர்வு !

  நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் !

  அலை பேசி 9841042949
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  புதுகைத் தென்றல் வெளியீடு
  எண் 24 ( பழைய எண் 13 எ )

  திருநகர் முதன்மைச் சாலை ,வாடா பழனி ,சென்னை ,600026
  *****

  நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அருமை. விழிப்புணர்வு என்ற தலைப்புக்கு ஏற்றபடி இருளில் மூழ்கி விடாமல் விழித்துக் கொள்ள ஒளி காட்டுவது போலவும், தீங்குகளை தயக்கம் இன்றி கொளுத்தி விட வேண்டும் என்பது போலவும் விரல்களில் தீக்குச்சி ஏந்திய அட்டைப்படம் சிறப்பு.

  புதுகைத் தென்றல் என்ற மாத இதழ் 2003ஆம் ஆண்டு தொடங்கி தொய்வின்றி வந்து கொண்டிருக்கிறது. இதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் போல தான். நூலாசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள் பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்தவர். சங்கப் பணிகளில் அங்கம் வகித்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் என்று ஓய்வு எடுக்காதவர். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், நானும் சென்னை சென்ற போதெல்லாம் அவருடையில் மகிழுந்தில் பல நாள் பயணம் செய்துள்ளோம். அவரே ஓட்டி வருவார்.

  நல்ல பண்பாளர், இவரது வெற்றிக்கு இவரது மனைவி பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களும் துணை நிற்கிறார். சென்னையின் இலக்கிய இணையர் இவர்கள். நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் சென்னைக்குச் சென்று பல ஆண்டுகள் ஆன போதும் சென்னைக்காரர்கள் போல இயந்திரமயமாக்கல் இன்னும் மண் மணக்கும் புதுக்கோட்டைக்காரராகவே வாழ்ந்து வருபவர். அன்பானவர். சமரசம் செய்து கொள்ளாத நெறியாளர்.

  புதுகைத் தென்றல் இதழில் மாதாமாதம் தவறாமல் படித்த தலையங்கம் என்ற போதும் மொத்தமாக நூலாக்ப் படித்த போது மட்டற்ற மகிழ்ச்சி. சமுதாயத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை அசை போட்டுப் பார்க்க உதவிய நூல். மகாகவி பாரதியாரின் வைர வரிகள் போல நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், ரௌத்திரம் பழகி துணிவுடன் வடித்திட்ட தலையங்கங்களின் தொகுப்பு. இதழியல் படிக்க்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைத்திட இந்நூலை பரிந்துரை செய்கின்றேன்.

  ஒரு தலையங்கத்திற்கு எப்படி தலைப்பு வைக்க வேண்டும், தொடுப்பு, எடுப்பு, முடிப்பு – எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ள நூல். சுருக்கமாகவும், செறிவாகவும் இருப்பது தனிச்சிறப்பு.

  முதுபெரும் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது. அணிந்துரை வழங்கியவரே மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து நூல் குறித்து சிறப்புரையாற்றியது சிறப்பு. அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. பதிப்பாளர், பேராசிரியர் பெ. அர்த்தநாரீசுவரன் அவர்களின் திறனாய்வு பார்வையும் தீர்க்கமான பார்வையாக உள்ளது. வங்கி ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு வீட்டில் ஓய்வாக ஒதுங்கி விடும் சராசரி மனிதராக வாழாமல், வாழும் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள தரமான மாத இதழை நடத்தி வரும் மாண்பாளர் நூல் ஆசிரியர் மு. தருமராசன் அவர்கள்.

  பிரபல வார இதழ்களே விற்பனை எண்ணிக்கை கூட்ட வேண்டும் என்று தவறாக எண்ணிக்கொண்டு நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை, போட்டிப் போட்டு அச்சிடும் காலத்தில், நடிகைகள், நடிகர்கள் படம் இன்றி இலக்கியத்தரமான இதழை நடத்தி வரும் கொள்கையாளர். தரக்கொள்கையை என்றும் தளர்த்திக் கொள்ளாத உறுதி மிக்கவர். கவிதை, கதை, கட்டுரை, தலையங்கம் என பல்சுவை விருந்தாக வரும் தரமான இதழ்.

  நூலாசிரியர் எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் அவர்கள் பிறந்த மண் பற்று மிக்கவர், பிறந்த ஊர் புதுகையை பெயரோடு சேர்த்துக் கொண்டவர். நடத்தும் இதழின் பெயரிலும் புதுமையைச் சேர்த்துக் கொண்டவர்.

  ஜனவரி 2009 மாதம் தொடங்கி டிசம்பர் 2014 வரை 6 ஆண்டுகள் வெளிவந்த 72 தலையங்கங்களின் தொகுப்பு நூல் இது. இந்நூல் படித்தாலே புதுகைத் தென்றல் இதழின் தரத்தையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். சிலர் ‘பத்திரிகை தர்மம்’ என்பார்கள். ஆனால் அதனை கடைபிடிக்க மாட்டார்கள். ஒரு சில இதழ்களில் ஒரு சில காட்சிகளின் சார்பு நிலையை தலையங்கமே உணர்த்தி விடும். ஆனால் புதுகைத் தென்றல் ஆசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள், எக்கட்சியையும் சாராமல் மனசாட்சி ஒன்றை மட்டுமே சார்ந்து தலையங்கம் எழுதி, ‘பத்திரிகை தர்மத்தை’ உண்மையிலேயே கடைபிடித்து வரும் மாமனிதர்.

  தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் எழுதிய தலையங்கங்கள் தொகுப்பு நூலிற்கு ‘விழிப்புணர்வு’ என்று தலைப்பிட்டது நல்ல பொருத்தம், பாராட்டுக்கள்.
  ‘தலையங்கம்’ என்ற பெயரில் ஆள்வோருக்கு ஜால்ரா போடுவதும், எதிர்க்கட்சிகளை சாடுவதும் சில ஆசிரியர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர் பிரதமரே ஆனாலும், குற்றம் என்றால் குற்றமே என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று சொன்ன நக்கீரர் கதை வழியில் நடைபோடுகின்றார்.

  முதல் தலையங்கத்தின் தலைப்பே முத்தாய்ப்பு. இளைஞர்கள் எழுக! இமயமாய் உயர்க! இந்த தலையங்கத்தில் சந்திரனுக்கு சந்திராயன்! அனுப்பிய சாதனையை எழுதி விட்டு “எல்லாத் துறைகளிலும் இவ்வாறு எல்லையில்லாச் சாதனைகள் படைத்திட இந்திய இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது அவசியம்”.

  “வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம்”

  என்ற வரிகளின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்த கவிஞாயிறு தாராபாரதி அவர்களின்,
  [size]

  “என் உயரம் இதுவென்று எழுந்து நில்!
  விண்ணுயரம் கூட விலாவுக்குக் கீழே தான்!”

  [/size]
  தலையங்கத்தில் சொல்ல வந்த தகவலுக்கு பொருத்தமான வரிகளை பொருத்தி எழுதி முடித்தது முத்தாய்ப்பு

  ஒலிம்பிக் போட்டிகளில் ஒளிரட்டும் இந்தியா என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அற்புதமான தலையங்கம் ‘எப்போதும் தொடரும் ஏழை – நடுத்தர மக்களின் துயரம்’ தலையங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடிகளில் கொழிப்பதற்கும், ஏழை-நடுத்தர மக்கள் கசக்கிப் பிழியப்படுவதுமான அவல நிலைக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார்.

  அரசியல், சமூகம், விஞ்ஞானம், தன்னம்பிக்கை, கல்வி, மங்கள்யான் என்று பல்வேறு நிலைகளில் யோசித்து கவியரசு கண்ணதாசன் மொழிக்கு ஏற்ப,
  [size]

  ‘ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன் – எவர்
  வரினும் நில்லேன் – அஞ்சேன்’

  [/size]
  என்று மிகத்துணிவுடன் மாத இதழில் மிகச்செறிவாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதி வருகிறார்கள். தொய்வின்றி தலையங்கம் தொடர்வது போலவே தலையங்கங்களின் தொகுப்பு நூலும் தொடர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்தி விழிப்புணர்வு விதைத்து வருவதற்கு பாராட்டையும் முடிக்கிறேன்.

  .

 6. 6 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  மீண்டும் தலைப்புச் செய்திகள் !
  தன்னம்பிக்கை வாசிப்புகள் !

  நூல் ஆசிரியர் : கவிஞர் திலீப் பீதாம்பரி !

  நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
  [/size]

  கன்னம் புத்தக நிலையம், எண் 2/11, சிந்து நதி தெரு, கணபதி நகர், வில்லாபுரம், மதுரை – 625 012. அலைபேசி : 95004 83386
  e-mail : adp.dilipgoodly@gmail.com

  *****
  மீண்டும் தலைப்புச் செய்திகள் – நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது. தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக புதுக்கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம், முனைவர் பு.மு.சாந்தமூர்த்தி ஆகியோரின் அணிந்துரையும் திரு. பி.எஸ். மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பவையாக உள்ளன. முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு, வலிகளுக்கு துவளாதே! துணிந்து போராடு! என நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள்.

  தாய்க்கு வலி கொடுத்து
  தரைக்கு வந்தவனே
  நீயும்
  வலிகளைத் தாங்கு
  வாழ்க்கையை வாங்கலாம்.

  சுறுசுறுப்பான சின்னமாக சிறிய எறும்பு உள்ளது. எறும்பு மழைக்காலத்திற்கு உணவை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டது. வரிசையாக ஒழுங்காகச் செல்வதை மனிதனுக்குக் கற்றுத் தருவது. அப்படிப்பட்ட எறும்போடு ஒப்பிட்டு வடித்த புதுக்கவிதை நன்று.

  சின்ன எறும்பு
  தானே ஊர்ந்து ஊர்ந்து
  மேலே செல்கிறது
  எலும்புள்ளவன்
  உந்துதல் இருந்தும்
  இன்னும் நீ
  உட்கார்ந்து இருக்கலாமா?

  எலும்பே இல்லாத எறும்பு, இப்படி உழைக்கும் போது, எலும்புள்ள மனிதன் எப்படி உழைக்க வேண்டும்? என்ற சிந்தனையை உழைப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு. கவிதைகளில் கவித்துவம் சற்று குறைவாக, வசன நடையில் இருந்தபோதும் உள்ளத்தில் உள்ளது கவிதை என்று ஏற்கலாம். பயன்மிக்க கருத்துக்களால் கவிதைகள் வெற்றி பெறுகின்றன.

  அவமானம் கண்டு கவலை கொள்ளாதீர்கள் என்கிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்,“அவமானங்களை சேகரித்து வையுங்கள், அவை, முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தி” என்று சொல்வார். அதுபோல இவரும் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார். அவமானப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும். தொடக்கத்தில் நான் கவிதை எழுதிய போது உனக்கு இது தேவையற்ற வேலை என்று ரணப்படுத்தி அவமானப்-படுத்தியவர்கள் உண்டு. அவர்கள் இன்று பெருமைப்படுகிறார்கள்.

  ஆப்பிளை விட
  அதிக சக்தி
  தரக்கூடியது அவமானம்
  அது வர வர
  வலிமையாவாய்!

  “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்” என்ற கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை நினைவூட்டும் வண்ணம் வேறு கோணத்தில் சிந்தித்து வடித்த கவிதை ஒன்று.

  பிரச்சனை வராத
  வாழ்க்கை என்றால் – அது
  பிரிக்கப்படாத உறை!

  பயிற்சி, முயற்சி – வெற்றிக்கு வழிகள் என்பதை உணர்த்திடும் வண்ணம் பல்வேறு கவிதைகள் நூலில் உள்ளன.

  ஆயத்தம் என்பதே
  உன் ஆயுதம்
  மடியும் வரை முடியும்
  என்பதில் முரட்டுத்தனமாய் இரு!

  தேசப்பிதா காந்தியடிகள் சொன்னது போல், ‘செய் அல்லது செத்து மடி’ என்ற வரிகளை நினைவூட்டும் விதமாகவும், உன்னால் முடியும் வரையல்ல, செயல் முடியும் வரை முயற்சி இருக்க வேண்டும் என்று சொன்ன மாமனிதர் அப்துல் கலாமின் வைர வரிகள் போல உள்ளது. பாராட்டுக்கள்!

  நூல் அளவில் சிறிதாக இருந்தாலும் படிக்கும் வாசகர்கள் மனதில் பதிக்கும் கருத்துக்கள் பெரிதாக உள்ளன. பாராட்டுக்கள்.

  தோல்விக்கு துவளாதே, தொடர்ந்து முயற்சி செய் என்ற கருத்தை பல்வேறு கவிதைகளிலும் வலியுறுத்தி உள்ளார்.

  சிறுசிறு தோல்விகள்
  சிறுசேமிப்புப் பாத்திரம் மாதிரி
  சேமித்து வை !
  அதுவே ஒரு நாள் உனக்கான
  சாதனைப் பாத்திரம்!

  உவமைகளும் மிக எளிமையாகவும், இனிமையாகவும் பயன்படுத்தி வாசகருக்கு சொல்ல வந்த கருத்தை சுவைபட உணர்த்தி உள்ளார்.

  கடலின் ஆழம்
  கப்பலுக்குத் தெரியாது
  கரை சேருகிறது
  பயணம் தொடங்கு!
  பாதை தெளிவாகும்
  தூரம் எளிதாகும்!

  மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். கவலை என்ற பாரம் சுமக்காதீர்கள். கவலை கொள்வதால், கவலை தீர்ந்து விடாது. கவலையை மறந்து தீர்வு பற்றி சிந்தித்தால் கவலைகள் காணாமல் போகும் தூரம் என்பதை உணர்த்திடும் விதமாக உள்ள புதுக்கவிதை.

  லேசான வலை
  ஆயிரம் மீன்களை
  அள்ளிக் கொள்ளும்
  உன் பாரத்தை இறக்கு
  மனசை லேசாக்கு.

  வித்தியாசமான உவமைகள் மூலம் தன்னம்பிக்கைக் கருத்துக்களை நூல் முழுவதும் விதைத்து உள்ளார். பாராட்டுக்கள்!

  உன் பாதை ஒரு
  விமான ஓடுதளம் – அதில்
  வேகத்தடை போட முடியாது
  எக்காலத்திலும்.

  சாலையில் பேருந்துகளுக்கு, மற்ற வாகனங்களுக்கு வேகத்தடைகள் உண்டு. ஆனால் விமான ஓடுதளத்தில் வேகத்தடைகள் இல்லை என்பதை அறிந்து சரியான இடத்தில் பொருத்தி எழுதியது சிறப்பு.

  எதிர்மறையாக பேசுபவர்கள் பலர் உண்டு. அவற்றிற்கு செவி சாய்த்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்கிறார். தவளைகள் மலை ஏறும் போட்டி நடந்ததாம். அருகில் இருந்தவர்கள், உன்னால் இவ்வளவு பெரிய மலை ஏற முடியுமா? என்று சொல்லச் சொல்ல, எல்லா தவளைகளும் மலை ஏறும் முயற்சியை பாதியிலேயே கைவிட்டு நின்று விட்டன. ஒரே ஒரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்தது ; அந்தத் தவளைக்கு கேட்கும் திறன் இல்லையாம். அதனால் தான் எதிர்மறையாளர்களின் குரல் காதில் விழாமல் முன்னோக்கி நகர முடிந்தது என்று ஒரு கதை படித்தேன். அதனை நினைவூட்டி வெற்றி பெற்றது இந்தக் கவிதை.

  வேண்டுமென்றே
  வசை பாடும்
  ஆட்கள் வார்த்தைக்கு
  வார்த்தை குத்தும் முட்கள்
  எத்தனை முறை கீறினாலும்
  மீறி வா!
  ஏணிகள் போல
  அவர்கள் மீதி ஏறி வா!

  இப்படி பல கவிதைகள் நூலில் உள்ளன. நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளும் மேற்கோள் காட்டுவது மரபன்று, முறையன்று. நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் நூலாசிரியரை அலைபேசியில் அழைத்துப் பாராட்டுங்கள்.

  நூலாசிரியர் கவிஞர் திலீப் பீதாம்பரி அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க சௌராஷ்ட்ரா கல்லூரியில் பட்டம் படித்தவர். மனநல ஆலோசகர் சான்றிதழ் பெற்றவர். ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர், தன்முன்னேற்றப் பேச்சாளர், கவிஞர் என பன்முக ஆற்றலாளராக விளங்குகிறார். பாராட்டுக்கள்.

  சிறிய வேண்டுகோள் : நூலில் ஆங்கிலச் சொற்கள் சில உள்ளன. அடுத்த பதிப்பில் அவற்றை தமிழாக்கம் செய்து விடுங்கள்.

 7. 7 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  இவனும் அவனும் !
  (சிறுகதைகள்)
  நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
  மணிவாசகர் பதிப்பகம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
  விலை : ரூ. 90, பக்கம் : 176
  *****
  நூல் ஆசிரியர் முதுபெரும் எழுத்தாளர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். இவர் போல மற்ற ஆண்களும், மனைவியை நேசிக்க முன்வர வேண்டும். முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய பெயருக்கு முன்பாக மனைவியின் பெயரை இணைத்துக் கொண்டவர். மனைவி மறைந்திட்ட போதும் அவர் நினைவாக பொன்மாலை அறக்கட்டளை தொடங்கி மாணவ, மாணவியருக்கு உதவி வருபவர்.

  தனக்கு கிடைக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம். என் மனைவிக்கும் சேர்த்துத் தான் தருகிறார்கள். அவள் இப்போது உயிரோடு இல்லாத காரணத்தால், ஓய்வூதியத்தில் பாதி அவளுக்கானது. எனவே அத்தொகையை ஏழை மாணவ, மாணவியருக்காக உதவி வருகிறேன் என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

  இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் இக்காலத்தில் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் போன்ற நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பது ஆறுதல் .மகாகவி பாரதி சொல்வான் கவிதை எழுதுபவர் கவிஞர் அல்ல கவிதையில் எழுதியபடி கவிதையாகவே வாழ்பவரே கவிஞர் என்று .அறம் சார்ந்து எழுதுவதோடு நின்றுவிடாமல் அறம் சார்ந்து வாழ்வது சிறப்பு .படைப்பாளிகள் இவரைப் பாடமாகக் கொள்ள வேண்டும்.

  மதுரையில் இலக்கிய விழா எங்கு நடந்தாலும், பார்வையாளராக முதல் வரிசையில் வந்து அமர்ந்து விடுவார். என்னுடைய கவியரங்கம் பல கேட்டு, கை தட்டி மகிழ்ந்து உள்ளார் . நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் உடல்நலம் குன்றி உள்ளார். அவரால் வெளியே வர இயலாது என்றனர். இந்த நூல் வெளியீட்டு விழாவை அவரது இல்லத்திலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள். எழுத்தாளர்கள் திருச்சி சந்தரும், கர்ணனும் மற்றும் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். எல்லோரையும் பார்த்த மகிழ்வில் நூலாசிரியர் விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை வந்தது.

  இந்த நூலில் 25 முத்திரைக் கதைகள் உள்ளன. பல்வேறு இதழ்களில் பிரசுரமான கதைகளைத் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் நூலாக வெளிவர உதவியவர் எழுத்தாளர் கர்ணன். அணிந்துரையும் தந்துள்ளார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற போதும் சக எழுத்தாளரான நூல் ஆசிரியருக்கு முதுமையில் உதவி உள்ளார், பாராட்டுக்கள்.

  நூலாசிரியர் மனைவி மீது அளவற்ற பாசம் கொண்டவர். அவரது மனைவி 27.03.2002 அன்று உலகை விட்டு மறைந்திட்ட போதும் இன்றும் மனைவி பற்றி ஏதாவது பேச நேர்ந்தால் கண்கலங்கி விடுவார். தினமும் மனைவி படத்தின் முன்பு அமர்ந்து வணங்கி பேசி வருகிறார் .மற்ற ஆண்களுக்கு பாடமாக வாழ்ந்து வரும் மாமனிதர். இந்த நூலை அஞ்சலி செய்துள்ள விதத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்நூல் ஹேமாவுக்கு அஞ்சலி.

  தாரமாய், தாயாய் உற்ற நல் தோழியாய்,
  தடம்பதித்தாள் என் வாழ்வில் அரை நூற்றாண்டு
  சில ஈரங்கள் காய்வதில்லை நெஞ்சில் போல
  பல உறவுகளும் ஓய்வதில்லை, உன்னில் போல !

  முதல் கதையின் தலைப்பையே, நூலின் தலைப்பாக வைத்துள்ளார். சிறுகதைகள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. சிறுகதைகள் எழுத வேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். கதையில் சென்னை மொழி, மதுரை மொழி, ஏழ்மை மொழி என எல்லா மொழியிலும் கதைகள் உள்ளன. சமுதாயத்தை உற்று நோக்கி வடித்த கவிதைகள் நன்று. கதைகள் மூலம் வாழ்வியல் கருத்துக்களை மிக மென்மையாக உணர்த்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.

  இக்கதைகள் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை என்ற போதும் இன்றும் பொருந்துவதாகவே உள்ளது. முதல் கதையான இவனும், அவனும் கதையில் இருந்து சில வரிகள் இதோ!
  “எதிரே ஏதோ அரசியல் கட்சியின் கூட்டம். மேடையும், மைக்கும் கிடைத்தவர்கள் தங்களைத் தர்மபுத்திர்களாகவே உருவகிக்கும் வழக்கமான
  காட்சியை ஜோடனைகளுடன் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். எதிர்கட்சியினரின் ஊழல்கள் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டிருந்த்து. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எவ்வளவு நாணயமற்றவர்கள் என்று நிரூபிக்க்ச் சிரமமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அங்கீகரிப்பது ஒரு கடமை என்பது போல, எதிரேயிருந்து அடிக்கடி கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழுந்து கொண்டிருந்தன. இடையிடையே ‘வாழ்க’வும், ‘ஒழிக’வும் தமிழ் வளர்நத்து கொண்டிருந்த்து.”

  நூலாசிரியர் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதியது இன்றும் அரசியலில் தொடர்கதையாகத் தொடர்வதை நினைத்துப் பார்த்தேன். கதைகளில் நக்கல், நையாண்டி என எள்ளல் சுவைகளுடன் பாத்திரங்களின் உரையாடல் இருந்தாலும் ஏழ்மையை உணர்த்திடும், கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் கதைகள் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

  தபஸ் என்ற கதையில் காட்டுக்குச் சென்று தாடி வளர்த்து கமண்டலத்துடன் இருப்பது மட்டுமல்ல தபம். மனைவிக்காக காத்திருப்பதும் தவம் என்கிறார்.

  செம்மறியாடுகள் கதையில், மதுரையின் வீதிகளை படம் பிடித்துக் காட்டுகின்றார். மனிதர்களை விட செம்மறி ஆடுகள் மேல் என்று உணர்த்துகின்றார்.

  யுக தர்மம் கதையில் வித்தியாசமான இராமாயணம் எழுதி உள்ளார்.

  நிமிஷங்கள், விநாடிகள் கதையில் உள்ள ஒரு வசனம் இதோ
  “ஏதோ இன்கம்டாக்ஸை ஏமாற்றும் லட்ச ரூபாய், நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்ட்து போல மயக்கம்.”
  பெரிய மனிதர் கதையில் பெரிய மனிதர், பெரிய மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளார். பெயருக்கு பெரிய மனிதராக இல்லாமல் உண்மையில் மதிக்கும் பெரிய மனிதராக வாழ வேண்டும் என்கிறார்.

  நாலணா கதையில் பிறரிடம் ஓசியில் பெறுவதை இழுக்கு என்கிறார். அக்கதையின் முடிப்பில் உள்ள வரிகள் இதோ!
  “சே. அத்தனையும் ஓசிப் பிழைப்பு. கேவலம், படு கேவலம், காசில்லா விட்டால் தான் என்ன, அறைக் கதவை மூடி உள்ளே விழுந்து கிடந்திருக்கலாமே. தடுமாறிச் சாய்ந்திருந்தா தன்மான உணர்வு எழுந்து நின்று சிரிக்கிறது, வெறிச் சிரிப்பு.

  மனசாட்சி பேசுவது போல, பல இடங்களில் நூலாசிரியர் பேசி உள்ளார். பழிக்குப் பழி, வக்கிரம், சதி திட்டம் தீட்டுதல் – இப்படியே தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்து, சமுதாயத்தை சீரழித்து வரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்கள் இந்நூலில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்தால் நாடு, நலம் பெறும். முதுபெரும் எழுத்தாளர், நூலாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள். மனைவியின் பசுமையான நினைவுகளுடன் நூற்றாண்டு கடந்த வாழ்ந்திட வாழ்த்துக்கள் .

 8. 8 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  மழைநேரத் தேநீர்
  தன்னம்பிக்கைக் கதைகள் !
  நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

  பாவை பப்ளிகேஷன்ஸ்,
  142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
  சென்னை – 600 014.
  பேச : 044-28482441 ; விலை : ரூ. 75/-
  *****
  மதுரையில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூல். இணையத்தில், தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பாரத்த, கேட்ட, படித்த, பயனுள்ள தன்னம்பிக்கைக் கதைகளை மொத்தமாக நூலாகப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நூலின் தலைப்பு கவித்துவமாக மழைநேரத் தேநீரை நினைவூட்டி விடுகிறது.

  இன்றைய மாணவ சமுதாயம் இந்நூல் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். இந்நூலிற்கு எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், இனிய நண்பர் கல்வியாளர் ரமேஷ் பிரபா, ஊடகவியலாளர் ஆர். ரெங்க ராஜ் பாண்டே, ஞாபகங்கள் பட இயக்குனர் ஜீவன், பேராசிரியர் முனைவர் மு. பெர்னாட்சா என பலரின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றன. இந்த நூலை நூலாசிரியர், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் காணிக்கையாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.

  53 கதைகள் உள்ளன. சின்னச் சின்ன மின்னல் போல, குட்டிக் குட்டுக் கதைகள். படித்து முடித்தவுடன் தன்னம்பிக்கை விதை விதைக்கப்பட்டதை உணர முடிகின்றது. பல தமிழாசிரியர்கள் பள்ளி, வீடு என்று சுருங்கி விடுவதை காண்கிறோம் . ஆனால் இனிய நண்பர் ஞா. சந்திரன் தமிழாசிரியர் பணியோடு நின்று விடாமல், அதையும் தாண்டி பேச்சு, எழுத்து என தடம் பதித்து வருபவர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடந்த வழக்கறிஞர்களின் கவிதைப் போட்டிக்கு நானும் நூலாசிரியரும் நடுவராக இருந்து, வந்தோம். சிறந்த சிந்தனையாளர் திரு. வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வதைப் போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர் நூலாசிரியர்.

  ‘தர்மம் தலை காக்கும்’ என்ற முதல் சிறுகதையே முத்தாய்ப்பானது. இது கதை மட்டுமல்ல, நடந்த நிகழ்வும் கூட. சிறுவனாக இருந்த போது குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டவனுக்கு மோர் கொடுத்து உதவினாள் ஒருத்தி. பின்னாளில் அச்சிறுவன் மருத்துவர் ஆகி விடுகிறார். மோர் தந்த பெண்ணிற்கு மருத்துவம் புரிகிறான். ” தங்களுடைய அன்பான மோருக்கு ஈடாக இந்த மருத்துவக் கட்டணம் செலுத்தப்பட்டது”. என்கிறான். அவள் நெகிழ்ந்து மகிழ்ந்து விடுகிறாள்.

  இக்கதை உணர்த்துவது யாதெனில், ஒருவருக்கு பயன் கருதாது உதவி செய்தால். பின்னாளில் பல மடங்காக வேறு விதமாக நமக்கே பயனாக அமையும் என்பதை நன்கு உணர்த்தி விடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வோரு நற்செய்தி உள்ளது. நம்பிக்கை ஊட்டும் விதமாக, மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பல கதைகள் உள்ளன.

  எளிய நடையில் பேசுவது போலவே இயல்பாக எழுதி உள்ளார். படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கும். தந்தி தொலைக்காட்சியில் தினமும் காலையில் தொடர்ந்து பேசி வந்தார். பல்வேறு நூல்கள் படித்து, அவற்றில் மிகவும் பிடித்தவற்றை மக்களுக்கு பயன்படும் விதத்தில் எடுத்து இயம்பி வந்தார். அவற்றை நூலாகவும் வெளியிட்டது சிறப்பு.

  நூலாசிரியர், என்னுரையில் நான் சு(வா)சித்த, ரசித்த, கேட்ட, எனக்கு வழிகாட்டிய, ஊக்கமூட்டிய கதைகளை தொகுத்து வழங்கி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கதைகள் என்று குறிப்பிடவில்லை, பாராட்டுகள்.

  அடுத்த நூல் தங்களுடைய சொந்த படைப்பாக, நீங்களே வேறு புதிய சிறுகதைகள், வேறு கோணங்களில் சிந்தித்து வெளியிட வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் நூலாசிரியருக்கு வைக்கின்றேன். தொகுப்பு நூலை விட படைப்பு நூலே படைப்பாளிக்கு கூடுதல் சிறப்பு தரும். சொந்தமாக படைக்கும் ஆற்றல் உண்டு, படையுங்கள்.

  ஒவ்வொரு கதைக்கு இறுதியிலும் பொன்மொழிகள், அறிஞர்களின் கூற்றுகள் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. ‘நம்பிக்கையோடு நட’ கதை, பழங்கால நாணயம், ஓட்டை விழுந்த நாணயம் பையில் வைத்து இருக்கிறான். நாணயத்தை துணியில் சுற்றி எப்போதும் பையில் வைத்து உள்ளான். கடுமையாக உழைத்து முன்னேறுகிறான். தன் முன்னேற்றத்திற்கு அந்த நாணயமே காரணம் என்று நினைக்கிறான். ஒரு நாள் அந்த நாணயத்தை துணியை அவிழ்த்துப் பார்க்கிறான். ஓட்டை நாணயம் இல்லை, வேறு நாணயம் உள்ளது. மனைவியிடம் எப்படி என்று கேட்ட போது, அவள் துணி துவைத்து காயப் போடும் போது நாணயம் வெளியே ஓடி விட்டது, கிடைக்கவில்லை. நான் தான் வேறு நாணயத்தை வைத்து சுற்றி வைத்தேன் என்கிறாள், என்று தொலைந்தது? என்று கேட்கிறான். கொண்டு வந்த அன்றே, அந்த நாணயம் தொலைந்தது என்கிறாள். இதனை கதையாக எழுதி உள்ளார். நம்மில் பலர் இதன் காரணமாக, அதன் காரணமாக என்று மூட நம்பிக்கை கொள்வதை சாடும் விதமாக கதை உள்ளது. இப்படி பல கதைகள் நூலில் உள்ளன.

  பாவை பதிப்பகம் மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்டு உள்ளனர். தன்னை உயர்வாகவும், பிறரை தாழ்வாகவும் எண்ணும் மனநிலை தவறு என்பதை, கிளி, காகம் மூலம் ‘இதுவும் மாறும்’ என்ற கதையில் உணர்த்தி உள்ளார். மனைவியை செவிடு என்று சந்தேகப்பட்ட கணவன் தான் செவிடு என்பதை ‘தன்னை அறிதல்’ கதையில் உணர்த்தி உள்ளார். சிறு சிறு துணுக்குகளை சிறுகதையாக வடித்து உள்ளார்.

  மரத்தின் மீது கல் எறிந்தால் கனி தருகிறது. ஞானி மீது கல் விழுந்தால் தண்டனை தரலாமா?, நான் மரத்திற்கும் கீழா? என ஞானி கேட்பது சிந்திக்க வைக்கின்றது ‘தீமைக்கு நன்மை’ சிறுகதை. கோபம் வேண்டாம் என்பதையும் உணர்த்தி உள்ளார்.

  நூல் முழுவதும் பல்வேறு நீதிக்கதைகள் உள்ளன. நீதிக்கதைகள் படிக்கும் போது படிக்கும் வாசகர் மனதில் நீதியை விதைக்கும். பல்வேறு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பையே நிறுத்தி விட்டனர். நீதிபோதனையாக உள்ள இந்த நூலை மாணவர்களுக்கு பாட நூலாக்கலாம். மாணவர்கள் பண்பட உதவிடும் நூல். பாராட்டுகள்.

 9. 9 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  இஃதோர்
  கன்னிப்பெண் விழி
  நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன், gowthamrajk3@gmail.com 87548 67116.
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
  வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
  செரி சாலை, சேலம் – 636 007. பேச : 98429 74697
  விலை : ரூ. 55

  *****
  நூல் ஆசிரியர் கவிஞர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் அவர்கள் பொறியாளர். இவருக்கு முதல் நூல். அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ர.ஷே.தா. வஹிதா பானு பாவலர் எழு ஞாயிறு ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன. இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை நன்று.

  கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். நூலாசிரியர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் விதிவிலக்கு அல்ல. நூலில் காதல் கவிதைகள் பல உள்ளன. 28 தலைப்புகளில் புதுக்கவிதைகள் எழுதி உள்ளார்.

  இரு கவிதை !

  என் கையில் கவிதைப் புத்தகம்
  முன்னால் அவள்
  ஒரே நேரத்தில்
  இரு கவிதைகளை
  எப்படி வாசிப்பது …?

  பெண்களுக்கு கவிதை பிடிக்கும். பெண்ணையே கவிதை என்கிறார். வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள். எள்ளல் சுவையுடன் இனிக்கும் கவிதை நன்று.

  மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய காவியக் கவிஞர் வாலி மறைவிற்கு வடித்த கவிதை நன்று.

  என் வாலிபனே …!

  (காவியக் கவிஞர் வாலி அவர்களின் இறப்பில் வலித்தது)
  வாலிப கவிஞனே!
  இம்மண்ணை விடுத்த வலி
  நெஞ்சி முள்ளாய் நெஞ்சம் தைக்கின்றது…
  ஈவிறக்கம் இல்லா வானமே …
  எம் மறவனை ஆட்கொண்டு தான்
  உன் பசி தீர்க்கின்றாயோ…!

  நூலாசிரியர் கவிஞர் என்ற முறையில் மற்றொரு மூத்த கவிஞர் வாலி மரணத்திற்காக மனம் வலித்தது கவிதை வடித்த பாங்கு நன்று.

  தொடக்க நிலையில் காதல் கவிதை வரும். அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் வடிக்க முன்வர வேண்டும்.

  நீ நடக்கையில் நான் தெருக்கோலம் !

  ஒரு கார்காலப் பறவையாய் நான்
  மீசை அரும்பியதை
  காதல் அரும்பியதைக் கொண்டு
  கணிக்கும் சாமான்யன்
  எதிர்வீட்டு ஈர விழிகளில்
  என் வீட்டு ஜாடி பூத்தது
  தார்ச்சாலை தகவல் பெட்டியாய்
  உன் வாசம் அஞ்சல் சேர்த்தது
  உன் வீட்டு நாய்க்குட்டியும்
  நானும் தோழர்கள்
  எப்பொழுதும் உன் பின்னாலேயே
  இருவரும் சுற்றுவதால்…

  காதலியின் பின்னால் காதலன் சுற்றுவது அன்று தொட்டு இன்று வரை மாறாத வழக்கம், பழக்கம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

  பார்வை !

  என் கண்களின்
  இமைகளுக்குள்
  ஒரே சுமை
  அவளைப் பார்த்து பார்த்து
  தேக்கி வைத்த காதல்.

  காதல் என்பது கண்கள் வழி தொடங்கி மூளையில் பதிவாகி எண்ணத்தில் வெளிப்படுவது. காதலின் முன்னுரை என்பது கண்களால் தான் எழுதப்படுகிறது.

  கண்ணாடி !

  ஆணழகுப் பெட்டகத்தில்
  நானழகு என்றென்னை
  மார் தட்ட வைத்த
  கன்னிப்பெண் விழிகள் !

  மீனவர்கள் துன்பம் கண்டு உணர்ந்து எழுதிய கவிதை நன்று. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று திரும்பி வருவது உறுதி இல்லை. அண்டை நாடு என்கிறோம் இலங்கை. ஆனால் அண்டை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட இப்படி நடந்து கொள்வது இல்லை. நட்பு நாடு என்று சொல்லப்படும் இலங்கை, நாள்தோரும் தமிழக மீனவர்களைச் சுடுவது, தாக்குவது, வலைகளை அறுப்பது என்ற கொடூரத்தை நடத்திக் கொண்டே இருக்கின்றது. தட்டிக் கேட்க நாதி இல்லை. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இக்கவிதை.

  தண்ணீர் தேசத்து தாகம்!

  சூரியன் எழுகையில்
  சுள்ளென முகம் நனைக்கும்
  கதவெங்கள் வீடு…
  அதை தாண்டி அனுப்பிய கணவன்
  கால் பதிக்கும்
  நாழிகை தொட்டு
  காரிகைகள் கண்ணீர் சொட்டும்
  பாடெங்கள் பாடு.
  அண்டை நாட்டுச் சிறை
  எங்கள் ஆஸ்தான வாசற்படி
  தாய் மண்ணிலிருந்தும்

  கேட்க நாதியில்லா
  அநாதை

  எங்கள் பெயர்!

  வாள் முனையை விட பேனா முனைக்கு ஆற்றல் அதிகம். பல ஆதிக்கங்கள் அகற்றிய வரலாறு பேனா முனைக்கு உண்டு. பேனா பற்றி வடித்த கவிதை நன்று.

  ஒவ்வொரு பேனாவிற்கும்
  அநியாயங்களைக் கேட்க

  ஆசைகளைத் தீர்க்க
  ஆயிரம் எழுத்துக்கள் எழுத

  ஆயிரம் எழுத்த்துக்கள் எழுத
  சீமைத்துரை தேவையில்லை.
  நீ வா …! பேனாக்கள் காத்திருக்கின்றன…!
  உனக்கென மரங்கள்
  தாள்கள் தூவுகின்றன…
  எழுதவா எண்ணங்கள் இல்லை…
  கேட்கவா சமுதாயம் இல்லை…?
  பல்லாயிரம் முகத்திரைகள்
  கிழித்தெறியப்பட காத்திருக்கின்றன.
  பல லட்ச் தாய்மார்களின்
  கண்ணீரில் மையெடு!

  வித்தியாசமான கவிதைகள் உள்ளன.
  சமுதாய விழிப்புணர்வு வேண்டும், அநீதிக்கு எதிராக படைப்பாளிகளின் சிந்தனை வரவேண்டுமென்ற ஆசை நன்று.
  நூலின் கடைசிக்கவிதை நன்று.

  முதல் தடம் !

  பதித்திருக்கிறேன்
  முட்கள் இல்லாமல்

  பார்த்து பார்த்து
  இனி போகும் தடமெங்கும்

  ஓர் தடாகம்
  பதித்து விட வேண்டுமென்ற

  வாஞ்சையுடன் !

  முதல் தடம் முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். தரமாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்பித்த வாசகன் பதிப்பகத்திற்கு

 10. 10 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180.

  *****

  புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு.

  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார்.

  அப்போது முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. இளையராஜா அவரிடம் உதவியாளராக இருந்தார். அவரது ஆய்வில் எனது ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டியவர். கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் மனைவியும் இன்முகத்தோடு வரவேற்று மகிழ்ந்தார்கள். கண்ணீர் பூக்கள் என்ற நூல் வெளிவருவதற்கு தனது நகைகளைத் தந்து உதவிய தங்கமங்கை அவர்கள். பசுமரத்து ஆணி போல பதிந்தது அன்றைய சந்திப்பு. கவிவேந்தர் மு. மேத்தா அவர்கள் கர்வம் என்றால் என்னவென்றே அறியாத முன்மாதிரி-யான கவிஞர்.

  எனது இனிய நண்பர் வதிலை கவிவாணன் அவர்கள் கவிவேந்தர்
  மு. மேத்தா அவர்கள் பற்றி விரைவில் நூல் தொகுத்து வெளியிட உள்ளேன். நீங்கள் ஒரு கட்டுரை அனுப்புங்கள் என்றார். ஏற்கனவே கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் உள்பட பல நூல்களின் விமர்சனங்கள் இணையங்களில் பதிவு செய்துள்ளேன். அவற்றை அனுப்பவா? என்று கேட்ட போது அவர் ‘மு. மேத்தா கவிதைகள்’ என்ற நூல் வாங்கிப் படித்து, புதிய கட்டுரை ஒன்று அனுப்புங்கள் என்றார். அதன் விளைவே இந்தக் கட்டுரை.

  கவிதா வெளியீடாக வந்துள்ள பெருமைமிகு நூல். கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் பல்வேறு நூல்களில் இருந்து சாகித்ய அகதெமி விருதாளர் கவிஞர் சிற்பி புதுக்கவிதை ஆய்வாளர் கவிஞர் பாலா இருவரும் தேர்ந்தெடுத்து தொகுத்த நூல். மேத்தாவின் கவிதைகள், பழங்கள் என்றால் இந்த நூலில் பழரசமாக வழங்கி உள்ளனர். இந்த நூல் படித்தவர்கள் இதன் மூல நூல்கள் வாங்கிப் படிப்பார்கள். தேடிப் படிப்பார்கள். இன்றைய இளம் கவிஞர்கள், வளரும் கவிஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

  வாழும் காலத்திலேயே கவிவேந்தர் மு. மேத்தா அவர்களுக்கு அவரது படைப்புகளாலே மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளனர். மகாகவி பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு சிறப்பு நடக்கவில்லை. நடந்திருந்தால் அவரை 39 வயதில் இழந்திருக்க மாட்டோம். மற்ற மாநிலங்கள் போல தமிழகத்தில் படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே பாராட்டி மகிழும் நிலை வர வேண்டும். திரைப்பட நடிகர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு தர முன் வர வேண்டும்.

  முனைவர் கவிஞர் சிற்பி அவர்களின் அணிந்துரையில் இருந்து சிறு துளிகள். “புதுக்கவிதையின் இரண்டாம் காலகட்டத்தில் ஒரு சகாப்தத்தைத் தனக்கே உரியதாகச் செதுக்கிக் கொண்டவர் கவிஞர் மு. மேத்தா.

  வசீகரமான இளமை ததும்பத் ததும்ப அவர் எழுதிய கவிதைகளுக்குத் தமிழகத்தில் யாருக்கும் இல்லாத ஒரு வாசகர் பட்டாளம் உருவாயிற்று. இதை ஒரு வியப்புறு நிகழ்ச்சி (PHENOMENON) என்றே குறிப்பிட வேண்டும். இது மறைக்க முடியாத வரலாறு.

  புதுக்கவிதையின் தாத்தா கவிவேந்தர் மேத்தா அவர்கள், இந்தியாவின் வரைபடத்தையே தனது புதுக்கவிதையில் காட்சிப்படுத்திம் அழகே அழகு!

  எழுக … என் தேசமே!
  தாயே !

  உன்னுடைய கால்களோ

  கன்னியாகுமரியின் கடற்கரை ஓரம்

  உன்னுடைய தலையிலோ

  இமயப் பனிமலையின்

  ஈரம் … வலதுகை தொடுவது

  வங்காள் விரிகுடா … இடதுகை நனைவது

  அரபிப் பெருங்கடல்! இப்படி

  ஈரம் சூழ இருந்தாலும்

  உன் வயிற்றில் எந்த நெருப்பு

  எரிந்து கொண்டிருக்கிறது? அதனால் தான்

  ஆறுகள் என்கிற

  ஈரத்துணிகளைக் கட்டிக்

  கொண்டிருக்கினறாயா?

  இந்தியாவின் வரைபடத்தை மட்டுமன்றி, ஒழிக்கப்படாத பசி, பட்டினி, வறுமையையும் கவிதையில் சுட்டியது சிறப்பு.

  மதம் அன்று நெறியாக இருந்தது. ஆனால் இன்று வெறியாக மாறி வருகின்றது. மதம் பண்படுத்தப் படைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் இன்று புண்படுத்தவே பயன்படுத்துகின்றனர். காந்தி, பிறந்து வாழ்ந்த தேசத்தில் மதச் சண்டைகள் நடப்பது வெட்கக் கேடு. மதமா? மனிதமா? என்ற கேள்வி வந்தால் மனிதத்தை தேர்வு செய்வதே மனிதாபிமானமாகும். இன்று நாட்டில் நடக்கும் மதச் சண்டைகளை சுட்டும் விதமாக ரத்தினச் சுருக்கமாக வடித்த கவிதை மிக நன்று.

  ‘மத’யானை வருகிறது

  மனிதர்களை

  மிதித்தபடி ..

  .

  மாமனிதர் அப்துல்கலாம் அவர்களும், இந்தியாவின் ஏழ்மை நீக்க, விவசாயம் செழிக்க, உற்பத்தி பெருக இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து உதவுகிறார். சிலர் நதிகளை சிறைபிடித்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று குரல் கொடுத்தும் வருகின்றனர். ரத்தினச் சுருக்கமாக ஹைக்கூ வடிவில் வடித்த கவிதை மிக நன்று.

  நாய்களைக்

  கட்டி வை

  நதிகளை அவிழ்த்து விடு!

  இங்கே நாய்கள் என்பது குறியீடாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்று மனிதாபிமானமற்ற முறையில் கூச்சலிடும் மனிதர்களையே நாய் என்று குறிப்பிடுகின்றார்.நதிகளை தேசியமயமாக்கக் கூடாது என்று சிறு பிள்ளைத் தனமாக சொல்பவர்களின் தலையில் கொட்டும் விதமாக உள்ளது .

  ‘உன்னுடைய கதை இது’ என்ற கவிதையில் ஒரு கதையையே கவிதையாக வழங்கி பெண்ணின் உணர்வை விதைத்த விதம் நன்று. முடிப்பு முத்தாய்ப்பு.

  தமிழின் சிறப்பு எழுத்துக்களில் உள்ளது. எழுத்துக்களின் சிறப்பு பற்றி வடித்த கவிதை ஒன்று இதோ!

  எழுத்துக்கள்!

  என்னையே நான்

  கண்டுகொள்ள உதவும் கண்ணாடி

  என்னை அறியாதவர்க்கு

  அறிமுகப்படுத்தும் புகைப்படம்

  சில சமயம் அலைநீரில் நிழல் ஒரு சில

  சமயங்களில்

  கற்களில் என்

  சிலை வார்ப்பு முகம் திருப்பிக் கொள்ளும்

  பகைவரிடமும்

  எனக்காக வாதாடும்

  இன்னொரு முகம்

  சிலருக்கு வெறும் நகம்

  எனக்கு முகம் :

  கவிதைகளால் புகழ் அடைந்தவர் கவிவேந்தர் மு. மேத்தா. அவரை நேரடியாகப் பார்க்காதவர்களும் அவரது கவிதையை படித்து இருப்பார்கள். உண்மை தான், அவரது கவிதை எழுத்துக்கள் தான் பலருக்கு அவரது புகைப்படம் என்பது உண்மை.

  கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கவிதையில் வரும் உவமைகள் ஒப்பீடுகள் எளிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கவிதை வரிகள் இதோ!

  உறங்கிக் கொண்டிருக்கும்

  போர்வாளைக் காட்டிலும் ஊர்ந்து கொண்டிருக்கும்

  புழு கூட உயர்ந்தது தான்!

  காதலின் முன்னுரை கண்களால் எழுதப்படுகிறது. காதலியின் கண்கள் பற்றி வர்ணிக்காத கவிஞர்கள் தான் உண்டோ? இதோ கண்கள் பற்றிய மிகச் சுருக்கமான கவிதை ஒன்று.

  கணக்கு!

  எத்தனை தடவை

  கொள்ளையடிப்பது …. ஒரே வீட்டில்

  உன் கண்கள்!

  மாத ஊதியம் வாங்கியதும், மளிகைக் கடைக்கு, பால் கடைக்கு, தொலைபேசிக்கு, அலைபேசிக்கு, மின்சாரத்திற்கு, எரிவாயுக்கு என்று பணம் செலவாகும், கையில் எதுவும் மிஞ்சாசு, கடன் வாங்க வேண்டிய அவல நிலை. ஊதியம் உயர்ந்த போதும் அதைவிடக் கூடுதலாக விலைவாசியும் உயர்ந்து விடுகிறது. ஏழைமக்கள், நடுத்தர மக்கள் வாழ்க்கை நடத்துவதே பெரிய போராட்டமாக உள்ளது. நாட்டில் நடக்கும் அவலத்தை சுட்டும் கவிதை ஒன்று.

  முதல் தேதி!

  என்னுடைய சம்பள நாளில்

  எண்ணி வாங்குகின்ற பளபளக்கும் நோட்டுகள்ல்

  எவரெவர் முகமோ தெரியும்

  என் முகத்தைத் தவிர!

  கவிவேந்தர் மு. மேத்தா அவர்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் ஊதியம் பெற்று செலவு செய்த உணர்வை அப்படியே கவிதையாக்கி உள்ளார். படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் அனுபவத்தை உணர்த்தி உள்ளார். இக்கவிதை படித்த போது எனக்கு, ‘கையிலே வாங்கினேன் பையிலே போடல, காசு போன இடம் தெரியலை’ என்ற பழைய திரைப்படப் பாடல் நினைவிற்கு வந்தது. இது தான் படைப்பாளியின் வெற்றி ஒன்றை படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்றை நினைவூட்ட வேண்டும்.

  மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். பிதா என்ற தந்தை பற்றிய கவிதை நன்று. இக்கவிதை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரது அப்பா பற்றிய நினைவு வந்தே தீரும் என்று உறுதி கூறலாம்!

  தந்தைக்கு ஒரு தாலாட்டு!

  பள்ளிக்கூடம் போகாத

  பல்கலைக்கழகமே உன்னிடத்தின் தானே …

  பாடங்களை நான் படிக்கத் தொடங்கினேன் !

  பார்க்கும் கண்களுக்கு நீ பாமரன் தான் ! என்றாலும்

  ஞானமெல்லாம் உன் வீட்டில் நடை பயில வாராதோ?

  உன்னைப் போல நானும் உருகக் கூடாதென்றா

  மெழுகு விளக்கே நீ என்னை

  மின்விளக்காய் ஏற்றி வைத்தாய்?

  காதல் பற்றி பாடாத கவிஞர் இல்லை, காதலைப் பாடாத கவிஞர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. பெரும்பாலான கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். காதலைத் தாண்டி மற்ற பிரச்சனைகளைப் பற்றியும் கவிதை எழுதியவர்களே கவி உலகில் நிலைக்கிறார்கள். கவிஞர் மு. மேத்தா அவர்களின் கவிதைகளில், காதல் கவிதை ஊறுகாய் போல மட்டுமே இருக்கும்.

  காதல்!

  விரித்தவர்களே

  அகப்பட்டுக் கொள்ளும் விசித்திர

  வலை.

  கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கவிதைகளில் எள்ளல் சுவைக்கும் பஞ்சம் இருக்காது. எள்ளல் சுவையுடன் நின்று விடாமல் அடுத்து சிந்தித்து உணர்ந்து கொள்ளும் விதமாகவும் இருக்கும்.

  சிறு குறிப்பு வரைக!

  நெய்வேலி டிசம்பர் 2003 தண்ணீர் வேண்டி

  பிரமாண்டமான

  நட்சத்திரப் பேரணி நடிகர்களைக் காணக்

  காத்துக் கிடந்த

  கூட்டம் கவலைப்பட்டது …

  மழை வந்து கெடுத்து விடுமே என்று.

  வெளிச்சம் வெளியே இல்லை என்ற தலைப்பிலான கவிதைச் சிறுகதை மிக நன்று. உள்ளத்து உணர்வுகளின் பதிவு.

  நாம் வாங்கும் எல்லா இதழ்களின் பக்கங்களையும் முழுமையாக படித்து விடுவதில்லை. விடுபட்ட பக்கங்களும் உண்டு. அதனை உணர்த்திடும் புதுக்கவிதை.

  ஞானம்!

  எடைக்குப் போடும் போது தான்

  தெரிகிறது

  பத்திரிக்கைகளில் படிக்காமல் விட்ட

  பயனுள்ள பக்கங்கள் !

  கவிவேந்தர் மு. மேத்தா அவர்களை புன்னகை மன்னன் என்றே சொல்லலாம், எப்போதும் முகத்தில் புன்னைகையை அணிந்து இருப்பவர். புதுக்கவிதைக்குப் புதுப்பாதைப் போட்டுத் தந்தவர்கள் என்ற கர்வம் என்றும் கொள்ளாதவர். அகந்தை என்றால் என்னவென்று அறியாதவர். இவரது புதுக்கவிதைகள் படித்துத் தான் பல கவிஞர்கள் உருவானார்கள் என்பது வரலாறு. நான் என்றும் அவரது கவிதைகளின் ரசிகன். ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான, எளிமையான, இனிமையான மனிதர், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே மிக உயர்ந்த விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பது என் விருப்பம். மைய அரசு யார் யாருக்கோ விருது வழங்குகின்றார்கள். இவருக்கு வழங்கிட முன்வர வேண்டும். இது வாசகன் விருப்பம்.

 11. 11 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்
  நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன்

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  ஓவியா பதிப்பகம், 17-16-5எ, கே.கே. நகர், வத்தலக்குண்டு – 642 202.
  பேச : 76675 57114 விலை : ரூ. 100

  *****
  நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களை சென்னையில் நடந்த விழாவில் அம்மா மித்ராவின் ஹைக்கூ கவிதை விருது வாங்க மனைவியுடன் வந்து இருந்தார். முகநூலில் சந்தித்த நண்பரை நேரடியாக சந்தித்து மகிழ்ந்தேன். முகநூல் கவிதைகள் குறித்தான பாராட்டை இருவரும் பகிர்ந்து கொண்டோம். பின்னர் அலைபேசியில் பேசியபோதும் கவிதைகளை நூலாக்குங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். வேண்டுகோளை நிறைவேற்ரி உள்ளார். நூலின் பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்கலள் வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே எனக்கு அனுப்பி விட்டார், மதிப்புரைக்கு.

  சொற்களை சூட்சுமமாக அடுக்கி, மனதை வருடும் விதமாக, சிந்திக்க வைக்கும் விதமாக, அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, படைப்பாளி உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கும் உணர்த்தும் விதமாக வடிப்பதே கவிதை. இந்நூலில் காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் அவர்களும், மணிமேகலை பிரசுரம் முனைவர் லேனா. தமிழ்வாணன் அவர்களும் அழகிய அணிந்துரை வழங்கி உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்புரையும் நல்கி உள்ளார் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா.

  நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது. கவிதை நூலிற்கு திரைப்படப் பெயர் போல சிந்தித்து சூட்டியுள்ளார். அட்டைப்பட வடிவமைப்பும் கவிதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் சுந்தர் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  நூலாசிரியர் கவிஞர் நூர்தீன் அவர்கள் முகநூலில் கவிதை எழுதாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினந்தோறும் எழுதி வருபவர். ஹைக்கூ கவிதைகள் மட்டுமல்ல, புதுக்கவிதைகளும் தனக்கு வரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நூல் உள்ளது.

  மழைக்குத் தெரிவதில்லை

  வித்தியாசம்
  அடுக்குமாடிகளும்
  குடிசைகளும்

  அதற்கு ஒன்று தான்
  பொழுதுபோக்காகவும்

  ஏழைகளுக்கு போராட்டமாகவும் பெய்கிறது.

  மழையை கவிஞர் கூர்ந்து பார்த்த பார்வையின் விளைவே இக்கவிதை. நடைபாதையில் வசிப்பவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் மழையை விரும்புவதில்லை. காரணம், மழை அவர்களுக்கு இன்னலையே தருகின்றது. ஆனால் பணக்காரர்கள் பங்களா வாசலில் அமர்ந்து மழையை ரசித்து மகிழலாம். ஒரே மழை சிலருக்கு இன்பமாகவும் பலருக்கு துன்பமாகவும் அமைவது படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார்.

  நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. குறிப்பாக திரைப்படத் துறையினர் ஒரு பேய்ப்படம் வசூலாகி விட்டது என்ற காரணத்திற்காக வரிசையாக பேய்ப்படம் எடுத்து வருகின்றனர். படைப்பாளிகள் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக்க் கொண்டால் படைப்பில் தரம் இருக்காது. உலகில் எங்குமே இல்லாத பேயை இருப்பதாக்க் காட்டுவது பித்தலாட்டம். நூலாசிரியர் மூட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக பல கவிதைகள் வடித்துள்ளார். பதச்சோறாக ஒன்று.

  ஊருக்கு ஒதுக்குப்புறமாக

  ஆலமரம்

  யாரோ கிளப்பிவிட்ட
  புரளியில்

  மரத்தைச் சுற்றிலும்

  பிரார்த்தனைத் தொட்டில்
  கட்டினார்கள்

  புத்திர பாக்கியமில்லாதவர்கள்

  வறுமை
  வாட்டிய பூசாரியும்

  செழிக்கத் தொடங்கினார்
  புத்திர பூஜையில்

  மனிதன் உயிர் வாழ

  சுவாசம் தரும் மரம்
  மனிதனை எப்படித் தரும்?
  நம்பிக்கை வீண் போகவில்லை
  தொட்டில் கட்டியவர்கள்

  யார் யாருக்கு குழந்தைப்பேறு
  கிடைத்ததோ தெரியவில்லை

  வருடா வருடம்

  பெற்றெடுக்கிறாள்
  பூசாரியின் மனைவி.

  கவிதையை எள்ளல் சுவையுடன் முடித்து பகுத்தறிவு விதைத்துள்ளார். பாராட்டுக்கள்.

  ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் புத்த பிட்சுகளோ பேராசை பிடித்து சிங்கள மதவெறி பிடித்து மனிதநேயமற்ற முறையில் இலங்கையில் பேசி வருகின்றனர். அவர்களுக்கான கவிதை மிக நன்று.

  போதிமரத்தையெல்லாம்

  வெட்டி விற்று விட்டானா? புத்தன்
  வெப்பம் தாங்காமல் மதம் பிடித்து

  மனித ரத்தக் குடித்து
  தாகம் தீர்த்துக் கொள்கிறார்களே

  புத்த பிட்சுகள்.

  இலங்கையில் தமிழினப் படுகொலையை சுட்டுவதாக உள்ளது. காதலைப் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை. நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களும் காதலைப் பாடி உள்ளார். காதல் கவிதையிலும் இயற்கை நேசம் தெரியும் விதமாக எழுதி உள்ளார்.

  நீ கொடுத்த

  ஒற்றை முத்தத்தில்

  என்னில் பறக்கின்றன

  ஆயிரம் பறவைகள்
  உன் கேசத்தை எதற்கும்
  கலைத்து வை.

  அதிலாவது கூடு கட்டட்டும்
  மரங்கள் காணா
  அப்பறவைகள்.

  வித்தியாசமாக கற்பனை செய்து வடித்த கவிதை நன்று. எங்கே பறவைகளைக் காட்டுங்கள் என்று காதலி கேட்கக் கூடாது. கவிதையாக ரசிக்க வேண்டும். அவ்வளவு தான். கவிதைக்கு பொய்யும் அழகு புரிந்திடல் வேண்டும்.

  சிறுகதை வடிவிலும் சில கவிதைகள் உள்ளன.
  முத்தம் பற்றிய கவிதைகள் சில வந்தாலும் சிறப்பாகவே உள்ளன.

  சிக்கு முக்கி

  கற்களாய்

  முத்தத்தால்

  உரசிக் கொண்ட போது
  தேகம் பற்றி எரியும்

  மோகத் தீயால்

  உன்னால் நானும்
  என்னால் நீயும்
  அணைக்கப்பட்டு
  ஃபீனிக்ஸ்
  பறவைகளாகும் போது
  மீண்டும்

  பற்றிக் கொள்ளும் இதழ்கள் !

  முத்தம் பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது கவிதை. படைப்பாளி உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கும் உணர்த்தி விடுகிறார். இனிமை நினைவுகள் வந்து விடுகின்றன. நாம் மிகவும் நேசித்தவர்கள் புரியாமல் திட்டும் போது, கேட்கும் கேட்காதது போல ஆகி விடுவதுண்டு. அன்பானவர்கள் திட்டி அதற்கு செவிமடுத்தால் உள்ளத்தில் ஏற்படும் ரணம் சொல்லில் அடங்காது.

  சொல் அம்புகளால்

  தாக்கி ரணப்படுத்தி

  அதில் நீ
  மகிழ்வதாக
  நினைக்கிறாய்.

  உனக்கெப்படித் தெரியும்
  அதற்காக நீ என்
  வாயடைக்கும் போதே
  நான் பூட்டிக் கொண்டது
  என் காதுகளையும் என்று !

  நீண்ட நெடிய கவிதைகள் மட்டுமல்ல, சொற்சிக்கனத்துடனும் சில கவிதைகள் உள்ளன.

  ஒருமுறை பூத்தால்
  மரணதண்டனை மலர்களுக்கு
  நீ மட்டும் தினமும்
  பூத்துக் கொண்டேயிருக்கிறாய்!

  . இந்த நூல் கண்டிப்பாக அடுத்தடுத்த பதிப்புகள் வரும். வாழ்த்துக்கள். அடுத்த பதிப்பில் பதிப்பக முகவரி தமிழிலும் இடம் பெறட்டும். ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.96 ஆம் பக்கம் ” கோவில் ” என்பது கோவல் என்று அச்சாகி உள்ளது . அடுத்த பதிப்பில் திருத்திடுங்கள்.

  நூலின் தலைப்பில் உள்ள கவிதை அடுக்கு மாடி குடியிருப்பின் இன்னலை நன்கு உணர்த்தி உள்ளது .

  பிரமாண்டமான
  தோட்டத்துடன் கூடிய
  பெரிய கிராமத்து
  வீட்டை விற்று
  ஆசையுடன் புதிதாய்
  நகரத்தில் வாங்கிய
  அடுக்குமாடி குடியிருப்பில்
  ஏழாவது தளத்தில்
  எண் நூறு சதுரடி வீட்டில்
  பாப்பா தேடுகிறாள்
  இரவில் சோறு ஊட்டும்போது
  முற்றத்தையும் நிலாவையும் !

  .திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற பிறந்த ஊரை பெயரோடு இணைத்துக் கொண்டு பிறந்த மண் பற்றாளர் வலங்கைமான் நூர்தீன் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்

 12. 12 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  வழக்கறிஞர் கவிஞர் கே. இரவியின் நோக்கில் திருவள்ளுவரின் தனிச்சிறப்பு.
  கவிஞர் இரா. இரவி.
  *****
  திருக்குறள் உலகப்பொதுமறை, உலகம் போற்றும் உன்னத இலக்கியம். உலக அறிஞர்கள் யாவரும் பாராட்டும் வாழ்வியல் இலக்கியம். காந்தியடிகள், இன்னொரு பிறவி என்ற ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ; காரணம், திருக்குறளை அது எழுதப்பட்ட மூலமொழியான தமிழ்மொழியில் படித்து மகிழ வேண்டும் என்பதற்காக. காந்தியடிகளுக்கு திருக்குறளை அறிமுகம் செய்தவர் டால்ஸ்டாய். காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்றால் டால்ஸ்டாயின் குரு நமது திருவள்ளுவர். ரசியாவில் உலகம் அழிந்தாலும் அழியாத அறையில் இடம்பெற்றுள்ள அரிய நூல் திருக்குறள். உலகில் தமிழை அறியாதவர்களும் அறிந்த இலக்கியம் திருக்குறள்.

  திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் உலகில் இல்லை என்றே கூறலாம். பாடாத பொருளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார். மனிதன் மனிதனாக வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொன்னவர் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு சிந்தனையுடன் எக்காலமும் பொருந்தும் வண்ணம் வடித்துள்ளார். தமிழ், தமிழர், தமிழன் என்ற சொற்களை பயன்படுத்தவே இல்லை. ஆனால், தமிழின் மகுடமாக விளங்குவது திருக்குறள். அதனால் தான் மகாகவி பாரதியார், ‘வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாடினார்.

  வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு திருக்குறள் ஒரு விழி என்றால், மகாகவி பாரதியார் கவிதைகள் மறுவிழி எனலாம். திருவள்ளுவர் மீதும், பாரதியார் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டவர். திருக்குறளை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து வடித்த நூல் நன்று. சிறிய நூலாக இருந்த போதும் சிந்திக்க வைக்கும் நூலாக உள்ளது. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நல்ல புலமை உள்ள காரணத்தால் இரண்டு மொழிகளிலும் நூல் வடித்துள்ளார். கம்ப இராமாயணத்தின் மீதும் ஈடுபாடு உள்ள காரணத்தால் இந்நூலில் ஆய்வில் சில மேற்கோள்களும் வருகின்றன.

  திருக்குறளை பலரும் ஆராய்ந்தார்கள், ஆராய்வார்கள், எக்காலமும், முக்காலமும் ஆய்வுப்பொருளாக கருவாக இருந்து வருவது திருக்குறள். வழக்கறிஞர் க. இரவி அவர்களின் திருக்குறள் ஆய்வு மிக நுட்பமானது. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பால் கொண்டது. காமத்துப்பால் என்பதை சிலர் இனபத்துப்பால் என்று எழுதியும் அச்சிட்டும் வருகின்றனர். இது தவறு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். காமத்துப்பால் என்பது நல்ல சொல் தான். சிலர் அது கெட்ட சொல் என்று தவறாகக் கருதி பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர். காமம் வேறு, இன்பம் வேறு, பிழையான பொருளில் எழுதி வருகின்றனர். திருவள்ளுவர் இன்பத்திற்கு தரும் விளக்கம் மிகமிக நுட்பமானது. அந்த நுட்பத்தை வழக்கறிஞர் க. இரவி அவர்கள் நுட்பமாக விளக்கி உள்ளார்.

  “எந்த அக நிகழ்ச்சி அறத்தால் விளைகிறதோ அதுவே இன்பம், இது தான் குறளாசான் தரும் வரையறை! இன்பத்தின் இலக்கணம்”

  அறத்தான் வருவதே இன்பம், அதாவது அறத்தின் உடனடி, நேரடி விளைவாக வருவது தான் இன்பம். மற்ற, சில அக நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி, குதூகலம் என்றெல்லாம் பெயர் பெற்று இன்பம் போல ஒரு கருத்த்து மயக்கத்தைத் தோற்றுவிக்கலாமே தவிர அவை இன்பமாக மாட்டா. அவையெல்லாம் புறத்த ; புகழும் இல.

  அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
  புறத்த புகழும் இல. 39
  அற்புதமான திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்த கருத்துக்கள் அருமை. பிறர் கூறியன கூறாமல் வித்தியாசமாக கூறி உள்ளார் வழக்கறிஞர் க. இரவி அவர்கள்.
  ஓவியம் ரசிப்பது, பூவின் வாசம் நுகர்வது இவை எல்லாம் இன்பம் அல்ல, மகிழ்ச்சி மட்டுமே. இன்பம் என்பது அறத்தான் வருவது என்று திருவள்ளுவர் வலியுறுத்தி உள்ளதை சான்றுகளுடன் நூலில் நிறுவி உள்ளார். இந்த நூல் படித்த பின்பு இன்பம் என்று இது நாள் வரை சொல்லியும், எழுதியும் வந்த எதுவும் இன்பம் இல்லை. இன்பம் என்றால் எது இன்பம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். சிற்றின்பம் என்று பயன்படுத்திய சொல்லும் தவறு என்பதை உணர்த்தியுள்ளார். சிற்றின்பம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் சிறுமகிழ்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்துவதே சரி என்ற முடிவுக்கு வரும் விதமாக நூல் உதவியது.
  வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்து கொண்டே இலக்கியத்திலும் நாட்டம் கொள்வது தனிச்சிறப்பு. இலக்கிய ஈடுபாடு இதயத்தை இதமாக்கும், ஈரமாக்கும், இலக்கிய ஈடுபாடு தான் வாழும் காலத்திலேயே படைப்புகள் பற்றி பேராசிரியர்கள் ஆராய்ந்து கட்டுரைகள் வழங்கும் அளவிற்கு உயர்ந்ததற்கு முதல் காரணம் இலக்கிய ஈடுபாடு தான். படைப்பாளியைப் பாராட்டும் முகத்தான் சென்னையில் நடந்த படைப்பாய்வு நூலாகி வெளிவந்த வெற்றியினைத் தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மதுரையில் முத்திரைப் பதித்து வரும் திருமலை மன்னர் கல்லூரியில் படைப்பாய்வு நடைபெறுகின்றது.

  வாழும் காலத்திலேயே படைப்பாளியைப் பாராட்டும் பாங்கு மகாகவி பாரதியார் காலத்தில் இல்லை. இருந்திருந்தால் பாரதியார் 39 வயதில் இறந்து இருக்க மாட்டார். யானை மிதித்த காயம் பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். இன்றைக்கு உள்ள விழிப்புணர்வும், மருத்துவமும் அன்றைக்கு இருந்திருந்தால் இளம்வயதில் பாரதியார் இறந்திருக்க மாட்டார்.

  சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள் ‘ இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று’ அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல்லை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருபவன் நான். வழக்கறிஞர் க. இரவி அவர்களும் ஓய்வின்றி இயங்கி வருபவர் என்பதற்கு சான்றுகள் அவர் படைத்த நூல்கள். புதுவைப் பல்கலைக்கழகமும், வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து புதுவையில் நடத்திய வள்ளுவரின் வாயிலில் வான்புகள் என்ற பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட சிறிய நூல், ‘வள்ளுவரின் வாயிலில்’. அதுபோல சிறிய நூலில் அரிய கருத்துக்களை திருக்குறளின் சிறப்பை நுட்பத்தை நன்கு உணர்த்தி உள்ளார்.

  வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பன்முக ஆற்றலாளர், கவிதைகள் பல வடித்துள்ளார். இசைப்பாடல்களும் எழுதி பாடல்களாக வந்துள்ளன. பல்வேறு நூல்களும் எழுதி உள்ளார். http://www.ravilit.com என்ற இணையம் சென்று பாருங்கள் என்று தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அய்யா சொன்னார்கள். சென்று பார்த்து வியந்தேன். அந்த இணையத்தில் இருந்து தான் ‘வள்ளுவரின் வாயிலில்’ நூல் அச்செடுத்தேன். படித்தேன், பரவசம் அடைந்தேன்.

  திருக்குறள் என்பது கடல். அதில் மூழ்கிடும் அனைவருக்கும் நல்முத்து, கருத்து முத்து கிடைக்கும். திருக்குறள் என்பது கருத்துச் சுரங்கம், தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். திருக்குறள் குறித்து பல்வேறு நூல்கள் வந்துள்ள போதும், வழக்கறிஞர் க. இரவி அவர்கள் எழுதிய இந்த சிறிய நூல் திருவள்ளுவரின் தனிச்சிறப்பை எடுத்து இயம்பி உள்ள நூல். இன்பம் குறித்த இலக்கணம் திருவள்ளுவர் போல் உலகில் வேறு யாருமே சொல்லி இருக்க மாட்டார்கள். இன்பம் என்பது பற்றிய புரிதலை திருவள்ளுவரின் நோக்கில் விளக்கி உள்ள பாங்கு அருமை.

  வழக்கறிஞர் க. இரவி அவர்களை தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யா அவர்களுடன் இலக்கிய விழாவிற்காக சென்னை சென்று இருந்த போது சந்தித்து மகிழ்ந்தேன். திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல் ஆய்வுக் கட்டுரை எழுதுவதோடு நின்று விடாமல் திருக்குறள் வழி வாழ்ந்து வருபவர் ; புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர் ; எப்போதும் எங்கும் சினம் கொள்ளாதவர் ; அதிர்ந்து பேசாத பண்பாளர் ; நல்லவர் ; வல்லவர் ; அவரது இனிய மனைவி நாடறிந்த அறிவிப்பாளர் ; நல்ல உச்சரிப்பாளர் ஷோபனா இரவியுடன் வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்.

  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழகத்தின் தலைநகரில் சென்னையில் வாழும் வழக்கறிஞர் க. இரவியின் படைப்புலகம் பற்றிய ஆய்வரங்கம். திருமலை மன்னர் கல்லூரி திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடத்தி மகிழ்கின்றது. படைப்பாளிக்கு இதற்கு இணையான மகிழ்ச்சி வேறு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு முன்பு கல்லூரியில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புலகம் பற்றி ஆய்வரங்கம் நடந்தது. நானும் இறையன்பு அவர்களின் படைப்பு பற்றி கட்டுரை வாசித்து, ஓர் அமர்விற்கு தலைமை வகித்தேன். அப்போது அங்கு முதுமுனைவர் வெ. இறையன்பு வந்தார்கள். எழுந்து நின்றேன், என்னை அமர வைத்து விட்டு, அவர் நின்று பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது அந்நாள். அந்த வாய்ப்பை வழங்கியவர் திருமலை மன்னர் கல்லூரி பேராசிரியர் நம். சீனிவாசன் அவர்கள். இதுபோன்ற மலரும் நினைவுகளை மலர்விக்கக் காரணமாக இருந்தது இந்த நூல்.

  கவிஞர் வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு 1330 திருக்குறளும் பிடித்து இருந்தாலும் அவர் சிந்தையின் ஒரு மூலையில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு திருக்குறள் எது தெரியுமா?

  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இவன் 341
  ஒருவன் எந்த எந்தப் பொருள்களின் மீது கொண்ட ஆசையை நீக்கியிருக்கின்றானோ அவன் அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தால் வருந்துவது இல்லை.
  வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு எது சரி என்பதைச் சில நேரங்களில் அவரது அறிவு அவருக்கு உணர்த்த முடியாத போது திருக்குறள் தீர்வுகளே அவரை நெறிப்படுத்தியதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மட்டுமல்ல உலகில் பிறந்த மனிதர்கள் யாவருக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது உயர்ந்த திருக்குறள்.
  இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்தவர். தினசரி செய்தித்தாள்கள் விற்று படித்து தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் நேசிப்பதும், வாசிப்பதும் திருக்குறளே. எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டியே பேசுவார்கள். சாதனை மனிதராக அவர் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது திருக்குறள் என்றால் மிகையன்று.
  கவிஞர் வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பன்முக ஆற்றலாளராக, கவிஞராக, கட்டுரையாளராக, இசைப்பாடல் ஆசிரியராக, சிறந்த பேச்சாளராக, சிறந்த வழக்கறிஞராக, சிறந்த இலக்கியவாதியாக படைப்புலகம் பற்றி ஆய்வு நடத்தும் அளவிற்கு அவர் வளர்ந்திடக் காரணம் திருக்குறள் என்றால் மிகையன்று.
  திருக்குறளை ஆழ்ந்து படித்ததோடு நின்று விடாமல் வாழ்வில் கடைபிடித்த காரணத்தால் தான் இந்த நிலை அவரால் அடைய முடிந்தது. வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்களுக்கு திருக்குறள் மட்டுமன்றி பாரதியார் பாடல்களை ஆழ்ந்து உணர்ந்து படித்துள்ளார். கம்ப இராமாயணத்தையும் ரசித்து, ருசித்து படித்துள்ளார். அதன் தாக்கம் இந்த சிறிய நூலில் காண முடிகின்றது. திருவள்ளுவரை பல்வேறு கோணத்தில் ஆய்வு நிகழ்த்தி உள்ளார். கவிஞர், வழக்கறிஞர் க. இரவி, திருவள்ளுவர், திருக்குறள் எழுதும் போது 1330 திருக்குறளுக்கு அதிகமாகவே எழுதி இருப்பார், எழுதி முடித்த பின்பு தள்ள வேண்டியதை தள்ளி விட்டு 1330 திருக்குறளை மட்டுமே தேர்வு செய்து இருப்பார் என்று இவர் கணித்து எழுதி உள்ளார். இவரது கணிப்பு உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.

  அகத்தே இன்பம் தருவது பற்றி, அறம் பற்றி, மகாபாரத்தில் வரும் காட்சியை எழுதி விளக்கி உள்ள கருத்து மிக நன்று. அதிலிருந்து சில துளிகள் இதோ!

  “கர்ணனிடம் வந்து அவன் உடலோடு ஒட்டிப்பிறந்த கவச, குண்டலங்களை இந்திரன் யாசகமாகக் கேட்கிறான். கவச குண்டலங்களைத் தந்து விட்டால், போரில் பாண்டவரகள் தன்னை எளிதில் வென்று விட முடியும் என்று கர்ணனுக்குத் தெரியும். ஆனாலும் கொடுத்துச் சிவந்த கரங்களால் கவசத்தையும், இருசெவிக் குண்டலங்களையும் அறுத்தெடுத்துத் தருகிறான் கர்ணன். புறத்தே மகிழ்ச்சி தர முடியாத இச்செயல் கர்ணன் அகத்தே இன்பம் விளைவித்தது ஏன்? அதைத்தான் ஈத்துவக்கும் இன்பம் என்று அடையாளம் காட்டுகின்றார் திருவள்ளுவர்.
  நான் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளராக இருந்த போதும், கர்ணன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூட சொல்லலாம். கர்ணன் திரைப்படத்தை மிகவும் விரும்பி ரசித்துப் பார்த்தவன். மனதை விட்டு அகலாத, அந்த ஒப்பற்ற காட்சியினை நூலில் எழுதி நம் கண்முன் காட்சிப்படுத்தி ஒப்பற்ற திருவள்ளுவரின் தனிச்சிறப்பை ஒப்பிட்டுக் காண்பித்த விதம் அருமை. பாராட்டுக்கள்.

  புலால் உண்ணாமல் வாழ்வதே அறம் என்கிறார். புலால் உண்ணாமை அறம் மட்டுமல்ல. தன்னலமும் உள்ளது எனலாம். இன்றைக்கு மருத்துவர்கள் அனைவரும் உடல்நலத்திற்கு சைவ உணவை பரிந்துரை செய்கின்றனர். 40 வயதைக் கடந்து விட்ட பலர் உடல் நலன் கருதி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அசைவத்தை கைவிட்டு சைவமாக மாறி வருகிறார்கள். சைவமாக வாழ்வது விலங்குகளுக்குச் செய்யும் அறமாக இருந்தாலும் நீண்ட நாள் நலமாக வாழும் தன்னலமும் உள்ளது.

  கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும் 260
  இந்தத் திருக்குறளையும் மேற்கோள் காட்டி திருவள்ளுவரின் தனிச்சிறப்பை உணர்த்தி உள்ளார். கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்ற சொல்லாட்சியின் மூலம் திருவள்ளுவர் உயர்ந்து நிற்கிறார்.

  வழிபாட்டுச் சடங்குகள் பற்றிய குறிப்பே இல்லை என்று சொல்லி விட முடியாது. எடுத்துக்காட்டுகள் மலர்மிசை ஏகினான் (3), இந்திரனே சாலும் கரி (25), தாமரைக் கண்ணன் உலகு (103), செய்யவள் தவ்வை (167) என்று குறிப்பிட்டுள்ளார் நூலில், வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்கள்.

  திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து 10 திருக்குறளும் ,கவிஞர், வழக்கறிஞர் க. இரவி குறிப்பிட்ட கடவுள் பெயர்களும் குறிப்பிட வில்லை என்றால் நமது கைக்கு திருக்குறளே கிடைத்து இருக்காது என்பது என் கருத்து.

  கணினி யுகத்திலும், மூட நம்பிக்கைகளும், சோதிடங்களும், குருபெயர்ச்சி பலன்களும், போலிச் சாமியார்களும் பெருகி உள்ளது இக்காலத்தில். திருவள்ளுவர் காலத்தில் மூட நம்பிக்கைகள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர் அன்றே, நான் சொல்வதற்காக எவரும், எதையும் ஏற்க வேண்டாம் என்பதை,

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423
  என்ற குறள் மூலம் விளக்கியுள்ளார்.

  மாமனிதர் அப்துல் கலாம் சொன்னவை என் நினைவிற்கு வந்தது .
  “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் நம்பிக்கை இல்லை .”
  மாமனிதர் அப்துல் கலாம் கருத்து !
  ” நான் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போது மரண தண்டனை பற்றிய முடிவுகள்தான் எனக்கு மனவலியை ஏற்படுத்தின . மரண தண்டனையை அப்புறப்படுத்த வேண்டும் .”
  மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் திருக்குறளை ஆழ்ந்து படித்து அதன் வழி நடப்பதன் காரணமாகவே பகுத்தறிவோடும், மனிதே நேயத்தோடும் கருத்துக்கள் சொல்ல முடிகின்றது
  வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்கள், திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, படித்து, ஆராய்ந்து ‘வள்ளுவரின் வாயிலில்’ நூல் வடித்துள்ளார். இந்நூலில் எடுப்பு, தொடுப்பு யாவும் மிக நன்று. முடிப்பில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வழக்கறிஞர், கவிஞர் க. இரவி ஆன்மிகவாதி. கவிஞர் இரா. இரவி பகுத்தறிவுவாதி.

  “அண்ணன்மார்களும், தம்பிமார்களும் செய்த முயற்சிகளைத் தந்தை அங்கீகரிக்கவில்லை, அவர் திருவள்ளுவரை காட்டுமிராண்டி என்றே சொல்லி ஒதுக்கி விட்டார்”.

  நூலில் எழுதியுள்ள இக்கருத்தை மறுக்கின்றேன். தந்தை பெரியார் நூல்கள் பல படித்து உள்ளேன் .தனது எழுத்திலோ, பேச்சிலோ, எந்த இடத்திலும் திருவள்ளுவரை காட்டுமிராண்டி என்று சொன்னதோ, எழுதியதோ இல்லை, இல்லவே இல்லை. திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறளை மக்கள் மத்தியில் பரப்பியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் இலட்சியம், நோக்கம், எல்லாமும் ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம்.

  எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

  கவிஞர், வழக்கறிஞர் க. இரவி அவர்கள், தந்தை பெரியார் பற்றிய தவறான கருத்தை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும் அடுத்த பதிப்பில் தவறான இக்கருத்தை நீக்கி விடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து நிறைவு செய்கிறேன்.

  .

  eraeravi
  நட்சத்திர கவிஞர்
  நட்சத்திர கவிஞர்

  Posts: 1857
  Points: 4027
  Join date: 18/06/2010

  View user profile Send private message

  Back to top

 13. 13 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  காரல் மார்க்சு காப்பியம் !
  நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14. விலை : ரூ. 60
  *****
  நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள் எழுதிய பாடல்கள் கல்லூரியில் பாடமாக இருந்த போது அவற்றை மனப்பாடம் செய்து அந்தக் கவிதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களுக்கு. அதன் காரணமாகவே இந்த நூல் வெளிவர பண உதவிகள் செய்துள்ளார். இந்த நூலை அவருக்கு படைப்பு செய்துள்ளார். இந்த நூல் அறிமுக விழா மதுரையில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் திரு. பி. வரதராசன் அவர்கள் நடத்தினார். அந்த விழாவில் ரூ. 50,000 நன்கொடை நூலாசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் வழங்கி மகிழ்ந்தார்.

  நூலில் இராசேந்திர சோழன் அவர்களின் அணிந்துரையும் மகுடேசுவரன் அவர்களின் நல்லுரையும் நன்று. காரல் மார்க்சு வாழ்க்கை வரலாற்றை காப்பியமாக வடித்துள்ளார். வரலாற்றை கவிதை நடையில் வடிப்பது எல்லோராலும் முடியாது. அவர் புலவர் பட்டம் பெற்ற காரணத்தாலும் தமிழ்மொழியில் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள காரணத்தால் மிக நுட்பமாகவும், எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும் விதமாகவும் நன்கு வடித்துள்ளார். காரல் மார்க்சு வரலாற்றையும் நன்கு பயின்றுள்ளார். அதனால் தான் அவரால் காப்பியம் வடிக்க முடிந்துள்ளது.

  மிகச்சிறந்த காரல் மார்க்சு பற்றிய பிம்பத்தை கண்முன்னே வைரவரிகளால் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள்.

  தத்துவப் போர்க்களத்தில்

  வெற்றியே தந்தான் வாழ்வைக்
  கொடுத்திடும் வறுமைப் போரில் கொத்தாக மூன்று பிள்ளை
  செத்தாரே! சென்னி வாழ்வை

  நோய்களும் தின்னக் கண்டு
  பித்தான போதும் கூடப்

  பிறழாதான் வாழ்க்கை என்னே!

  காரல் மார்க்சு உலகின் வறுமையை ஒழிக்க வழி சொன்ன போதும் தான் வறுமையில் வாடிய போதும் செம்மையாக வாழ்ந்தார் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

  காரல் மார்க்சின் தந்தை கண்ட கனவை வைர வரிகளில் செதுக்கி சராசரி தந்தையின் எதிர்பார்ப்பை அவருக்கும் இருந்தது என்பதை நன்கு புலப்படுத்தி உள்ளார். பாருங்கள்.

  சட்டத்தில் தேறி விட்டான்

  சரித்திரம் படைப்பான், நெஞ்சின்
  திட்டத்தை எல்லாம் மைந்தன்

  ஈடேற்றி வைப்பான் என்றோர்
  இட்டத்தை மனத்துள் வைத்துத்

  திகழ் ஆசை வானத் தின்மேல்
  பட்டத்தைப் பறக்க விட்டுப்

  பகற்கனாக் கண்டான் தந்தை.

  கவிதைகள் எளிய நடையில் இருந்த போதும் ஒரு சில சொற்களுக்கு அய்யம் வரலாம் என்று கருதி ஒவ்வொரு பக்கத்திலும் சில சொற்களுக்கு விளக்கம் தந்து இருப்பது நூலின் தனிச்சிறப்பு. வடமொழி எழுத்துக் கலப்பின்றி எழுதி உள்ளார். இஷ்டம் என்று எழுதாமல் இட்டம் என்றே எழுதி உள்ளார். நன்கு புரியவும் செய்கின்றது.

  காரல் மார்க்சு வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அவரது அப்பா இறந்து விடுகிறார். வறுமைய்லி வாடுகிறார். அவரது வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கவிதையால் வடித்து கண்முன்னே காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

  தத்துவத்தில் முனைவனெனும் பட்டமிருந் தென்ன
  சித்திரத்தில் உள்ள பழம் எப்பசியைத் தீர்க்கும்?
  எத்துறையில் எந்நெறியில் எப்பணியில் சேரல்
  பத்துமுறை எண்ணி எண்ணிச் சித்தமொடிந்தானால்.

  பொதுவுடைமை கருத்தை மக்கள் மனதில் பரவிடச் செய்தவர், அதில் வெற்றியும் கண்டவர், காரல் மார்க்சு என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.

  சிறு தொழிலர், விவசாயி, சீர் மிகுந்த பாட்டாளி,
  வெறுமுடலான் உழைப்பவர்கள், வேறுவழியற்றவர்கள்
  ஒருகுழுவாத் திரளும்வணம் உருக்கொள்ள வைப்பதற்காம்
  பரியசெயல் புரிவதுதான் பொதுவுடைமை யாளர்பணி.

  இலண்டன் மாநகரில் காரல் மார்க்சு வாழ்ந்த காலத்தில் வந்து துன்பத்தை, துயரத்தை வார்த்தைகளால் வடித்து வியப்பில் ஆழ்த்துகின்றார். மிகவும் உணர்ந்து உள்வாங்கி எழுதி உள்ளார். நேரில் பார்த்து எழுதியது போன்ற பிரமிப்பை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்.

  பெருநகர் இலண்டன் அல்லவா? காரல்
  வறுமையும் பெரியதா வளர்ந்து
  திருகிட அவனோ திகைத்தனன் ; சென்னி
  தெளிவுறு பொறுமையள் எனினும்
  வறுமையைப் பணத்தால் துரத்தலாம் ; பொறுமை
  வறுமையைத் துரத்துமோ நாளும்
  சிறுமைகள் வந்து பெருகுதல் கண்டு
  செத்தனன் நாள்தோறும் காரல்.

  காரல் மார்க்சு வாழ்க்கையில் வறுமையின் காரணமாக சொல்லில் வடிக்க முடியாத துன்பத்தை அனுபவித்துள்ளார். அதனால் தான் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க ஒரே வழி பொதுவுடைமை எனப்தை உலகிற்கு உணர்த்த முடிந்தது.

  தொட்டிலிலே கிடத்தத்தான் வறுமையினால்
  தோதில்லை ; சவம் எடுக்கும்
  பெட்டியினை வாங்குவதற்கும் வறுமையெனைப்
  பிசைகிறதே என்று காரல்
  முட்டி வரும் விழி நீறை முகம் துடைத்துப்
  பொருமுகையில் பிரெஞ்சு நண்பன்
  சட்டெனவே இரண்டு பவுன் தந்ததனால்
  பிரான்சிக்கா சவம் போயிற்று.

  காரல் மார்க்சு தன்னலம் கருதாது பொதுநலம் கருதி தான் வறுமையால் பெற்ற துன்பங்கள் உலகில் இனி யாரும் வாடக் கூடாது என்று முடிவு செய்து பொதுவுடைமையை மலர்வித்து ஏழ்மையை ஒழித்து உலகில் உள்ள மனிதநேய மாண்பாளர்கள் உள்ளத்தில் எல்லாம் இன்ரு வாழும் மிகச்சிறந்த மனிதர் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்துள்ள முடிப்பு மிக அருமை.

  முகங்களைத் திருப்பிக் கொண்டவர் எல்லாம்
  முகவரி இழந்தவர் ஆனார்.
  சுகங்களே வாழ்க்கை என்றிருந்தவர்கள்
  சுழலினுட் சிக்கியே மாண்டார்.
  அகங்களைக் கடந்த காரலோ உலகின்
  எல்லைகள் அனைத்தையும் கடந்தும்
  யுகங்களைக் கடந்தும் வாழுவான் ; வானில்
  ஒளிவிடும் ஞாயிறு போலே.

  உண்மை தான் சூரியனுக்கு என்றும் மறைவில்லை. காரல் மார்க்சுக்கும் என்றும் மறைவில்லை. நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  .

 14. 14 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  அழகிய முதல் துளி !
  நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் !
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
  உயிர்எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம்,
  கருமண்டபம், திருச்சி-1. விலை : ரூ. 60
  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
  *****
  கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களின் முதல் நூல். புதுக்கவிதைகளின் தொகுப்பு நூல். உயிர்எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, புதியபார்வை, கணையாழி, புதுவிசை, தாமரை, மணல்வீடு போன்ற இதழ்களில் பிரசுரமான கவிதைகளை நூலாக்கி உள்ளார்கள். மறக்காமல் கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு நன்றியை நன்கு பதிவு செய்துள்ளார்.
  ‘அழகிய முதல் துளி’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுகள். சங்க காலத்தில் 30-க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள், என்பார்கள். அவ்வை என்ற பெயரில் 3-க்கு மேற்பட்டவர்கள் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பெண் கவிஞர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே உள்ளதே. அதிலும் நூலாக்கி உள்ள பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. பல பெண் கவிஞர்கள் திருமணத்திற்குப் பின் எழுதுவதையே நிறுத்தி விட்டேன் என்று சொல்பவர்களும்உண்டு. கவிஞர் அ. ரோஸ்லின் அவர்கள் புதுக்கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். நீலநிலா உள்பட பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.செம்பா 40 இலக்கிய விழாவிற்கு சிவகாசி வந்து இருந்த பொது இந்த நூலை வழங்கினார்கள் .ஹைக்கூ கவிதைகள் எழுத முயலுங்கள் வரும் என்று சொன்னேன் .எழுதுவதாகச் சொன்னார்கள் .
  முதல் நூலே முத்தாய்ப்பாக வந்துள்ளது. திரு. சமயவேல் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் இருண்மை கவிதைகள் புரியாத கவிதைகள் எழுதுபவர்கள் உண்டு. எழுதிய கவிஞரே வந்து விளக்கம் சொன்னால் தான் புரியும். ஆனால் அ. ரோஸ்லின் கவிதைகள் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது. பாராட்டுகள். முதல் முறை படித்து விட்டு இரண்டாம் முறை படித்தால் தெளிவாக புரிந்து விடுகின்றன. உருமாறும் வார்த்தைகள் என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள நூல். நூல் ஆசிரியரின் என்னுரையும் கவித்துவமாக உள்ளது.
  அழகிய முதல் துளி!
  குப்பை மேட்டுகளைக் கிளறிக் கொண்டிருக்கிறாள்
  காயத்திரி! துருவேறிய ஆணிகள்
  கரடுமுரடான
  கண்ணாடிகள்
  புளித்த காற்றினில் பரவிக் கிடக்கும்
  நோயின் வாசனை அமிழ்ந்த
  கருநிறக் கழிவுக்குள்
  இருந்தது
  அவள் ஆதிப் பயணத்தின்
  அழகிய முதல் துளி !
  இக்கவிதை படிக்கும் போது நம் மனக்கண்ணில் குப்பை கிளறும் சிறுமி கண்முன் வருகிறாள். இதனால் அவளுக்கு நோய்கள் பரவும் என்ற பல்வேறு தகவல்களை ஒரு கவிதை தந்து விடுகிறது. நூலில் மொத்தம் 76 புதுக்கவிதைகள் உள்ளன.
  கடந்து போன !
  கடந்து போன
  ஒவ்வொரு கணத்திலும்
  உன் நினைவு
  எழாமலில்லை
  எனினும் அவை
  எத்தடயமும்
  இன்றியே
  நகர்ந்து செல்கின்றன
  இந்த
  இரவைப் போல.
  ஊடலின் காரணமாக காதலர்கள் பிரிந்து விட்டாலும் அவரவர் பற்றிய நினைவுகள் மனதிற்குள் ஒவ்வொரு கணமும் வந்து போகும். மனதிற்குள் போராட்டம் நடக்கும் நினைவலைகள் அடிக்கும். ஆனால் அதன் சுவடுகள் வெளியே தெரிவதில்லை. அதற்கான உவமையாக இரவை எழுதி முடித்தது முத்தாய்ப்பு.
  இயற்கையின் மீது நேசமும், பாசமும் நூல் ஆசிரியர் கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களுக்கு நிரம்ப உள்ளது. மரம் வெட்டுவதற்கான கண்டனத்தை வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்.
  இரத்தத்தின் ஓசை!
  மலைச் சரிவுகளில்
  ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
  முறிக்கப்பட்ட
  மரங்களுக்கான
  மண் மூடிய
  இரத்தத்தின் ஓசை !
  வழக்கமாக எல்லோரும் எழுதும் விதமாக மானே தேனே என்ற வர்ணனைகள் தவிர்த்து புதிய சொல்லாடல்கள் கொண்டு மாறுபட்ட கோணத்தில் புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.
  உனக்களிக்க !
  உனக்களிக்க அநேகமுண்டு
  என் மணற்பரப்பில்
  புதிதென்று கிடைக்கும்
  இன்னும் எவரும்
  அகழாய்ந்திடாத
  அன்பின் சொல்லுயிர்
  சான்றுகளும்
  சில அழியா
  கல்வெட்டுகளும்.
  வெட்டவெளியில் நாம் நடந்து பார்த்தால் உணரும் உணர்வை நல்ல கவிதையாக்கி நூலாசிரியர் உணர்ந்த உணர்வை வாசகரையும் உணர வைத்து வெற்றி பெறுகின்றார்.
  எல்லை !
  விழி எட்டும் தொலைவு
  கடந்தாயிற்று
  கடக்க கடக்க
  விரிகிறது
  விழி எட்டும் தொலைவு.
  இயற்கையின் விரிந்த பரப்பையும் நம் சிறிய விழிகளின் பெரிய விசாலப் பார்வையையும் நன்கு உணர்த்தி உள்ளார்.
  மரங்களில் மிக அழகானது, ரம்மியமானது எல்லோருக்கும் பிடிக்கும் பேன்சாய் மரம் பற்றிய கவிதை மிக நன்று. இக்கவிதையைப் படித்து விட்டு பேன்சாய் மரம் பார்க்கும் போதெல்லாம் இக்கவிதை நினைவுக்கு வரும்.
  பிரயாசை !
  உனக்கான கனவுகளை
  நிறைக்கும் கற்பனைகளை
  ஆர்த்தெழும் பசுமைகளை
  சிலிர்க்கும் மலர்களை
  தேடலுக்கான வேர்களை
  உயிர்ச் சந்ததியை
  ஒரே தொட்டிக்குள்
  எப்படி வளர்த்தாய்
  என் பேன்சாய் மரமே.
  கவிதைகளில் காட்சிப்படுத்துதல் ஒரு யுத்தி, இக்கவிதை படிக்கும் போது கவிதையின் வரிகளின் மனக்கண்ணில் விரிந்து காட்சியாகின்றது பாருங்கள்.
  மறக்க இயலாதவைகளின்!
  மறக்க இயலாதவைகளின்
  பட்டியலில் இணைந்திருக்கிறது
  புதியதொன்று
  நீரலையின் மேற்புறத்தில்
  தத்தளிக்கிறது ஓர் இறகு.
  இப்படி நூல் முழுவதும் ரசனைக்குரிய கவிதைகள் உள்ளன. வாங்கிப் படித்துப் பாருங்கள். நூலாசிரியர் கவிஞர்
  அ. ரோஸ்லின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 15. 15 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  மழை எனும் பெண்!
  நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கித் தெரு,
  விருதுநகர்-626 001. விலை : ரூ. 50. பேச : 94880 01251
  *****
  நூலாசிரியர் கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களின் இரண்டாவது நூல். பதிப்பாளர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் பதிப்புரை நன்று. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. நூலாசிரியர் அவர்கள் தா. வாடிபட்டி என்ற கிராமத்தில் வசித்த போதும் அவரது சிந்தனை, இயற்கை நேசம் உலகளாவியதாக உள்ளன. பாராட்டுக்கள்.

  “என்னை உருவாக்கி, எனக்கான உலகை அறிமுகப்படுத்திய என் அம்மாவிற்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்”

  நூலை அம்மாவிற்கு காணிக்கையாக்கி தாய்அன்பை வெளிப்படுத்தி உள்ளார். பிறந்தோம், இறந்தோம் என்று இயந்திர வாழ்க்கை வாழாமல் இயற்கையை ரசித்து வாழ வேண்டும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.

  மனதால் தீண்டு!
  எதைப்பற்றியாவது பேசு

  ஊரை விட்டு வெளியே வா !
  அண்மை மலையுச்சி ஏறு

  தொடு வானத்தை மனதால் தீண்டு
  மயில் கூட்டங்களின் நயனம் ரசி

  குயிலிடம் சோக விண்ணப்பம் பெறு
  நதியின் துடிப்பினை கண்டுகளி

  எறும்பின் நேர்கோட்டுடன் சென்று பார்
  சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியிடம்

  சிறை கூட்டுப்புழு வாழ்வு பற்றிக்கொள். கவிதை படித்தவுடன் இவை எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

  மழை பற்றிய கவிதை நன்று. நூல் முழுவதும் பல்வேறு புதுக்கவிதைகள் இருந்த போதும் மிகவும் பிடித்த கவிதைகளை மட்டும் பதச்சோறாக மேற்கோள் காட்டி உள்ளேன்.

  மழை எனும் பெண்!

  மழை எனும் பெண்

  பொழிந்து கொண்டிருக்கிறாள்
  அவள் மனதீன்

  ஈரம் படிந்த பக்கங்கள்
  மழைத்துளிகளாகி

  மண்ணை நனைவிக்கின்றன
  மழைத்துளிகளின்

  ஒவ்வொரு முகத்திலும்
  வலியும், சோகமும்

  அப்பியிருக்கிறது.
  மழை முடிந்த

  அடித்த நாள்

  தெருவெங்கும் காலி குடங்கள்
  தன்னை நீரால் நிரப்பிக்கொள்ள

  தணியாத வெம்மையின் வேட்கையுடன் !

  மழைநீர் சேகரிப்பது பற்றி மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். இக்கவிதையின் தலைப்பையே நூலின் தலைப்பாகவும் வைத்துள்ளார். வீணாகும் ஒவ்வொரு துளிகளையும் சேமித்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சமே வராது என்பது உண்மை.

  சூரியனை இதுவரை பல கவிஞர்கள் ஆணாகவே பார்த்து உள்ளனர். இதுவும் ஒரு ஆணாதிக்க சிந்தனையே என்பதை உணர்ந்து முதல்முறையாக சூரியனை பெண்ணாகப் பார்த்துள்ளார், பாராட்டுக்கள்.

  சூரியப்பெண்!

  காலை விழி பிதுங்க

  பகல் பகடியாட
  வெயில் விரட்டிக் கொண்டோட

  மாலையின் அயற்சியில்
  கண் சிவக்க

  ஓய்வுக்காய் ஒதுங்கி

  வெளியேறுகிறாள்

  சூரியப் பெண்.

  நூலாசிரியர் கிராமத்தில் வசப்பதால் கிராமிய மொழில்யும் இயல்பாக சில கவிதைகள் வடித்துள்ளார்கள். மனதில் மருதாணி கவிதை கிராமிய மொழியின் நன்று.

  புதுக்கவிதையின் வடிவில் எழுதியுள்ள கவிதைகளை கொஞ்சம் செதுக்கினால் அழகிய ஹைக்கூ கவிதைகள் ஆகி விடும். நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களிடம் ஹைக்கூ கவிதைகள் எழுதிட வேண்டினேன். விரைவில் அவரிடமிருந்து ஹைக்கூ கவிதை நூலும் எதிர்பார்க்கலாம்.

  நினைத்தல்!

  உன்னை மறக்கத் துடிக்கும்

  வேளைகளில்
  முன்னை விட அதிகமாய் உன்னை

  நினைத்துக் கொண்டிருக்கிறேன் .

  மேலே உள்ள புதுக்கவிதையை இப்படி ஹைக்கூவாகவும் எழுதலாம்.

  உன்னை மறக்க நினைக்க

  கூடுதலாக துளிர்க்கிறது.
  உன் நினைவுகள்!

  உண்மை தான் காதலர்கள் ஊடல் காரணமாக மறந்துவிட வேண்டும் என்று நினைக்கும் போது மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவுகள் வந்து வாட்டி வதைக்கும் உணர்வை நன்கு புலப்படுத்தி உள்ளார். சங்க இலக்கியக் காட்சிகளை நினைவூட்டும் கவிதை நன்று.

  சூரியக் காதல் !
  எனதருமை

  சூரியக் காதலியே

  உன் சினத்தின் கதிர்கள்
  எனைச் சுட்டெரித்தாலும்

  என்றும்

  தான் உனைக் கவரும்

  ஓசோன் படலம் தான் !

  மீண்டும் சூரியனை காதலியாக பெண்ணாகப் பார்த்துள்ள பார்வை புதியது. பாராட்டுக்கள்.

  வனம் சென்றால் மனம் லேசாகும் என்பார்கள். கவலைகளை காணாமல் போக வைக்கும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. இயற்கைக்கு உண்டு.

  காடு எனும் தேவதை
  புவியின் நரம்புகள் காடாகும்
  வளம் தரும் மழையின் வழியாகும்
  பறவைகள், விலங்கின் அடைக்கலமே
  காடுகளைப் பேணிக் காத்தால் புவி வளம் பெறுமே !

  பிரிவு என்பது மிகவும் கொடுமையானது. அன்பான உறவு பிரிந்து விட்டால் அடையும் துன்பத்தை சொற்களால் சொல்லி விட முடியாது. பிரிவு பற்றிய கவிதை நன்று.

  பிரிவு !
  சூரியனென்றும் சந்திரனென்றும்

  மொழிந்திட்டார்
  வரவென்றும் செலவென்றும்

  வகுத்திட்டார்
  வல்லானது படைப்பின்

  உறவுண்டு பிரிவுமுண்டு
  இது உலக நீதி
  பிரிவின் மொழி கண்ணீர்

  பிரிவின் மொழி மௌனம் !

  பெற்றோர்களிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்பவர்கள் நட்பின் மேன்மை உணர்த்தும் கவிதை நட்பெனும் சிறப்பு.

  ஓர் இசையின் சுவாரஸ்யத்துடன்

  எழலாம்
  எந்நட்பும் ஓர் நாட்டியத்தின் நளினத்துடன்
  உதிக்கலாம்

  எந்த நட்பும்

  ஓர் பறவையின்
  ஒலி போல

  தோன்றலாம்

  எந்த நட்பும்
  ஒரு மலரின் ஸ்பரிசமாய

  வெளிப்படலாம்
  எந்த நட்பும் !

  இப்படி நூல் முழுவதும் ரசனைக்குரிய கவிதைகள் நிரம்ப உள்ளன. நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுவதற்கு வாழத்துக்கள்.

 16. 16 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  ********
  இருளை நீக்கும் இரவி
  பாவலர் இரா. இரவியாரின் ‘கவியமுதம்’ பக்குவப்பட்ட கவியமுதமே!
  அட்டை வனப்பா – தாள் வனப்பா – அச்சு வனப்பா – முன்னுரைகளின் வனப்பா – உள்ளுறையாம் செய்தி வனப்பா – எல்லாம் எல்லாம் அமுதக் கொள்ளை! ஈரடிக் கண்ணிகளில், கொள்ளை கொள்ளைச் செய்திகளைக் கொட்டுகிறார்.
  “முடியாது என்று முடங்காதே!
  முடியும் என்றே முயன்றிடு!”
  வீறுமிக்க நெப்போலியன் முழக்கம் இது!
  முன்னேறத் துடிப்பவர் எவர்க்கும், முன்னிற்க வேண்டிய தொடர் முன்னிற்கிறது என்பது நம்பிக்கைச் சிறகுகளின் மேல்மேல் பறப்புத் தூண்டல் அல்லவா!
  “தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும்!
  நன்னம்பிக்கை கடலளவு இருக்கட்டும்!
  - வெற்றிக்கு இவை போதுமே!
  “கனியாக நல்லதமிழ் எழுத்துக்கள் இருக்கையில்
  காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு?”
  மொழிக்கலப்பின் மூலமுழக்கம் இது! ஊருக்கும் உலகுக்கும் மட்டுமன்று! ஆசிரியருக்கும் தான்.
  தமிழின் பெருமை – அதனைக் காக்கும் கடமை. திருக்குறள் விழுப்பம் – தக்கோர் அறிமுகம் – காதல் – புதுக்கவிதை எல்லாம் தொடர்கின்றன.
  “மனக்கவலை நீக்கும் மருந்து” திரு.வி.க. முடிவு!
  “விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் “நல்ல எள்ளல்!”
  எழில்மிக்க படங்கள் ‘என்னைப் பார்’ என்கின்றன!
  இரவு கப்பிய இருளை நீக்குவது ‘இரவி’.
  இரவியின் ஒளி மிக்க படைப்பு இது.
  இன்ப அன்புடன்
  இரா. இளங்குமரன்

 17. 17 On October 11th, 2015, கவிஞர் இரா .இரவி said:

  வள்ளுவர் வழியில் வாழ்வு !

  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !

  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.

  ரூ. 40.

  *****

  நூல் ஆசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள். மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார். பாராட்டுகள்.

  “திருக்குறள் ஓர் ஆழ்கடல். அள்ளக் குறையாத அமிழ்தம். தெள்ளத் தெளிந்த நீரோடை. இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை. திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.”

  நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.

  [size=13] அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
  இருக்கா இயன்றது அறம்.

  திருக்குறள் 35

  [/size]
  இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.

  அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது. அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.

  சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள். அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.

  அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,
  [size]

  அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
  போன்றுங்கால் பொன்றாத் துணை
  திருக்குறள் 30

  [/size]
  இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும். ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.

  திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,
  [size]

  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது.
  திருக்குறள் 45

  [/size]
  ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.

  இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.

  அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.
  [size]

  அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என்னுடைய ரேனும் இலர்
  திருக்குறள் 430

  [/size]
  அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
  வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.

  இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ! 1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243.

  திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.

  திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.

  30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார். பதச் சோறாக ஒன்று.

  பொறாமை பொல்லாதது!

  தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.
  [size]

  அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
  தீயுழி உய்த்து விடும்
  திருக்குறள் 168

  [/size]
  பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.

  ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.

  கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று. இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும். படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.

மறுமொழி இடுக