Jul 24
புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை
பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை |
- நூலின் பெயர் : ஹைக்கூ ஆற்றுப்படை(ஹைக்கூ விமர்சனக் கட்டுரை)
- நூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி
- மதிப்புரையாளர் : கவிஞர் மஞ்சுளா
மணலை எண்ண முடியாது. அதுபோல இன்று கவிஞர்களும் பெருகியிருப்பது கவிதைக்குப் பெருமையா? கவிஞனுக்குப் பெருமையா? கவிஞர்கள்தான் இன்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹைக்கூ கவிஞர்கள். ஏனெனில் மூன்று வரிகளில் மொழியை நம்மிடையே விட்டு விட்டு வாசகனை முன்னூறு நாளும் சிந்தனையாளானாக்குவதுதானே ஹைக்கூவின் வேலை! கண் பார்த்தவையெல்லாம் கவிதையாகப் புரண்டு வருகிறது. ஆனால் கவிஞர்கள் விதைகளை தேர்வு செய்கிறார்கள்.
கவிதையில் ஒரு விதையை வைத்து விட்டால் பின்னால் வருவது விருட்சம்தான்! கவிதைகளை படிக்கும் போது வேரிலிருக்கும் நீர் கிளையின் நுனிவரை செல்வதுபோல வாசகன் செல்லுமிடமெல்லாம் கவிதையும் செல்லுமேயானால் அதுவே கவிதையின் வெற்றியும் ஆகும். இந்த வெற்றியை நிர்ணயிக்கும் தகுதி வெறும் பேனா முனைக்கு இருக்குமா? கவிஞர்களின் உள்ளார்ந்த உணர்வினாலும் உலக அனுபவங்களாலுமே இத்தகுதி பெறப்படுகிறது.
உண்மை உணர்வுகளாலும் அனுபவங்களாலும் எண்ணற்ற துளிப்பாக்களை படைத்து துளி மையில் தீட்டிய கோலங்களை எல்லாம் இணைத்து நூலாசிரியர் தனது துளி மையைக் கொண்டு தோரணம் கட்டியருப்பதுதான் இந்த ஹைக்கூ ஆற்றுப்படை.
பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரையில் இன்னும் அழகாக மின்னுகிறது இந்த ஆற்றுப்படை. நூலாசிரியர் அவர்கள் ஹைக்கூக்களை நேசிப்பது போலவே ஹைக்கூ கவிஞர்களையும் நேசித்திருக்கிறார்.
கவிஞன் கவிதையை மட்டும் படித்தால் போதாது. சக கவிஞனையும் படிக்க வேண்டும் என்று படித்துப் படித்து நிருபித்துவிட்டதாகவே இந்த தொகுப்பை முழுவதும் படித்தபோது எனக்குத் தெரிந்தது.
கவிஞனுக்குள் கவிதை நிகழும் தருணங்கள் மென்மையானவை. பலநேரம் வன்மையானவை. தென்றலாக வருடவும், அம்பாகப் பாயவும் கவிதைக்கும் தெரியும். காலமே கவிதை தருகிறது. கவிஞனின் காலம் எதுவோ அதுவே கவிதையின் காலம் என்று அறிந்து கொள்ளலாம். சிறிய படைப்பு காலம் தாண்டியும் பேசப்படுகிறது. இதுவே ஹைக்கூவின் சிறப்பு.
இந்த இயந்திரமயமான உலகில் எதிலும் வேகம் வேகம் என்று ஓடிக் கொண்டிருக்கின்ற மக்களிடையே இன்று கவிதையை நிலைபெறச் செய்ய முடியும்? என்ற கேள்வியும் நம் உள்ளத்தில் எழாமல் இல்லை. ஆனால், கவிதை என்றால் ஹைக்கூதான்! என்று கவிதையிலும் ஒரு வேகத்தைக் கொடுத்து கழுகுபோல் பறந்து திரியும் மனிதர்களை பட்டாம் பூச்சிகளாக மாற்றி சற்றே மலர்கள் மீது அமர்ந்து ஓய்பெடுக்க அழைத்து வருகிறார்கள் இந்த ஹைக்கூ கவிஞர்கள். இந்த இலக்கிய மலர்கள் இனிய நறுமணத்தை வாசிப்பவர்களுக்கு வழங்குகிறது.
நம் இந்தியத் திருநாட்டில் வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே குமரி வரையிலும், கிழக்கிலும் மேற்கிலும் ஏற்பட்ட எண்ணற்ற பிரிவினைகள் சாதிகளாலும் மதங்களாலும் மட்டும் ஏற்பட்டதல்ல. இவற்றையெல்லாம் தன் கையில் வைத்துக் கொண்ட அரசியல் அதிகார வர்க்கங்கள், அரசியல் அமைப்பை தன் பிடியில் வைத்திருக்கும் சமயத்தலைவர்கள், மதத் தலைவர்கள், இன்னபிற அதிகார அமைப்புகள் என இவையனைத்தும் இணைந்தேதான் நம்நாட்டு மக்களை சீர்குலைய வைத்துவிட்டன. இதை அறியாமல் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே மடிகின்றனர். இயற்கை அழிப்பு, பொது நலம் குறைந்து சுயநலமே பெரிதென்று வாழ முற்படுதல், தாய்மொழியை மறந்து அன்னியமொழியை நேசித்தல், உழைப்பாளர் பிரச்சினைகள், சுரண்டல், மணல் கொள்ளை, பெண்ணுரிமை, பெண்சிசுக் கொலை, குழந்தைத் தொழிலாளர் பிரச்சைனைகள் என் அனைத்துப் பிரச்சினைகளுமே ஹைக்கூ கவிஞர்களுக்குப் பாடுபொருளாக உள்ளன. இந்த நூலை ஒருமுறை படித்தால் போதும் என்ன வளம் இல்லை இந்த
ஹைக்கூவில்? என்று கவிஞரே கூறுவது போல,
சிறகுகள் சிறியவைதான்சிந்தனையோ பெரிதுஹைக்கூ
என்ற இந்தச் சீரிய சிந்தனை எனக்குள்ளும் தோன்றியது.
ஹைக்கூ படைப்பாக்கத்திலிருந்து தன் சிந்தனையை விரிவுபடுத்தி ஹைக்கூ பற்றிய தனது தெளிவான விமர்சனங்களையும் துணிவோடு நூலாக்கம் செய்துள்ளார் நூலாசிரியர்.
பதிப்பு
: Sunday, July 24th, 2011 at 2:08 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை.
மறுமொழி செய்தியோடை : RSS 2.0.
உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.